Published:Updated:

``திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலைப்போல, ஈரோட்டிலும் அதிமுக வெற்றிபெறும்!" - செங்கோட்டையன்

செங்கோட்டையன்
News
செங்கோட்டையன்

``திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பெற்ற வெற்றியைப்போல, ஈரோடு கிழக்குத் தொகுதியிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றியைப் பெறும்." - செங்கோட்டையன்

Published:Updated:

``திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலைப்போல, ஈரோட்டிலும் அதிமுக வெற்றிபெறும்!" - செங்கோட்டையன்

``திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பெற்ற வெற்றியைப்போல, ஈரோடு கிழக்குத் தொகுதியிலும் அ.தி.மு.க மகத்தான வெற்றியைப் பெறும்." - செங்கோட்டையன்

செங்கோட்டையன்
News
செங்கோட்டையன்

ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க-வின் எடப்பாடி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஈரோடு, பெருந்துறை ரோட்டில் அமைக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க தேர்தல் பணிமனை அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளரும், தேர்தல் பணிக்குழுவின் தலைவருமான கே.ஏ.செங்காேட்டையன் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். பின்னர் நடைபெற்றக் கூட்டத்தில் வேட்பாளர் தென்னரசுவை அறிமுகம் செய்துவைத்து, செங்கோட்டையன் பேசுகையில், ``திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க பெற்ற வெற்றியைப்போல, ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.க மகத்தான வெற்றியைப் பெறும்" என்றார்.

தென்னரசு
தென்னரசு

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசுகையில், `` `இடைத்தேர்தலில் எங்களது கூட்டணியை எதிர்க்கக்கூடிய எதிரியைக் காணவில்லை' என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியிருந்தார். எதிரிகளே இல்லை என்றால் காங்கிரஸ் வேட்பாளரின் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக ஏன் இத்தனை அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்தார் என்று கூற வேண்டும். ஏனென்றால் அ.தி.மு.க-வின் பலம் என்ன என்பதை ஸ்டாலின் நன்கு அறிவார். இ.பி.எஸ் பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்காக அளித்தார்.
கடந்த 20 மாதங்கள் தி.மு.க ஆட்சியின் பல்வேறு தவறுகளால் மக்கள் அவர்களது ஆட்சியை வெறுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே, இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும்" என்றார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, ``தி.மு.க ஆட்சியில் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதேசமயம் சொத்துவரி, மின்கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் தி.மு.க ஆட்சியின்மீது மக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தலில் மக்கள் அ.தி.மு.க-வைத்தான் தேர்வுசெய்வார்கள்" என்றார்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில், ``இந்த இடைத்தேர்தலில், பண பலத்துக்கும் மக்கள் பலத்துக்கும் இடையேதான் போராட்டம் நடந்துவருகிறது. இந்த இரண்டு ஆண்டுகள் தி.மு.க-வுக்கு நற்பெயர் கிடைக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னையில் வசித்துவருகிறார். அதனால் அவரை மக்கள் சந்திக்க முடியாது. ஆனால், ஈரோட்டில் வசிக்கும் தென்னரசுவை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்க முடியும்" என்றார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

முன்னாள் அமைச்சர் பொன்னையன், ``அ.தி.மு.க மக்கள் நலனை மட்டுமே பார்க்கிறது. ஆனால், தி.மு.க ஊழல் நடவடிக்கைகளில் மட்டுமே குறியாக இருந்து ஆட்சிபுரிந்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அ.தி.மு.க-வில் இ.பி.எஸ் தலைமை வகிக்கிறார். அவர் திறமையான நிர்வாகி. கடந்த நான்கு ஆண்டுகளில் பல நலத்திட்டங்களை வழங்கியிருக்கிறார்" என்று பேசினார்.

பொன்னையன்
பொன்னையன்

அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு பேசுகையில், ``ஈரோடு கிழக்குத் தொகுதியில் நான் எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், ரூ.484 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டு, அடுத்த 50 ஆண்டுக்காலத்துக்கு மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. இதன் மூலம் ஈரோடு மாநகருக்கு தினமும் 12 கோடி லிட்டர் தண்ணீர் பம்ப்பிங் செய்யப்பட்டு, மாநகர் முழுவதும் விநியோகிக்கப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடே இங்கு இல்லை. தினமும் 6 கோடி லிட்டர் தண்ணீர் போதும் என்றாலும், கூடுதல் நீர் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள்தொகை அதிகரித்தாலும் குடிநீர் பற்றாக்குறை வராத அளவில் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.81 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக் கட்டடம் கட்டப்பட்டுவருகிறது. ரூ.42 கோடியில் ஈரோடு பேருந்து நிலையத்தின் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
கனி, ஜவுளி சந்தை ரூ.52 கோடியிலும், நேதாஜி காய்கறி சந்தை ரூ.32 கோடியிலும், மாநகராட்சி வணிக வளாகம் ரூ.25 கோடியிலும் கட்டப்பட்டிருக்கின்றன.

தேர்தல் பணிமனை திறப்பு
தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு கிழக்கில் 2,000-க்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகளும், ஈரோடு மேற்குப் பகுதியில் 3,000 வீடுகளும் இ.பி.எஸ் ஆட்சிக்காலத்தில் கட்டித் தரப்பட்டிருக்கின்றன. உண்மையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஒரு வளர்ச்சித் திட்டம்கூட நிறைவேற்றப்படவில்லை. மேலும், இ.பி.எஸ் ஆட்சிக்காலத்தில் பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களுக்கு விசுவாசமான சேவகனாகப் பணியாற்றுவேன். தொகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக மீண்டும் கடுமையாக பாடுபடுவேன்" என்றார்.

தென்னரசு கடந்த 2001-ல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர் என்.கே.கே.பெரியசாமியை 25,000 வாக்குகள் வித்தியாசத்திலும், இரண்டாவதாக 2016-ல் போட்டியிட்டு தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை 7,900 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.