லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

வாய்ப்பு கிடைத்தால் தைரியமா சிக்ஸர் அடிக்கணும்! - அர்ச்சனா கல்பாத்தி

அர்ச்சனா கல்பாத்தி
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா கல்பாத்தி

களம் புதிது

“சினிமாத்துறையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்ததுதான். இப்போ அது ஆண், பெண், திருநங்கைகள்னு எல்லோருக்கும் பொதுவானதா மாறிக்கிட்டு இருக்கு. ஆனாலும், இன்னும் மாற்றம் தேவை” என உற்சாகமாகத் தொடங்குகிறார், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி. `பிகில்' - தீபாவளி ரிலீஸ் என்கிற டென்ஷன் ஒருபக்கம் இருந்தாலும், அதையெல்லாம் காட்டிக் கொள்ளாமல் புன்னகைத்தபடியே பேசுகிறார் அர்ச்சனா.

“நான் பணக்கார வீட்ல பிறக்கலை. மிடில் கிளாஸ் குடும்பம்தான் எங்களுடையது. இந்தியாவுக்கு சாஃப்ட்வேர் வந்த நேரம். அப்பாவும் ரெண்டு சித்தப்பாக்களும் படிச்சு முடிச்சுட்டு வீட்லேயே சாஃப்ட்வேர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட் ஆரம்பிச்சாங்க. வீடு, ஆபீஸ் எல்லாமே ஒரே இடம்தான். ரெண்டு பேரும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்ப்பாங்க. அவ்ளோ உழைப்பு.

24 மணி நேரமும் சாஃப்ட்வேர் லேப்ல வேலை நடந்துகிட்டே இருக்கும். யார் வீட்லேயும் கம்ப்யூட்டர் இல்லாத காலம் அது. அதனால வேலைக்குப் போயிட்டு வர்றவங்க பார்ட் டைம்ல எங்க இன்ஸ்டிட்யூட்ல கத்துக்கிட்டு இருப்பாங்க. அப்பா, சித்தப்பான்னு மாத்தி மாத்தி யாராவது ஷிஃப்ட்ல இருப்பாங்க. நான் வளர்ந்ததே அந்த மாதிரியான சூழல்தான். பிறகு, அதை விட்டுட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பிச்சோம். இப்படி பிசினஸ் ஃபேமிலியா இயங்கிட்டிருந்த நாங்க, ‘திருட்டுப்பயலே’ படம் தயாரிச்சது மூலமா சினிமாவுக்குள் நுழைஞ்சோம்” என்று ஏஜிஎஸ் உருவான கதையைப் பகிர்கிறார் அர்ச்சனா.

‘`கம்ப்யூட்டர் வாசனையோட வளர்ந்ததால் எனக்கும் கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர்னு டெக்னிக்கல் விஷயங்கள்ல ஆர்வம் அதிகம். அண்ணா யுனிவர்சிட்டி கிண்டி கேம்பஸ்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன்.

சின்ன வயசுல இருந்து நிறைய படங்கள் பார்ப்பேன். குறிப்பா, விஜய் சாருடைய அதிதீவிர ரசிகை. காலேஜ் டைம்ல கிளாஸை கட் அடிச்சுட்டு ‘கில்லி’ படத்துக்குப் போய் ஒருநாள் முழுக்க `மாயாஜால்'ல இருந்து, அந்தப் படத்தின் அத்தனை ஷோக்களையும் பார்த்துட்டுதான் வீடு திரும்பினேன்!

அப்பா ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தப்போதான், `ஏஜிஎஸ் சினிமாஸ்' தியேட்டர் கட்டினோம். அப்போ, தியேட்டர் பிசினஸைப் பார்த்துக்கச்சொல்லி என்கிட்ட கொடுத்தார். இப்படித்தான் நான் சினிமாவுக்குள் வந்தேன்’’ என்கிறவர் மேலும் தொடர்கிறார்...

“ஆரம்பத்துல இந்தத் துறை ரொம்பப் புதுசா இருந்தது. ஒவ்வொரு விஷயத்துக்குள் நுழையறப்பவும் அதைப் பத்தி அதிகம் தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது. எந்த பிசினஸா இருந்தாலும் அதுக்கு ஒரு அனாலிஸிஸ் தேவைப்படும்தானே? அதனால, சினிமாவைக் கத்துக்கவும் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன். சினிமாத் துறையில நிறைய பப்ளிசிட்டி கிடைக்கும். அதேநேரம், நிறைய பிரச்னைகளையும் சந்திக்கவேண்டியிருக்கும். ஆனா, குடும்பத்தையும் வேலையையும் ஒரே நேரத்துல சமாளிக்க முடியலையேங்கிற எண்ணம் எனக்கு ஒருநாள்கூட வந்ததேயில்லை. பிடிச்ச வேலையை ரசிச்சு செய்றதுனால இது எனக்கு அழுத்தமா தெரியலை. என் வேலையை நான் சரியா செய்றதுக்கு என் கணவர், என் மகன் எல்லோருமே உறுதுணையா இருக்காங்க. இப்போ சினிமாத் துறையில் அதிக கவனம் செலுத்தறதால நான் விரும்பிப் படிச்ச கம்ப்யூட்டர் சயின்ஸை மட்டும் ரொம்பவே மிஸ் பண்றேன். மத்தபடி ஆல் இஸ் வெல்... சந்தோஷமா இருக்கேன்!

இந்தளவுக்கு நான் வளர்ந்திருக்கேன்னா அதுக்கான முழு கிரெடிட்டும் என் அப்பா அகோரத்துக்குத்தான். அவர் என்னை பொண்ணுன்னுப் பிரிச்சு பார்த்ததே இல்லை. அப்பாவும் ரெண்டு சித்தப்பாக்களும் (கணேஷ், சுரேஷ்) என்னை மட்டுமல்ல... யாரையுமே வித்தியாசமா பார்க்க மாட் டாங்க. வேலைன்னா வேலைதான்... அதில் ஆணென்ன... பெண்ணென்ன?

முதல்ல என்னை தியேட்டர் பிசினஸை பார்க்கச் சொன்னாங்க, இல்லையா? அப்புறம் படங்களின் விநியோகப் பொறுப்பைக் கொடுத்தாங்க. ‘கபாலி’ மாதிரியான பெரிய படங்களை விநியோகம் பண்ணினது மூலமா எனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைச்சது. இப்போ ‘பிகில்’ படத்துக்கு கிரியேட்டிவ் புரொடியூசர் என்கிற பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. இந்த இடத்துக்கு வர்றதுக்கு என் உழைப்பும் ஈடுபாடும் காரணமா இருந்தாலும், என்மேல நம்பிக்கை வெச்சு ‘இந்த வேலைகளை நீ செய்’னு கொடுத்ததுக்கு அவங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.

நம்ம நாட்டுல பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிற முதல் பிரச்னை, சொந்த வீட்லேயே அவங்க திறமையை நம்பாம போறதுதான். அதனாலயே பல சாதனைப் பெண்களை நாம மிஸ் பண்றோம். பொதுவா, ஆண்களுக்கு நான் வைக்கிற ஒரே ஒரு ரிக்வெஸ்ட்... உங்க வீட்ல இருக்கிற பெண்கள் மேல நம்பிக்கை வெச்சு அவங்களுக்கான வாய்ப்பை மட்டும் கொடுங்க. மத்ததை அவங்களே பார்த்துக்குவாங்க” என்று உறுதியுடன் சொல்கிறார் அர்ச்சனா.

அர்ச்சனா கல்பாத்தி
அர்ச்சனா கல்பாத்தி

“தியேட்டர் கட்டிக்கிட்டு இருந்தப்போ, நான் இருந்த ஆபீஸுக்கு வெள்ளை வேட்டி சட்டையோட நிறைய பேர் வந்து `இதைப் பண்ணிக்கொடுங்க, அதைப் பண்ணிக்கொடுங்க'ன்னு கேட்டுட்டு இருந்தாங்க. அப்போ எனக்கு 22 வயசு தான். அவ்ளோ பேர் வந்ததும் என்ன பண்றதுன்னே தெரியலை. பயத்துல அப்பாவுக்கு போன் பண்ணி, ‘என்ன பண்றதுன்னு தெரியலைப்பா’ன்னு சொன்னேன். ‘உன்னால இதைச் சமாளிக்க முடிஞ்சா பண்ணு. இல்லைன்னா, இந்த புரொஜக்டை யார்கிட்டேயாவது மாத்திவிட்டுட்டுக் கிளம்பு’ன்னு சொல்லிட்டு போனை வெச்சிட்டார். அந்தப் பிரச்னையில எப்படி நடந்துக்கணும்னு அவர் எந்த ஐடியாவும் கொடுக்கலை; பிரச்னைக்கான தீர்வையும் சொல்லலை. `தைரியம் இருந்தால் பண்ணு; இல்லைன்னா வெளியே வந்திடு’ன்னு அவர் சொன்னதை எனக்கான வாய்ப்பா எடுத்துக்கிட்டேன். இதேபோல ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு வாய்ப்பு நிச்சயம் வரும்... அதுக்காகக் காத்திருக்கணும்!

எல்லா பெண்களுக்கும் நான் சொல்றது இதுதான்... இங்கே நமக்கு வாய்ப்பு சரிசமமா கொடுக்கப்படறதில்லை. ஆனா, ஒரு வாய்ப்பு கிடைச்சா, தயங்காமல் தைரியமா ஏத்துக்கிட்டு சிக்ஸர் அடிச்சு மாஸ் பண்ணணும். அப்போதான் நம்ம யார்னு இந்த சமூகத்துக்கு தெரியும்” என்கிற அர்ச்சனா கல்பாத்தியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் தெறி மாஸ்!

“இந்தத் துறை ஆண்களுக்கானது. பெண் களுக்குச் சரிவராதுன்னு நாமே முடிவு பண் ணிடுறோம். அந்த எண்ணத்தை முதல்ல மாத்தணும். ‘பெரிய குடும்பத்துல இருந்து வந்ததுனாலதானே சீக்கிரம் இந்த உயரத்துக்குப் போக முடிஞ்சது’ன்னு என்னைப் பத்தி நீங்க நினைக்கலாம். உண்மையில், அடிப்படைல இருந்து வேலை செஞ்சுதான் நான், இந்த இடத்துக்கு வந்திருக்கேன். எங்க தியேட்டர்ல பாப்கார்ன் விற்கிற பையன், டிக்கெட் கொடுக்கிற பொண்ணுன்னு அவங்கவங்க இடத்துல இருந்து அவங்களுடைய கஷ்டத்தை உணர்ந்த பிறகுதான் எந்த நடவடிக்கையிலேயும் இறங்குவேன். எடுத்த வுடனே பெரிய இடத்துக்கு வந்தால் ரியாலிட்டி தெரியாம இருக்க வேண்டிவரும். கீழே இருந்து படிப்படியா வளர்ந்தால்தான் அந்த இடத்தின் அருமை தெரியும். அதேபோல, சுயநலமா இருக்கக் கூடாது... மத்தவங்களைக் காயப்படுத்தாமல் வளரணும். எடுத்தவுடனே பாஸ் இடத்துல உட்கார்றதுல என்னங்க த்ரில் இருக்கப் போகுது?” என்ற கேள்வியோடு முடிக்கிறார் அர்ச்சனா!