
புதுமை

படத்தைப் பார்த்து, `விமானம் பழுதடைந்து சாலையில் இறங்கிவிட்டதா?’ என்று கேட்கத் தோன்றுகிறதுதானே... `இது ஓர் உணவகம்’ என்றால் நம்புவீர்களா? `விமானம் ஏற வேண்டும்’ என்ற நடுத்தர மக்களின் ஆசையை வியாபாரமாக மாற்றியிருக்கிறார்கள், ஷாபாத் நகரைச் சேர்ந்த குல்தீப் என்பவரின் மகன் ஷிட்டிஜ் காக்கர் (Kshitij Kakkar). இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த விமான உணவகம், ஹரியானா மாநிலம், அம்பாலா - குருக்ஷேத்திரம் தேசிய நெடுஞ்சாலையில், நவம்பர் 27, 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 15 வருடகால ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்துக்கு, ‘ரன்வே-1’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த ஏர்பஸ் ரெஸ்ட்டாரன்ட்டில் உணவு சாப்பிட வேண்டுமென்றால், ஏர்போர்ட்டில் வாங்கிக்கொள்வதுபோல போர்டிங் பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். பெரியவர்களுக்கு ரூபாய் 200, சிறுவர்களுக்கு (வயது 5 -10) ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுமார் 100 பேர்வரை அமர்ந்து சாப்பிடக்கூடிய இந்த விமான உணவகத்தில் நுழைந்தாலே, விமானத்தில் ஏறிய அனுபவம் கிடைத்துவிடும்.


இந்த விமான உணவகம், எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. இங்கு வருபவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், விமானத்தினருகில் நின்று உற்சாகமாக செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ரன்வே-1 உணவகத்தில் இன்னொரு சர்ப்ரைஸ், பார்ட்டி கொண்டாடுபவர்கள், இயற்கையை ரசித்தபடியே விமானத்தின் இறக்கைகள்மீது காற்றோட்டமாக அமர்ந்து உணவை ருசிக்கலாம். இதற்காக நீங்கள், முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.