Published:Updated:

`விவசாயிகளை முன்னேற்ற முதல்ல இதை செய்யுங்க!' - அரசுக்கு ஐ.டி இளைஞர்களின் அசத்தல் ஐடியா

திருச்செல்வம்
திருச்செல்வம்

``எத்தனை கோடிகள் செலவழித்தாலும் தற்போதைய விவசாய அமைப்பு மற்றும் திட்டங்களால் விவசாயப் பிரச்னையைத் தீர்க்க முடியாது. இதுகுறித்து நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் விவாதம் செய்யத் தயார்" என்று சவால் விடுத்திருக்கின்றனர் இந்த இளைஞர்கள்.

``38 லட்சம் விவசாயிகளுக்கு தமிழக பா.ஜ.க சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு பா.ஜ.க என்ன செய்திருக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது" என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஒரு பரபரப்பை கிளப்பியிருக்கிறார்.

இந்தநிலையில், ``2022-ல் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? என்பதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். எத்தனை கோடிகள் செலவழித்தாலும் தற்போதைய விவசாய அமைப்பு மற்றும் திட்டங்களால் விவசாய பிரச்னையைத் தீர்க்க முடியாது. இதுகுறித்து நாங்கள் யாரிடம் வேண்டுமானாலும் விவாதம் செய்யத் தயார்" என்று சவால் விடுத்திருக்கிறது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் குழு.

Farmers
Farmers

`தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விவசாய பிரச்னை குறித்து சவால்விடுக்கின்றனரா... யார் இவர்கள்?' என்று விசாரித்தோம்... இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான காரைக்குடி அருகில் உள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் நம்மிடம் பேசினார்.

``ஐ.டி துறையைச் சேர்ந்த நான், என் நண்பர்கள் உத்தமகுமார், ஜெயக்குமார் உள்ளிட்ட ஐந்துபேர் சேர்ந்து கடந்த 19 வருடங்களாக விவசாயத்தின் பிரச்னைகளைத் தொழில்நுட்பத்தின் வாயிலாகத் தீர்ப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

நாங்க ஐந்து பேரும் வெவ்வேறு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்த்து வந்தநிலையில், 2000-ம் ஆண்டு பஸ் டிக்கெட் ரிசர்வேஷனை ஆன்லைனில் கொண்டு வந்து அதை பிசினஸாக மாற்றுவதற்கான முயற்சியில ஈடுபட்டிருந்தோம். அந்த நேரத்துல ஒரு ஆங்கில நாளிதழ்ல படிச்ச ஒரு செய்திதான் என்னுடைய பயணத்தை மாற்றியமைச்சது. மதனப்பள்ளி கிராமத்தில் தக்காளியை, அதிகப்படியான விளைச்சல் இருந்தும் உரிய விலை கிடைக்காததால் ரோட்டில் கொட்டுகின்றனர் என்பதுதான் அந்தச் செய்தி.

ஏன் இந்த அவலம்... முதலீடு உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக கஷ்டப்பட்டு விளைவித்த உணவுப்பொருள் எல்லாம் வீணாவது ஏன்னு யோசிச்சப்பதான் விவசாயத்தின் கட்டமைப்பில் உள்ள ஓட்டைகள் எனக்கு புலப்பட ஆரம்பிச்சது. அதற்கு தொழில்நுட்பத்தின் வாயிலாக ஒரு தீர்வு கண்டுபிடிக்கணும்னு முடிவெடுத்தேன். மற்ற நண்பர்கள் ஐ.டி வேலையை தொடர்ந்துகிட்டே எனக்கு உதவிகள் செய்ய, நான் முழுவதுமாக இதுதொடர்பான பணிகளில் மூழ்கினேன்.

எவ்வளவு தேவையோ அந்த அளவு பயிர்செய்தால் போதும். விலைபொருள்கள் வீணாவதையும் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டமடைவதையும் தடுத்துவிடலாம். இது எல்லோருக்கும் தெரிந்த எளிய விஷயம்தான். ஆனால், ஏன் இதை சாத்தியப்படுத்த முடியவில்லை? நமக்கு எவ்வளவு தேவை... எவ்வளவு விளைவிக்கிறோம் என்பது குறித்த புள்ளி விபரங்கள் நம்மிடம் முன்கூட்டியே இல்லாததுதான் இதற்கு முக்கியமான காரணம். ஒரு ஒன்றியத்தில் சுமார் 40 பஞ்சாயத்துகள் இருக்கின்றன.

ஆந்திராவில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோது...
ஆந்திராவில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டபோது...

ஒரு பஞ்சாயத்தில் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருப்பார்கள். சராசரியாக எட்டு கிராமங்களுக்கு ஒரு வேளாண் அலுவலர் என்கிற நிலையில்தான் தற்போதைய விவசாய அமைப்பு இயங்குகிறது. ஒருவர் எப்படி அத்தனை விவசாயிகளையும் ஒருங்கிணைப்பார்? சரியான வழிகாட்டுதல் இல்லாததால்தான் விவசாயிகள் பிரச்னையை சந்திக்கின்றனர். அடிப்படை கட்டமைப்பை மாற்றாமல் விவசாயக் கடனும் மானியமும் மட்டுமே வழங்கிக்கொண்டிருந்தால் விவசாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும்?"

``விவசாயம் என்பது மிகவும் சவாலானது. மழை பெய்ததும் விவசாயிகள் மொத்தமாக விவசாயம் செய்யத் தொடங்குகின்றனர். குறுகிய காலத்தில் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான முதலீடு, இடுபொருள்கள், ஆலோசனைகள், வேலை ஆள்கள்/ இயந்திரங்கள் என அனைத்தும் தேவைப்படுகின்றன. இந்தத் தேவைகளை ஒன்றிய அளவில் இயங்கும் தற்போதைய கட்டமைப்பால் உறுதிசெய்து வழிகாட்ட முடியவில்லை. ஆகையால், கிராம அளவில் கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விவசாய மேலாண்மை மையம் அமைக்க வேண்டும். அந்த மையத்தில் இருவர் பணி அமர்த்தப்பட வேண்டும்.

ஒரு கம்ப்யூட்டர், ஒரு புரொஜக்டர் இணைய வசதி ஆகியவை போதும். இந்த மையத்துக்கு புதிதாகக் கட்டடங்கள்கூடத் தேவையில்லை. ஏற்கெனவே இருக்கும் அரசு கட்டடங்களையே பயன்படுத்திக்கொள்ளலாம். உபகரணங்கள் மட்டும் வாங்குவதற்கு அதிகபட்சம் ஒரு மையத்துக்கு இரண்டரை லட்சம் ரூபாய்தான் செல்வாகும். அதாவது, விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6,000 ரூபாய் வழங்குவதற்கு ஆகும் தொகையைவிட குறைவான தொகையிலேயே இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் விவசாய மேலாண்மை இந்த மையத்தை நிறுவிவிடலாம்.''

பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்
பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதம்

``சரி இந்த மையம் என்ன செய்யும்?''

``மையத்தில் பணியமர்த்தப்படும் இருவரது முதல் வேலை அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்ன பயிரினை பயிர் செய்யப்போகின்றனர் என்று இதற்கென உருவாக்கப்படும் பிரத்யேக வலைதளத்தில் பதிவிடுவதுதான். அப்படி பதிவிடும்போது ஒவ்வொரு பகுதியிலும் என்ன பயிர் எந்த அளவு பயிரிடப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும். நமக்கு தேவையான அளவைத் தொட்டுவிட்ட பிறகு, மற்ற விவசாயிகள் அதே பயிரைத் தேர்ந்தெடுக்காமல் மாற்று பயிர்களைப் பயிரிட பரிந்துரை செய்யலாம். தேவையான அளவை பூர்த்தி செய்யாத பயிர்களை அதிக அளவில் விளைவிக்க பரிந்துரை செய்யலாம்.

இந்தத் தகவல் அனைத்தும் செல்போன் மூலமாக ஆப் மூலமாக பார்ப்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாத விஷயம். இணைய வசதி, விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த புரிதலின்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தடங்கலாக இருக்கும். எனவேதான் இதற்கென பிரத்யேக வலைதளத்தை உருவாக்கி அதில் தகவல்கள் பதிவேற்ற வேண்டும் என்றும் வேளாண் மேலாண்மை மையத்துக்கு விவசாயிகளை வரவழைத்து புரொஜெக்டர் மூலமாக சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒளிபரப்பி அவர்களுக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறோம்.

* பயிரிடப்படும் பயிர்களின் ஒவ்வொரு நிலையையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அப்டேட் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு கிராமத்தில் ஏதாவதொரு பயிர் நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறது என்றால் அதுகுறித்த தகவல்களை மற்ற விவசாயிகளுக்கு தெரிவித்து அதை எதிர்கொள்ள அவர்களைத் தயார்படுத்தலாம். இதன்மூலம் விவசாயிகளின் உற்பத்தி இழப்பைத் தடுக்க முடியும்.

* அடுத்ததாக இடுபொருள். ஒரு கிராமத்தில் பயிரிடப்படும் பயிர்களை முன்கூட்டியே தெரிந்துவிடுவதுபோல அதற்குத் தேவையான இடுபொருள்களையும் அந்த வலைதளத்தில் பதிவு செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது குறித்த நேரத்தில் இடுபொருள்கள் விவசாயிகளையே சென்றடைய வழிவகை ஏற்படுத்தலாம். பயன்படுத்தும் இடுபொருள்களுக்கு விவசாயிகள் தரும் ரேட்டிங் அடிப்படையில் தரமான இடுபொருள்களை விவசாயிகள் கண்டடைய முடியும்.

* அடுத்ததுதான் முக்கியமானது. விளைவித்தாகிவிட்டது... விளைபொருள்களை எங்கே விற்பது என்பதுதான் விவசாயிகளின் பெரிய சிக்கல். விளைவிப்பதற்கு முன்பே அதுகுறித்த தகவல்களை விவசாயிகள் பதிவிட்டுவிடுவதால் கொள்முதல் செய்பவர்கள் முன்கூட்டியே இணையதளத்தில் புக் செய்துகொள்ளலாம். சிறுகுறு விவசாயிகள் அதிகம் உள்ள நாட்டில் அவர்கள் விளைவிக்கும் சிறிய அளவிலான உற்பத்தி பொருள்களை ஒருங்கிணைத்து இடைத்தரகர்களைத் தவிர்த்து நியாயமான விலைக்கு விற்பனை செய்ய இந்தத் திட்டம் வழிவகை செய்யும்.

* இந்த மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு யார் சம்பளம் கொடுப்பது? அதை நிர்வகிக்க பெரிய தொகை செலவாகுமே என்ற கேள்வி எழலாம். விவசாயிகள் நல்ல லாபம் பெற ஆரம்பித்துவிட்டால் அந்த மையத்தை நிர்வகிப்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. குறிப்பிட்ட சதவிகிதம் சேவைக் கட்டணமாக வாங்கி அதன் மூலம் அரசு அந்த மையத்தை இயக்கலாம். அல்லது தனியார் நிர்வகிக்கும் வகையில் ஏற்பாடு செய்யலாம். அடிப்படை நோக்கம் தகவல்களைத் திரட்டுவதுதான். தகவல்கள் விரல்நுனியில் இருந்தால் நாம் நினைத்துப்பார்க்க முடியாத மாற்றங்களைக் கொண்டுவரலாம்."

``நீங்கள் சொல்வதைப் பார்த்தால் சினிமாவில் வருவதைப் போல இருக்கிறது. இது நடைமுறையில் எப்படி சாத்தியம்?"

ஆந்திராவில் நடைமுறைப்படுத்
தப்பட்ட மாதிரி
ஆந்திராவில் நடைமுறைப்படுத் தப்பட்ட மாதிரி

``நாங்கள் இதை ஆந்திராவில் நிரூபித்துக் காண்பித்துள்ளோம். 2001-ம் வருடம் எங்கள் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினோம். வேளாண்மைத்துறை செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர் இருவரும் எங்களை அழைத்து இதுகுறித்து கலந்தாய்வு செய்தனர். இந்தத் திட்டத்தை பரிசோதனை அடிப்படையில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையைத் தயாரிக்கச் சொன்னார்கள். அதற்கான பணிகளை நாங்கள் ஆரம்பித்திருந்த நிலையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கில் சிறைக்குச் சென்றார். அந்த அசாதாரண சூழலால் அந்தத் திட்டத்தை அப்படியே கைவிட்டுவிட்டார்கள்.

அடுத்து இதை எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் தவித்தபோது ஆந்திராவில் தொழில்நுட்பத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று நண்பர்கள் சொன்னார்கள். 2004-ல் ஆந்திராவில் அப்போது ஒய்.எஸ்.ஆர் தலைமையிலான ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அவர்களிடம் எங்களது திட்டத்தைச் சொன்னதும் வியந்து போனார்கள். ஒய்.எஸ்.ஆரின் சொந்த தொகுதியில் உள்ள புலிவேந்துலா ஒன்றியத்தில் 30 கிராமங்களில் இரண்டரை ஆண்டுக்காலம் `தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த ஒட்டுமொத்த கிராம மேம்பாடு' என்ற அடிப்படையில் எங்களது இந்தத் திட்டத்தை செயல்படுத்திக் காண்பித்தோம்.

இந்தத் திட்டம் இந்திய விவசாயத்துறையின் திருப்புமுனையாக இருக்கும் என்று 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட உயர்நிலைக் குழு பாராட்டியது. நாங்கள் ஆர்வத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்த சூழலில், ஒய்.எஸ்.ஆர் மரணம் நிகழ்ந்தது. பிறகு, ஆந்திர அரசியலில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களால் எங்கள் திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது."

``சரி, இப்போது உங்களது கோரிக்கை என்ன?"

``2014-ல் மோடி இந்தியாவின் பிரதமரானபோது விவசாயத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. டெல்லியில் நடந்த விவசாயப் போராட்டத்தில் கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார், நாடே அதிர்ந்தது. அப்போது பேசிய பிரதமர் மோடி, `விவசாயப் பிரச்னை மிகவும் சிக்கலாகிவிட்டது. அதற்கான தீர்வை முழுமனதுடன் வரவேற்கிறேன்' என்றார். நாங்கள் மிகவும் உற்சாகமாகி எங்களுடைய திட்டத்தை பிரதமர் அலுவலகத்துக்கு நாங்கள் தனிப்பட்ட முறையிலும் அனுப்பினோம். தவிர, பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மூலமாகவும் சிவகங்கை அ.தி.மு.க எம்பி செந்தில்நாதன் மூலமாகவும் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தோம்.

நாங்கள் தனிப்பட்ட முறையில் அனுப்பிய மெயிலுக்கு எந்த பதிலும் வரவில்லை. ஹெச்.ராஜா சார் மூலமாக அனுப்பப்பட்ட கடித்துக்கு, `இந்தத் திட்டத்தை பிரதமர் அலுவலகத்தில் வெகுவாகப் பாராட்டினார்கள். விரைவில் இது அரசு திட்டமாக வெளிவரும்' என்று ஹெச்.ராஜா தரப்பிலிருந்து பதில் கிடைத்தது. நாங்களும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் விவசாயத்தில் மாற்றம் நடக்கும் என்று ஆர்வத்துடன் காத்திருந்தோம்.

PM Narendra Modi
PM Narendra Modi
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021: Live Updates: ``நம்மாழ்வார் மையம், தமிழ்வழியில் வேளாண் படிப்பு!"

இந்த நிலையில்தான் `டிஜிட்டல் இந்தியா' திட்டம் கொண்டு வந்தார்கள். அதில் இந்தத் திட்டம் இடம்பெறும் என்று நினைத்தோம். ஆனால், இடம்பெறவில்லை. எல்லாமே தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் எளிமையாக்கப்படும்போது, விவசாயம் மட்டும் ஏன் சிக்கலான நடைமுறையிலேயே இருக்க வேண்டும் என்ற கோபம் எங்களுக்கு இருக்கிறது. இந்த நிலையில்தான் மத்திய அரசு தமிழக விவசாயிகளுக்கு என்ன செய்தது என்று பா.ஜ.க சார்பாக கடிதம் அனுப்பப்படுவதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அடிப்படையை சரிசெய்யாமல் எது செய்தாலும் பலன் இல்லை என்பதை இந்த அரசுக்கு நாங்கள் தெரிவிக்க வேண்டும். அதனால்தான் எங்களுடன் விவாதிக்க பி.ஜே.பி-க்கு சவால் விடுக்கிறோம். அவர்கள் விவாதத்துக்கு தயார் எனில் விவசாயத்தில் உள்ள பிரச்னைகளையும் அதற்கு எங்களது தீர்வுகளையும் முன்வைப்போம்" என்கிறார்.

இவர்கள் சொல்வது எந்தளவுக்குச் சாத்தியம்... இதனால் மாற்றங்கள் நடக்குமா? வேளாண் விற்பனைத்துறையில் விற்பனைக்கூடங்களின் கண்காணிப்பாளராக இருந்தவரும் தற்போது `நமது நெல்லைக் காப்போம்' இயக்கத்தின் மேலாண்மை அறங்காவலராக இருப்பவருமான பொன்னம்பலத்திடம் இதுகுறித்துக் கேட்டோம், ``1980-களில் விவசாயத்துறை அமைச்சராக காளிமுத்து இருந்தபோது `டிரெய்னிங் & விசிட்' என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உதவி வேளாண்மை அலுவலர்கள் அவர்கள் எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று அவர்கள் கற்றுள்ள தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிகளை விவசாயிகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதுதான் திட்டத்தின் அடிப்படை.

அதன்படி ஒவ்வொரு உதவி வேளாண்மை அலுவலரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்துக்குச் சென்று பயிற்சி வழங்குவார்கள். உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் வேளாண்மை அலுவலர் இலவசமாக உயர்கல்விகூட படிக்க முடியும் என்ற வாய்ப்பு இருந்தது. அதாவது பி.எஸ்ஸி படித்திருக்கும் ஒரு அலுவலர் இந்தத் திட்டத்தின் வாயிலாக எம்.எஸ்ஸி படிக்கலாம். அலுவலர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு அதை விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதன் மூலம் விவசாயம் மேம்படும் என்பதால் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். சில வருடங்கள் மட்டுமே அது செயல்படுத்தப்பட்டது.

அண்ணாமலை, முருகன்
அண்ணாமலை, முருகன்
`100-வது முறைகூட கரும்பை அறுவடை செய்வேன்' - சவால் விடும் விவசாயி!

அடுத்து விற்பனைக்கு வருவோம். விவசாயத்தில் ஒரு பயிரை விளைவிப்பதைவிட அதை விற்பதுதான் பெரும் சவாலாக இருக்கிறது. இப்போதுகூட தக்காளி அதிக விளைச்சல் காரணமாக விற்பனை செய்ய முடியாமல் மாடுகளுக்குப் போடுகிறார்கள் என்ற செய்தியைப் பார்க்க முடிகிறது. வருடா வருடம் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. ஆனால், இதை ஏன் தடுக்க முடியவில்லை என்று கேட்டால் உற்பத்தியை ஒழுங்கு முறைப்படுத்தாதுதான். மார்க்கெட் சர்வே என்ற பணி இருக்கிறது. ஒரு விளைபொருள் உற்பத்தி செய்யப்பட்டதிலிருந்து நுகர்வோர் கைகளுக்குப் போய் சேரும்வரை யார் யார் கைகளுக்கெல்லாம் போகிறது என்ற சங்கிலியை ஆய்வு செய்வதுதான் அந்தப் பணியின் நோக்கம். 1970-களில் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள். இத்தனைக்கும் அப்போது தமிழ்நாடளவில் துணை இயக்குநர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியும் அவருக்குக் கீழ் இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு உதவி இயக்குநரும்தான் இருந்தார்கள்.

ஆனால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு துணை இயக்குநர் அவருக்குக் கீழ் உதவி இயக்குநர்கள் என்று ஏகப்பட்ட பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மார்க்கெட் சர்வே பணி முறையாக நடைபெறவே இல்லை. அப்படி ஒரு பணி இருக்கிறதெனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இது டேட்டாவின் காலம். விவசாயப் பிரச்னைகளை தீர்க்கவும் டேட்டா மிகவும் முக்கியம். உடனடியாகத் தரவுகளை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த இளைஞர்கள் சொல்வதுபோன்ற விஷயங்களை இதற்குமுன் நாம் மேனுவலாக ஓரளவுக்குச் செய்திருக்கிறோம்.

டிஜிட்டலாக சாஃப்ட்வேர் மூலம் செய்யும்போது அது நிச்சயம் விவசாயத்துக்கு பலன் அளிக்கும். இதற்காக புதிதாக ஆள்கள்கூட நியமிக்கத் தேவை இல்லை. கட்டமைப்புகளும் தேவை இல்லை. எல்லாம் நம்மிடம் இருக்கிறது. இந்த நடைமுறைகளை டிஜிட்டல் முறையில் வேகப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தாலே போதுமானது, நிச்சயம் பலன் கிடைக்கும். ஆகையால், இந்த இளைஞர்கள் சொல்லும் திட்டத்தை அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு