
ஓட்டோவின் இருக்கைக்குக் கீழே ரகசிய அறையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டின் பெரிய சுவரை ஏறிப் பாய்கிறார் மருதன்.
உணவகத்தில் தனது அடையாள அட்டையை போலீஸாரிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டிருந்த அரியரத்தினம் கோபிதன் மீண்டுமொருமுறை ஏவறை விட்டுக்கொண்டார். துப்பாக்கி ஏந்தி நிற்கும் போலீஸை ஓங்கி உதைத்தார். எல்லோருக்குள்ளும் பதற்றமும் உயிர்ப்பயமும் அமிலமாகப் பெருகின. கீழே விழுந்த போலீஸிடமிருந்து துப்பாக்கியைப் பறித்தெடுத்த அரியரத்தினம் கோபிதன், மற்ற போலீஸ்காரனை இலக்குவைத்தார். “நான்தானடா நீங்கள் தேடிவந்த உதயன்” என்று சொல்லிக்கொண்டதும், முதல் தோட்டா வெளியேறியது. கடைக்காரர் தலையிலடித்துக்கொண்டு வெளியே ஓடினார். அடுத்த நொடியில் கீழே கிடந்தவனையும் தோட்டா துளைத்தெடுத்தது. இரண்டு போலீஸ்காரர்களைச் சுட்டுவிட்டு தனது அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு உந்துருளியில் தப்பிச் சென்ற உதயன் எனப்படும் அரியரத்தினம் கோபிதனை ராணுவம் தேடத் தொடங்கியிருந்தது.
`பழம்’ எங்களுடைய வீட்டுக்கு வருவதற்கிடையில் ஏதேனும் நிகழ்ந்துவிடக் கூடாதென பிரார்த்தித்துக் கொண்டேயிருந்தேன். மருதன் எந்தத் தயக்கமுமில்லாமல் வீட்டிலேயே அமர்ந்திருந்தார். `பழம்’ எங்களுடைய வீட்டுக்கு வந்துசேர மாலைப்பொழுதாகியிருந்தது. மருதனைக் கண்டதும் ‘பழம்’ வெற்றிப் புன்னகையோடு “எங்கட உதயனுக்கு வலைபோட்டுட்டாங்கள். ஆனால், அவன் என்ன குஞ்சு மீனா, கடல். முழங்கிட்டு தப்பியிருப்பான்” என்றார். மருதன் பெரிதாக எந்த எதிர்வினையும் ஆற்றாமல் இருந்தார். `பழம்’ தன்னுடைய ஐஸ் பெட்டியைத் திறந்து பொலித்தீனால் சுற்றப்பட்ட கைத்துப்பாக்கியை எடுத்து மருதனின் கையில் கொடுத்தார். ‘பழம்’ ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டு ஆசுவாசமாகப் புகையை வானத்தை நோக்கி விட்டுக்கொண்டார். அக்கா தேத்தண்ணி கொடுத்தாள். `பழம்’ இன்னொரு பீடியைப் பற்றவைத்து தேத்தண்ணியைக் குடிக்கத் தொடங்கினார். மருதன் கைத்துப்பாக்கியைத் தனக்குரிய இடத்தில் கொண்டுபோய் மறைத்துவைத்தார். `பழம்’ அக்காவைப் பார்த்து “உனக்கு என்ன பெயர் பிள்ளை?” என்று கேட்டார். அக்கா தன்னுடைய பெயரைச் சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள். மருதனின் கைப்பேசி ஒலித்தது.

“ஹலோ... சொல்லுங்கோ...”
எதிர்ப்புறத்தில் ஒரு வயதான பெண்ணின் குரல். அவளது கதையில் ஒருவித நடுக்கமும் தடுமாற்றமும் இருந்தன. “இண்டைக்கு, நாளைக்கு இஞ்சால மழை பெய்யும்போலக் கிடக்கு. நீங்கள் வேணுமெண்டால் மாடுகளைப் பிடிச்சு உள்ள கட்டிவிடுங்கோ” என்றாள். மருதன் ``சரியம்மா’’ என்று சொல்லி கைப்பேசியைத் துண்டித்தார். `பழம்’ வீட்டிலிருந்து வெளிக்கிடும்போது மருதனிடம் சிரித்துக்கொண்டு சொன்னார்... “பழம் ஒரு வேலையைக் குடுத்தால் திறமாகச் செய்து முடிப்பான் எண்டு அங்காலையும் சொல்லிவிடு.”
‘‘ஏன் அவையளுக்கு நான் சொல்லியா தெரியவேணும்... நீங்கள் எந்தப் பெரிய ஆளெண்டு எல்லாருக்கும் தெரியும்” மருதன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு சைக்கிளை உழக்கினார். அவருக்கு ஓர் உற்சாகம் வந்திருக்க வேண்டும். பாதையில் வளைத்து வளைத்து சைக்கிளைச் செலுத்தினார். இந்தப் ‘பழம்’ நான் பார்த்தவர்களுள் வித்தியாசமானவர். எல்லாவிதமான லெளகீகங்களுக்கும் பழக்கப்பட்டவர். ஆனால், வேலையில் நேர்த்தியும் விழிப்பும் கொண்டவர். இந்த வயதில் யாழ்ப்பாணத்தின் வீதிகளை சைக்கிளில் அளந்து திரியும் இவருக்கு எத்தனை வேலைகள் இருக்கும்... எத்தனை சவால்களும் மன பயமும் இருக்குமென்று எண்ணினேன். ஆனால், அவர் அப்படி பயந்துபோகும் ஆளில்லை. இயக்கத்துக்கும் அவருக்குமான உறவைப் பற்றி மருதன் சொன்னபோது வியப்பாகவிருந்தது. ‘பழம்போல் எத்தனையெத்தனையோ மனிதர்களின் தீரமான செயல்களாலேயே இந்தப் போராட்டத்தை நிகழ்த்த முடிகிறது’ என மருதன் சொன்ன வார்த்தைகள் மீண்டும் எதிரொலித்தன.
அன்றிரவு சரியாக எட்டு மணியிருக்கும். மருதனின் கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. மருதன் எதிர்ப்புறத்தில் கதைத்தவரை “சொல்லுங்கோ” என்று மட்டும் விளித்தார். “நூலகத்துக்குப் புத்தகங்கள் வந்திட்டுது” என்று சொல்லிவிட்டு எதிர்ப்புறத்தில் இருந்தவர் தொடர்பைத் துண்டித்தார். மருதன் எந்தச் சிக்கல்களையும் முகத்தில் காட்ட மாட்டார். எல்லா உணர்ச்சிகளுக்கும் அவரது முகபாவனை ஒன்றே. ஆனால், இந்த அழைப்பு வந்ததும் கொஞ்சம் பரபரப்பாகியிருந்தார். சில நிமிடங்கள் கழித்து யாரையோ கைப்பேசியில் அழைத்து, ‘`ஒரு பத்து மணிக்கு...’’ என்று மட்டும் சொன்னார். அக்கா மிக விரைவாகச் சமைத்து முடித்து அவருக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டுமென வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நான் பத்து மணிபோல வேறொரு இடத்துக்கு போகவேண்டியிருக்கு, சாப்பாடு வேண்டாம்” என்றார்.
“சமைச்சு முடியப்போகுது. சாப்பிட்டிட்டு போங்கோ” என்றாள்.
“இல்லை. வேண்டாம். மதியம் சாப்பிட்டதே இன்னும் செமிக்கேல்ல.”
“உங்களுக்கும் சேர்த்துச் சமைச்சிட்டன். சாப்பிட்டிட்டுத்தான் போகவேணும்” என்றாள்.
மருதன் அதற்குப் பிறகு எதுவும் கதைக்கவில்லை. பத்து மணிக்கு எங்களுடைய வீட்டு முற்றத்தில் ஒரு ஓட்டோ வந்து நின்றது. காந்தி யண்ணாவும் ஓவியனும் வந்திருந்த போது அவர்களை ஏற்றிச்செல்ல வந்த ஓட்டோதான். மருதன் சாப்பிட்டதுமே எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். கைத்துப்பாக்கியை ஓட்டோவின் இருக்கைக்குள் இருந்த ரகசிய அறையில் வைத்துப் பூட்டினார். அக்கா மருதனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அனிச்சையாகவே “எப்ப வருவியள்?” எனக் கேட்டேன். “இதென்ன புதுப்பழக்கம்” என்று மருதன் கேட்டதும், கொஞ்சம் சங்கடமாகப் போய்விட்டது. ஆனால், அக்கா அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலையும் வேண்டி நின்றாள். என்னைத் தனக்கருகில் அழைத்து வைத்துக்கொண்டு நின்றாள். ஓட்டோ எங்களுடைய வீட்டைக் கடந்து போய்விட்டது. இரவு நீளத் தொடங்கியது. நான் பாடப்புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அக்கா சாப்பிடாமலேயே நித்திரைகொள்ள ஆயத்தமானாள். இரவின் சப்தம் வெறுப்பூட்டியது. மனசுக்குள் நிழல் விழாத உருவங்களின் பேயாட்டம்போல நிறைய குழப்பங்கள் கேள்விகளாக உருப்பெருத்தன. மருதன் இப்போது வெளிக்கிட்டுப் போகிறாரே, ஏதாவது நடந்துவிடுமோ என்றெல்லாம் தோன்றியது. மனதை ஒருமுகப்படுத்தி `கடவுளே’ என்று வேண்டிக்கொண்டேன்.
ஓட்டோ விரைந்து போகிறது. பனிக்காலத்தின் கூதல் மருதனைத் தழுவிச் செல்கிறது. மருதன் இருண்டிருக்கும் வீதியின் இரு மருங்கையும் பார்த்துக்கொண்டு போகிறார். தூரத்தில் யாரேனும் வருகிறார்களா, ஓட்டோவை யாரேனும் பின்தொடர்கிறார்களா என்கிற கண்காணிப்போடு மருதன் அமர்ந்திருக்கிறார். ஓட்டோ ஒரே வேகத்தில் விரைகிறது. வீதியில் எப்போதும், எங்கும் ராணுவத்தினர் நின்று சோதனை செய்வார்கள். மருதன் எதையும் சந்திக்கத் தயார். ஓட்டோ போய்க்கொண்டிருக்கிறது. திடீரென வீதி முனையில் நிற்கும் ராணுவத்தினர், ஓட்டோவை மறித்துச் சோதனை செய்கிறார்கள். மருதனை அடையாள அட்டையைக் காண்பிக்கு மாறு ஒரு சிப்பாய் கேட்க, தனது அடையாள அட்டையை எடுத்துக் கொடுக்கிறார். ஓட்டோக்காரர் தனது அடையாள அட்டையைக் காட்டுகிறார். ராணுவச் சிப்பாய் “எங்க போறது?” என்று கேட்க, மருதன் பதில் சொல்லுகிறார்.

“பெரியம்மா வீட்டுக்கு...”
“நீங் என்ன வேலை பார்க்கிறது?”
“நான் டியூசன் நடத்திறன்.”
“எங்க?”
“நெல்லியடி.”
“நெல்லியடி! அங்க இருந்து இங்க யாரப் பார்க்க வந்தது?”
“இங்க இன்னொரு சொந்தக்காரர் இருக்கினம். அவையளப் பார்த்திட்டு பெரியம்மா வீட்டுக்குப் போறன்.”
“பெரியம்மா எங்க இருக்கு?”
“புன்னாலைக்கட்டுவனில இருக்கிறா.”
ஓட்டோக்காரர் அமர்ந்திருந்தார். மருதனை ராணுவச் சிப்பாய் விசாரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தார். ஓட்டோவுக்கு ஒரு சிப்பாய் சோதனை செய்து முடித்திருந்தார். எப்போதோ குடித்து முடித்து வைத்திருந்த தண்ணீர் போத்தலை மட்டும் கண்டெடுத்து வெளியே எறிந்தார். ஓட்டோக்காரர் எந்தப் பதற்றமும் இல்லாமல் மருதனையும், அவனிடம் நடைபெறும் விசாரணையையும் பார்த்துக் கொண்டிருந்தார். மருதனின் அடையாள அட்டையை வாங்கிய சிப்பாய், அதைப் பார்த்துக்கொண்டு கேட்டான்,
“பிறந்த திகதி சொல்லு.”
“ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தெட்டு, மே மாசம், ரெண்டாம் திகதி.”
“இப்ப எங்க போறது?”
மருதன் எந்தக் குழப்பமுமில்லாமல் “அதுதான் சேர் சொன்னேனே, பெரியம்மா வீட்டுக்கு” சிப்பாயின் கண்கள் தன்னை நம்பத் தொடங்குவதை மருதன் உணர்கிறார். வீதியில் வந்த இன்னும் சிலரை ராணுவத்தினர் மறித்துச் சோதனையும் விசாரணையும் செய்கின்றனர். மருதனை விசாரித்த சிப்பாய், மருதனின் கையில் அடையாள அட்டையைக் கொடுத்து “சரி போ” என்கிறார். ஓட்டோக்காரர் ஆயத்தமாகிறார். மருதன் வந்து ஏறியமர்ந்ததும், ஓட்டோ விரைந்தது.
கொஞ்ச நேரத்தில் ஓட்டோ ஒரு பெரிய வீட்டின் முன்னே போய் நிற்கிறது. ஓட்டோவின் இருக்கைக்குக் கீழே ரகசிய அறையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வீட்டின் பெரிய சுவரை ஏறிப் பாய்கிறார் மருதன். அடர்ந்த இருளில் குரோட்டன் செடிகளை விலக்கிக்கொண்டு, வீட்டின் முகப்புக் கதவைத் தட்டுகிறார். சில நிமிடங்கள் ஆகியும் கதவு திறக்கவேயில்லை. கைத்துப்பாக் கியைச் சுடத் தயாராக்கிக்கொண்டு மீண்டும் கதவைத் தட்டுகிறார். அழைப்பு மணியை ஒலிக்கச் செய்கிறார். வீட்டினுள்ளே மின்விளக்குகள் ஒளிரத் தொடங்குகின்றன. சில நொடிகளில் கதவு திறக்கும் அதே வேளையில் மருதனுக்குப் பின்னால் இருவர் வந்து நிற்கின்றனர். அவரின் பின்னந்தலையில் துப்பாக்கிகளால் மூர்க்கமாய் அடிக்கின்றனர். மருதன் அவர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தன்னுடைய கைத்துப்பாக்கியால் அவர்களைச் சுடத் துடிக்கிறார். இரண்டு குண்டுகள் அவர்களை நோக்கிப் பாய்கின்றன. தன்னை இனிக் காப்பாற்ற முடியாதென அறிந்த மருதன், தன்னைத் தானே சுட்டுக் கொல்ல, வானில் வெள்ளி பூக்கத் தொடங்கிற்று.
ஓட்டோக்காரர் அங்கிருந்து மிக வேகமாகத் தப்பியோடினார்.
(நீளும்...)