அரசியல்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 43

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

“பேயில்ல, முனி நிக்கும். உள்ள போனால் ஒரு சின்னப்பனை நிக்கும். அதில முனியிருக்கு.”

“ஏற்பாடுகளையெல்லாம் பார்த்தால், இயக்கம் சண்டையைத் தொடங்கப்போகுதுபோல.” சனங்கள் சாடைமாடையாகக் கதைக்கத் தொடங்கினார்கள். ஆனால், பூட்டம்மா சொன்னது எனக்கு இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. சண்டையைத் தொடங்கினால், இயக்கத்துக்குப் பெரிய இழப்பு வருமென்று அவரால் எப்படி உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று குழப்பமாகவே இருந்தது. அண்ணா நான்கு நாள்களுக்கு மேலாக விடுப்பில் இருந்தான். அவனைச் சந்திக்கச் சொந்தக்காரர்கள் வந்து போயினர். இயக்கத்திலிருந்தால் அவ்வளவு மரியாதையும் அன்பும் சூழ்ந்து நிற்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவைக் கைப்பற்ற அரசாங்கம் படை நடவடிக்கையை முன்னெடுக்கலாமென்று, இயக்கம் தயாராகவிருப்பதாக அண்ணா கதையோடு கதையாகச் சொன்னார். பூட்டம்மா அப்போது எதுவும் சொல்லவில்லை. மதிய நேரத்தில் உப்புக்காட்டுக்கு நடக்கலானேன். சாணை பிடிக்கப்பட்ட சின்னஞ்சிறியதான வேட்டைக்கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டேன். பன்னிச்சை மரத்தின் முன்னே விழுந்து வணங்கினேன். எந்த அசைவுமற்று இருந்த மரத்தின் கிளைகளை நோக்கி எம்பினேன். என்னைப் பொருட்படுத்தத் தயாரில்லை என்பதைப் போலிருந்தன. நான் ``பன்னிச்சைத்தாயே!’’ என்று மூர்க்கம்கொண்டு சத்தமிட்டேன். காட்டின் மீது அனல்மழை பொழிவதைப்போல வெக்கை எழும்பியாடியாது. பன்னிச்சைத்தாய் எனக்கு முன்னால் தோன்றினாள். அவளது கண்களில் கோபம் தகித்தது. தாள முடியாத துயரை அள்ளித்தின்ற சோக பாவத்தில் அவளைக் காண முடியாதிருந்தது. அவளின் கால்களைத் தொட்டு வணங்கினேன். மெல்ல தணிந்த வெக்கையின் மீது நிழலாக நின்றுகொண்டிருந்த பன்னிச்சைத்தாய், என்னைத் தூக்கி நிறுத்தினாள். “இன்றிலிருந்து பத்து நாள்களுக்குள் நீ ஏழு நடுகற்களையும் கண்டுபிடிப்பாயாக!” என்று என்னை ஆசீர்வதித்தாள். “ஆதீரன்...” என்றொரு குரல் உப்புக்காடெங்கும் ஒலிக்க, நான் ஏழு நடுகற்களையும் தேடி நடக்கத் தொடங்கினேன். நாகப்பர், வேங்கை மரத்தின் கீழே அமர்ந்திருந்தார். அவரது காலடியில் இரண்டு உடும்புகள் தலையோடு வாலாக கட்டப்பட்டுக் கிடந்தன. என்னைக் கண்டதும் எழுந்து நின்று “வா ஆதீரா, என்ன இவ்வளவு பிந்தி வாறாய்?” என்று கேட்டார்.

“இதென்ன புதுக்கதையா கிடக்கு, நான் உங்களைப் பார்க்க வரேல்ல” என்றேன்.

“ஆனால் நான் உன்னைக் காணத்தான் இதில இருக்கிறன்.”

“என்னைக் காணவோ, நான் இஞ்ச வருவனெண்டு உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“இண்டைக்கு மட்டுமில்ல, நாளைக்கு நீ எங்க போவாயெண்டும் எனக்குத் தெரியும்.”

“நான் எங்க போவன் சொல்லுங்கோ.”

“அதெல்லாம் சொல்ல முடியாது. இப்ப நீ எங்க போறாய்?”

“இவ்வளவு தெரிஞ்ச உங்களுக்கு, நான் எங்க போறனெண்டு தெரியாதோ?”

நாகப்பர் என்னைத் தீர்க்கத்துடன் பார்த்துச் சொன்னார்.

“ஆதீரா, உன்ர ஒவ்வொரு காலடியும் எந்தத் திசையை நோக்கிப் போகுதெண்டு எனக்குத் தெரியும்.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 43

நான் சிரித்துக்கொண்டு அவரைவிட்டு நடக்கத் தொடங்கினேன். தனித்துக் கிடக்கும் காட்டில் நிகழ்வது எல்லாம் மேன்மை. “இயற்கை எனது நண்பன்” என்கிற தலைவரின் வார்த்தைகள் அலர்ந்து ஞாபகத்தை நறுமணமாக்கின. சத்தத்துக்கும் காலத்துக்குமிடையே காடு தன்னையொரு வாத்தியமாக்கிவைத்திருந்தது. நாகப்பர் எனக்குப் பின்னே `காத்தவராயன் கூத்து’ பாடலைப் பாடிக்கொண்டு வந்தார். அவரின் வலது தோளில் உடும்புகள் கைப்பையைப்போலத் தொங்கிக்கொண்டிருந்தன. மெல்ல மெல்ல வெயில் இறங்கிக்கொண்டிருந்தது. குளிர்மைச் சுனையாய் நிழல் பரவிக்கிடக்கும் மரத்தொகுதிக்குள் நுழைந்தேன். நாகப்பர் என்னை அதற்குள் போக வேண்டாமென எச்சரித்தார். அவர் சொல்வதைக் கேட்பதற்குத் தயாரில்லை. ஆனால் அவருடைய எச்சரிப்பு நீண்டுகொண்டே போனது. நான் திரும்பிப் பார்த்துக் கேட்டேன்.

“ஏன் இதுக்குள்ள என்ன பேயே நிக்குது?”

“பேயில்ல, முனி நிக்கும். உள்ள போனால் ஒரு சின்னப்பனை நிக்கும். அதில முனியிருக்கு.”

“முனிதானே, இருக்கட்டும். நான் போறன். எனக்குப் பன்னிச்சைத்தாய் துணையிருப்பா.”

“எல்லாருக்கும் அவா துணையிருப்பா. ஆனால் அதுக்குள்ள நீ போகாத.”

நாகப்பர் கண்டிப்புடன் உத்தரவாகச் சொன்னார். நான் நுழையாமல் வெளியே வந்தேன். நாகப்பர் இன்னொரு பாதையால் என்னைக் கூட்டிச் சென்றார். ``ஏழு நடுகற்களை உன்னால் கண்டுபிடித்துவிட முடியுமா?’’ என்று கேட்டார். “கண்டுபிடிப்பன்” என்றேன். காடு மெல்ல மெல்ல நெகிழ்ந்து என்னை அரவணைத்தது.

“நெடுவல்ராசன் ஏழு நடுகற்களையும் எனக்குக் காட்டியிருக்கலாம். ஏன் இப்படி என்னைவிட்டுப் போனாரோ” என்று புலம்பத் தொடங்கினேன். நாகப்பர் சொன்னார்.

“நீ பெரிசுகள் மாதிரி புலம்பாத, உனக்கு பன்னிச்சைத்தாயோட துணையிருக்கும்.”

“எனக்கு இது தெரியாதே.”

“தெரிஞ்சும் ஏன் புலம்புறாய்?”

“நான் புலம்பேல்ல.”

திடீரென குண்டுகள் வீழத் தொடங்கின. உப்புக்காட்டின் கடைசி எல்லையில் கூவி வெடித்த குண்டுகள் நாகப்பருக்கு நிறைய செய்திகளைச் சொல்லின.

“உது யாழ்ப்பாணத்தில நிக்கிற ஆர்மிதான், அவங்கள் வன்னியை நோக்கி முன்னேறப் போறாங்கள்போல.”

புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நிலைகொண்டிருக்கும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் வாகனங்கள் வீதியில் பரபரத்து ஓடின. சண்டை தொடங்கிவிட்டதாவென சனங்களுக்குள் கிலி தோன்றியது.

“எல்லா வெளிநாட்டுக்காரங்களையும் வெளியேறச் சொல்லிப்போட்டு, தொகை தொகையாய்க் குண்டடிச்சுக் கொல்லப்போறாங்கள்.”

“நீங்கள் வேணுமெண்டால் இருந்து பாருங்கோ. சிங்களவன் எங்களை அணுகுண்டு போட்டுக் கொல்லப்போறான்.”

“வெள்ளைக்காரன நம்பினால் நடுத்தெருதான். பார்த்தியோ... சும்மா சமாதானம், மத்தியஸ்தம் எண்டு சொல்லிப்போட்டு இவ்வளவு நாளும் சண்டைக்குத்தான் ரெடியாகிட்டு இருந்திருக்கிறாங்கள்.”

பன்னிச்சையடி கிராமத்தில் சனங்கள் இடம்பெயரத் தயாரானார்கள். ஆனால், இயக்கப் போராளிகள் சண்டையெல்லாம் ஒன்றுமில்லை என்று சனங்களுக்கு விளங்கவைத்தனர்.

“அப்ப ஏன் தம்பி அவன் ஷெல் அடிக்கிறான்?”

“அதொண்டுமில்லை, அவன் எங்களைச் சும்மா சீண்டிப் பார்க்கிறான். நாங்கள் அவங்களைத் திருப்பி அடிச்சால்தான் சண்டை.”

“நீங்கள் எங்களுக்குச் சொல்லாமல் அவங்களை அடிக்கத் தொடங்குவியள், பிறகு நாங்கள் ஓடவும் ஏலாது.”

இதன் மூலம் அரசாங்கம் தாக்குதலுக்குத் தயார் என்பதை அறிவித்திருக்கிறது. ஆகவே, சனங்களை விழிப்போடு இருக்கச் சொல்ல வேண்டும். இயங்கிவரும் பள்ளிக்கூடங்களில் பதுங்குகுழிகள் அவசியம். போரில் காயங்களுக்கு முதலுதவி வழங்குவது எப்படியென மருத்துவப் போராளிகளால் பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் எடுக்கப்பட்டன. போரைப் பற்றி யோசித்தபடியே மரங்களின் உச்சிக்கிளைகளிலிருந்து கீழே இறங்கின எறும்புகள்.

நானும் நாகப்பரும் உப்புக்காட்டைவிட்டு அவசர அவசரமாக வெளியேறி ஊருக்குள் நுழைந்தோம். பூட்டம்மா வீட்டில் அமர்ந்திருந்து பனங்கட்டி கடித்துக்கொண்டு சாயத்தண்ணியை அருந்தினாள்.

“காட்டுக்குள்ள மூன்று ஷெல் விழுந்தது. நான் பயந்திட்டன்.”

“இஞ்ச முனுசோட தென்னந்தோப்பிலையும் ரெண்டு விழுந்தது.”

“என்ன ஷெல்லோ?”

“இல்லை தேங்காய். வாற கோபத்துக்கு ஏதவாது சொல்லிப்போடுவன். ஷெல்தான் விழுந்திருக்கு.”

கடவுள்... பிசாசு... நிலம்! - 43

சர்வதேசத் தொண்டு நிறுவன அலுவலகத்துக்கு முன்னால் சனங்கள் கூடினர். அலுவலகத்தில் பரபரப்பு கூடி நின்றது. பிரதேசத்தின் அரசியல்துறை பொறுப்பாளர், அலுவலகத்தில் இருந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடம் ஏதோ பேச்சுவார்த்தை செய்தார். அரசாங்கத்தின் போர் நிறுத்த மீறலைக் கண்டிக்க வேண்டுமென சனங்கள் குரல் கொடுத்தனர். லூயிஸ் என்கிற சர்வதேசப் பணியாளர் சனங்களைப் பார்த்து “வணகொம்” என்றாள். அவளுக்கும் வணக்கம் சொல்லி நாகரிகம் பாராட்டும் அளவுக்கு சனங்களுக்கு மனமில்லை. வன்னிக்கும் அப்படித்தான். காவு கொடுக்கப்பட்ட காலத்தைப்போல லூயிஸ் சனங்களைப் பார்த்துக்கொண்டு நின்றாள். காலாட்படையின் கால்களுக்குக் கீழே நசிபடும் குழந்தைகளின் சவத்துயரம் எனக்குள் கடல்போல் ஓங்கி எழுந்தது. ஓலம் என் மூளைக்குள் முன்னேறிக்கொண்டிருந்தது. லூயிஸ் கண்களில் ஒழுகத் தொடங்கிய கண்ணீரின் சுவடுகளில், எந்த பதிலும் சனங்களுக்கில்லை. கண்ணீர். அது சலித்துப்போன இன்னொரு கடவுள். கோபமும் கேவலும் விரிந்து நின்றன. ஏனைய அதிகாரிகளும் அங்கு வேலைபார்க்கும் தமிழ் ஊழியர்களும் பதிலற்று நின்றனர். ‘யுத்தத்தில் கண்ணீருக்கும் கடவுளுக்கும் காக்கும் வல்லமையில்லை லூயிஸ்’ என்றோம்.

லூயிஸ் லிட்டில் ஒரு கறுப்பினப் பெண். அருந்தவ அழகென குள்ளம் வேறு. சுருட்டைமுடியை நன்றாக வெட்டியிருந்தாள். அவளின் மிடுக்கும் எப்போதும் குவிந்தபடியிருக்கும் உதடும் பார்க்கவே கொஞ்சம் விநோதமாக இருந்தது. அவள் வன்னிக்குள் வந்த புதிதில், எங்களுடைய கிராமத்துக்குத்தான் முதன்முறையாக வந்திருந்தாள்.போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாள். சிறிய இசை வாத்தியங்கள் தேவைப்பட்ட சிறார்களுக்கு அவற்றையும் வாங்கிக்கொடுத்தாள். எனக்கு அவளைப் பார்த்ததும் பிடித்துப்போனது. அப்போது அவளுக்கு முப்பது வயது இருந்திருக்கலாம். ஒரு டொலக் வாத்தியமும், உதைபந்தும் எனக்குக் கிடைத்தன. லூயிஸ் என்னை அருகில் அழைத்து, ‘உங்கள் கிராமத்தில் இருக்கும் சிறார்களுக்கு வேறு என்னவெல்லாம் தேவைப்படுகின்றன?’ என்று மொழிபெயர்ப்பாளர் மூலம் கேட்டாள். ஆனால், நானே அவளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னேன். மொழிபெயர்ப்பாளருக்குக் கொஞ்சம் விதிர்விதித்துவிட்டது.

``இப்பிடி என்னெண்டு இங்கிலீஷ் கதைக்கிறாய்?’’ என்று மொழிபெயர்ப்பாளர் கேட்டதும், ``எப்பிடி நீங்கள் கதைக்கிறியளோ அப்பிடித்தான்’’ என்றேன்.

“நான் யாழ்ப்பாணமடா தம்பி, நீ வன்னிக்க இருந்து கதைக்கிறதுதான் ஆச்சர்யமாய் இருக்கு” என்றார். இந்தக் கற்பிதத்தைக் காறி உமிழ வேண்டும். யாழ்ப்பாணத்துக்காரருக்குத்தான் இங்கிலீஷ் வரும், வன்னி ஆக்களுக்கு வராது என்ற தடிப்புக்கு ஓர் அடி அடித்தால் என்னவென்று இருந்தது.

லூயிஸ் இன்றைக்கு சனங்களின் கண்ணீருக்கு முன்னால் பதிலற்று நின்றாள். போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவைச் சேர்ந்த வாகனங்கள், வீதியில் தாறுமாறாகப் போய்க்கொண்டிருந்தன.

பூட்டம்மா சொன்னாள். “இன்னும் கொஞ்ச நாளைக்கு நாங்கள் இஞ்ச இருக்கலாம்.”

“மிச்ச நாள்கள் எங்க இருக்கிறது?” என்றேன்

“தெரியேல்ல, ஆனால் இஞ்ச இருக்க முடியாது.”

“ஏன்?”

“எல்லாம் அழியப்போகுது மோனே” என்றாள். அவளது கண்களில் துளிர்த்திருந்த கண்ணீர், யுகத்தின் பேரலையில் ஒரு துளியாய்த் துடித்தது.

(நீளும்...)