மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 29

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

ஆதீரா, நீ இப்ப சின்னப் பெடியன். சொல்லப்போனால் நீ பிறக்கும்போது இயக்கத்துக்கு வந்தவன் நான். உன்ர கோபமும் ஆத்திரமும் சரியானதுதான்.

இருட்டில் தட்டுத்தடுமாறி வேறோர் இடத்துக்குப் பாய்ந்து, அங்கிருந்து அக்காவின் அழைப்புக்குக் குரல் கொடுத்தேன். அக்கா வீட்டின் பின்பக்கத்தில் நின்றபடி “இஞ்ச வா” என்றாள். நாம் முத்தமிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மிகச் சமீபத்தில் நின்று அழைப்பதுபோலிருந்ததே! அக்காவிடம் ஓடினேன். கையில் கிடந்த டோர்ச் வெளிச்சத்தினால் நிலத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். ``ஏதோ காலில் முட்டிக்கொண்டு போனது மாதிரி இருந்தது, அதுதான் உன்னைக் கூப்பிட்டனான்’’ என்றாள். டோர்ச்சை வாங்கினேன். சுற்றிவர தேடிப் பார்த்தேன். எதையும் காணவில்லை. அக்கா மூத்திரத்துக்குப் போய்விட்டு வரும்வரை நான் சற்றுத் தள்ளி நின்றுகொண்டேன். அம்மா லாம்ப்பில் வெளிச்சம் ஏற்றியிருந்தாள். அம்பிகா பாடப்புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தாள். அடிக்கடி தனது முகத்தையும், கூந்தலையும் சரிசெய்துகொண்டிருந்த அம்பிகா, முத்தத்தின் பின் வடிவு கூடியிருந்தாள். அவளது கண்களில் சரசம் அசைந்துகொண்டேயிருந்தது. அவளது மடியே கதியெனக் கிடந்தாலென்ன! அவளது வார்த்தைகளே வேதமென இருந்தாலென்ன! எத்தனை வண்ணங்கள் நிறைந்த கேள்விகளும் தவிப்புகளும். மழைநீர் தத்தளித்து ஓடுவதைப்போல நான் அவளுக்குப் பின்னால் ஓடும் திரவமாகயிருந்தேன்.

பின்னிரவு வேளையில் யாரோ கதைத்துக் கேட்கும் சத்தம் கேட்டது. அம்மாவின் படுக்கையில் அவளில்லை. அக்காவும் இல்லை. நுளம்பு வலைக்குள் நான் மட்டுமே தனித்திருந்தேன். யாரோ கதைத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குரல்கள் எனக்குப் பரிச்சயமானவை அல்ல. கலகலப்பாக ஓடிக்கொண்டிருந்த அரட்டையை விழித்திருந்தபடி கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டிருந்தேன். ஐக்கியம் ஆகிவிடலாமென்று தோன்றியது. வெளியே போனேன். நால்வர் அமர்ந்திருந்தனர். எல்லோரும் வயதிலும் உருவத்திலும் பெரியவர்கள். மிடுக்கு மெழுகாய் படிந்த தோற்றம். ஒருவரை நான் யாழ்ப்பாணத்தில் பார்த்திருக்கிறேன்போலும்! அவரேதான். அவருடைய பெயர் தணிகைமாறன். `மாஸ்டர்’ என்றழைக்கப்படுபவர்களில் ஒருவர். கொஞ்சம் கடுமையானவர். யாழ்ப்பாணத்தில் இவர் தலைமையில் தீர்க்கப்பட்ட மக்கள் பிரச்னைகள் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். கொடூரமான சாதியக் குற்றங்களுக்கும், வேற்றுமைகளுக்கு எதிராகவும் இவரின் செயற்பாடுகளைப் பார்த்துமிருக்கிறேன்.

அப்போது ‘மேல் மாடி ஆர்மி காம்ப்’ இருக்கும் இடத்துக்குப் பின்புறமாகவிருக்கும் வைரவர் கோயிலில், வருடாந்தரத் திருவிழா தொடங்கியிருந்தது. அந்தக் கோயிலுக்குள் இன்னோர் பிரிவினரை வழிபாடு செய்ய மறுத்தது கோயில் நிர்வாகம். கோயிலின் தர்மகர்த்தாவான கணபதிப்பிள்ளை “எளிய சாதிக்கு இந்தக் கோயிலில் இடமில்லை’’ எனக் குரூரமாக ஒலிபெருக்கியில் அறிவித்தார். இந்தத் தகவலை எப்படியோ அங்கிருந்த போராளிகளுக்குத் தெரிவித்திருக்கின்றனர். அதிரடியாக அங்கே வந்த தணிகைமாறன் மாஸ்டர், கோயில் தர்மகர்த்தாவை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். ஆனால், கணபதிப்பிள்ளை கொஞ்சம் எள்ளலாகவும் தீர்க்கமாகவும் “தம்பி நீங்கள் அரசாங்கத்தோட வெளிநாடுகளில நடத்துற பேச்சுவார்த்தை மாதிரி, என்னட்ட கதைச்சு வெல்ல முடியாது. போய்ட்டு வாங்கோ” என்றார். தணிகைமாறன் மாஸ்டர் பளார் என தர்மகர்த்தாவின் கன்னத்தில் அறைந்தார். அவரைச் சூழ்ந்திருந்த கோயில் நிர்வாகிகள் மாஸ்டரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 29

“நாங்கள் போராடுகிற இந்த மண், எல்லா விடுதலைக்கும் சொந்தமானது. ஆக்கிரமிப்பாளனும் நீங்களும் ஒரே மாதிரியானவர்கள்தான். நீங்களும் அவங்களைப்போல அநீதிதான் செய்யிறியள். உங்களை மாதிரியான ஆக்களைச் சுடவும்தான் எங்களிட்ட துவக்கு இருக்கு. இனவெறியும் சாதிவெறியும் ஒண்டுதான். விளங்குதா?” என்று கோயில் தூண்கள் இடிந்துபோகுமாற்போல உரத்துச் சொன்னார் மாஸ்டர்.

கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சனங்களை உள்ளே போகுமாறு போராளிகள் கையசைத்தனர். அவர்களின் பாதங்கள் அநீதிச் சுவர்களையும், வாசற்படிகளையும், கோபுரங்களையும் இடித்துக்கொண்டு உள்ளே நுழையும் வேகத்தோடு இயங்கின. தர்மகர்த்தா கணபதிப்பிள்ளை, கன்னத்தில் தழும்புகளோடு உறைந்துபோய் நின்றார். மாஸ்டர் தணிகைமாறன் கோயிலைவிட்டு வெளியேறும்போது மீண்டும் சொன்னார்.

“ஆராவது சாதியைத் தூக்கிக்கொண்டு திரிஞ்சியள், இனி நான் கதைக்க மாட்டேன். துவக்குதான் கதைக்கும்.”

நித்திரையிலிருந்து எழும்பிச் சென்ற என்னைப் பார்த்து தணிகைமாறன் “என்னடா உன்ர நித்திரையைக் குழப்பிட்டம்போல” என்றார். ``இல்லை’’ என்றேன். அக்காவும் அம்மாவும் அவர்களுக்காகச் சமைத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் இடத்துக்கே வந்தேன். தணிகைமாறன் எல்லோருக்கும் என்னை அறிமுகம் செய்துவைத்தார். நான் அவர்களோடு இருந்து கதைக்க ஆசைப்பட்டேன். தணிகைமாறன் என்னைத் தனக்கு அருகிலிருக்கும் கதிரையில் அமரச்சொன்னார். அவர்கள் எல்லாவற்றையும் கிண்டல் செய்துகொண்டிருந்தனர். இயக்கத்திலுள்ள சில பொறுப்பாளர்கள் எப்படியெல்லாம் கதைப்பார்கள் என ஒருவர் இடையிடையே குரல் மாற்றி கதைத்துக் காண்பித்தார். தளபதிகள் சிலரைப் பற்றிய பகிடிக் கதைகளும் அங்கே ஓடிக்கொண்டிருந்தன. நான் தணிகைமாறனிடம் கொஞ்சம் மெதுவாகச் சொன்னேன், “உங்களோடு தனியாகக் கதைக்க வேண்டும்.” அவர் என்னை வியப்புடன் பார்த்தார். `கொஞ்சம் பொறு’ என்பதைப்போலச் சைகை செய்தார்.

சாப்பாடு ஆயத்தமாகியிருந்தது. எல்லோரும் கைகழுவும் இடத்துக்குப் போயினர். நான் அவர்களுக்கான உணவுகளைக் கொண்டுவந்து மர மேசையில் பரப்பிவைத்தேன். சாப்பிட்டுக்கொண்டும் கதைத்தனர். தாங்கள் ஒன்றாக நின்று போர் செய்த, களமுனைகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களை மீட்டிக்கொண்டிருந்தனர். சாப்பாடு எடுப்பதற்காகச் சென்று களத்தில் விழுப்புண் அடைந்த ஒரு போராளியை நினைவுபடுத்திக் கதைத்துக்கொண்டிருந்தனர். களத்தில் கடுமையான மோதல் நடந்து ஓய்ந்திருந்த சமயம், பசி தாங்கவியலாது தவித்த கானகன் எனும் போராளி, இளநீர் பிடுங்க தென்னையில் ஏறிய சமயம் சினைப்பர் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து கீழே விழுந்தாராம். காயமும், சாவும், பசியும், குருதியிழப்பும் பகிடிக் கதைகளாக ஆகி நிற்கும் இந்த வாழ்வில் இரவு படிந்திருந்தது. சாப்பிட்டு முடித்ததும் தணிகைமாறன் என்னோடு கதைக்க விரும்பினார். என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு “வா, சும்மா நடந்து போய்ட்டு திரும்பி வரலாம்” என்றார். ஆர்வம் பொங்க நடையைத் தொடங்கினேன். தணிகைமாறன் மாஸ்டர் என்னுடைய தோளில் கையைப் போட்டு “சொல்லு” என்றார்.

“எனக்கு இப்பதான் பதினாலு வயசு முடியப்போகுது, நான் கதைக்கிறது உங்களுக்குக் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாகத் தெரியலாம். அதுக்கு இப்பவே மன்னிப்புக் கேக்கிறன்.”

“வயசுக்கும் அறிவுக்கும் தொடர்பில்லை ஆதீரா. நான் அப்பிடி நினைக்கிற ஆள் இல்லை.”

“ஓம். எனக்கு உங்களைத் தெரியும். அதுதான் உங்களிட்ட கதைக்க வேணுமெண்டு ஆசைப்படுகிறன்.”

“தம்பியா சொல்லு.”

“நான் போராட வேணும், என்னை நீங்கள் இயக்கத்தில சேர்க்க முடியாது எண்டு சொல்லுவியள். எனக்கு வயசு காணாது எண்டு தெரியும். ஆனால் எனக்குள்ள நாளுக்கு நாள் ஒரு பக்கம் அச்சமும் இன்னொரு பக்கம் ஆத்திரமும் கூடிக்கொண்டே போகுது. ஆக்கிரமிப்பு, சோதனை, சுற்றிவளைப்பு, ஊரடங்கு, சுட்டுக்கொலை, இந்த வார்த்தைகள்தான் வாழ்க்கையா?”

“ஆதீரா, நீ இப்ப சின்னப் பெடியன். சொல்லப்போனால் நீ பிறக்கும்போது இயக்கத்துக்கு வந்தவன் நான். உன்ர கோபமும் ஆத்திரமும் சரியானதுதான்.”

“ஆனால், உன்ர வயசு இயக்கத்துக்குச் சேர்க்க ஏலாது எண்டுதானே சொல்லப் போறியள்” தணிகைமாறனை இடைமறித்துக் கேட்டேன்.

“அப்பிடியெல்லாம் இல்லை. ஒரு கூட்டமே உன்னை ஆக்கிரமிச்சு, அவமானப்படுத்தித் தாக்கும்போது `எனக்கு இன்னும் வயசு வரவில்லை, வரும் மட்டும் நான் அடிவாங்குவேன்’ என்றெல்லாம் தன்மானம் கொண்டவர்களால சொல்ல முடியாதல்லே...”

தணிகைமாறன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை. ஒருவனின் கண்களை நோக்கி எப்போதும் நீட்டப்பட்டிருக்கும் ஆயுதங்களுக்கு முன்னால், அவன் ஒரு மலரின் அழகைப் பற்றிய வர்ணனைகளை எண்ணப்போவதில்லை. அவனைக் கொன்றொழிக்கக் காத்திருக்கும் அந்த ஆயுதத்தை அவன் விறகுச் சுள்ளியாக முறித்தெறியும் வல்லபத்தைத் திரட்டுவான். என்னிடமிருக்கும் சிறு கல்லால் ராணுவத்தின் கவசத் தொப்பியைக் குறிவைப்பேன். தணிகைமாறனைப் பார்த்துச் சொன்னேன்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 29

“ஏதாவது செய்ய வேண்டும். என்னுடைய பள்ளிக்கூடத்துக்கு முன்பாக இருக்கும் சோதனைச்சாவடியை, ராணுவ முகாமை ஏதாவது செய்தாக வேண்டும் அண்ணா.”

“உன்னுடைய மனோதிடமும் வல்லமையும் பெறுமதியானவை. ஆனால் உன்னுடைய இறக்கையில் எவ்வளவு பாரத்தைச் சுமக்க முடியுமோ அதைப் பற்றி யோசி.”

“நான் நன்றாக யோசித்துவிட்டேன். என்னால் சுமந்து பறக்க முடியுமென்ற பாரங்களை நான் தீர்மானித்து விட்டேன்.”

“இவ்வளவு கவித்துவமாய் கதையாதே... புதுவையற்ற கவிதை மாதிரி கிடக்கு. நீ என்ன செய்யப்போகிறாய், நான் என்ன செய்ய வேண்டும்?”

“நீங்கள் எனக்குப் பயிற்சி தர மாட்டியளே.”

தணிகைமாறன் கைதட்டிச் சிரித்தார். “நீ பயிற்சியெண்டால் என்ன நினைச்சாய், பள்ளிக்கூடத்தில உடற்கல்வி பாடம் மாதிரி இருக்குமென்று நினைச்சியோ?”

“இல்லை... எனக்குத் தெரியும். கஷ்டம்தான். ஆனால் நான் அதுக்குத் தயார்.”

“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒழுங்கு செய்ய ஏலாது. ஆனால் உனக்கு நானொரு உதவி செய்கிறன். ஒருத்தரிட்ட கொண்டுபோய் உன்னைக் அறிமுகப்படுத்திவிடுறன். அவர் உனக்குச் சில விடயங்களைச் சொல்லுவார்.”

“எப்ப வரட்டும்?”

``இப்பவே எங்களோட வா, நான் கூட்டிக்கொண்டு போறன். நாளைக்கு இரவு திரும்பி வரலாம்’’ என்றார்.

வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் சொல்லிவிட்டு ஒரு நாளுக்கான உடுப்புகளை மட்டும் எடுத்துக்கொண்டு வாகனத்தில் வெளிக்கிட்டேன். நிலம் விடியத் தொடங்கியிருந்தது.

(நீளும்...)