மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 46

கடவுள்... பிசாசு... நிலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்!

அவரும் பாவம், உந்த வெளிநாட்டுக்காரரிட்ட கதைச்சுக் களைச்சுப்போயிருப்பார்

பழம் இயக்கத்துக்கு துரோகம் செய்தார், அவரை இயக்கம் சுட்டுக் கொன்றுவிட்டதென மணியன் சொன்னதைக் கேட்டதிலிருந்து மனமெல்லாம் கருகிய வாடை பரவி நிற்கிறது. துரோகம்போலொரு தீமையிங்கில்லை. பழத்தின் உருவத்தை நினைத்துப் பார்க்கிறேன். எவ்வளவு மனவுறுதியும், போராட்ட உணர்வும்கொண்டவர். அவரின் பீடிப் புகை என் நாசியில் ஏறுவதைப்போல உணர்வு. “பழம் நீங்கள் துரோகம் செய்வீர்களா?” என்று கேட்கத் தோன்றுகிறது. பழத்தை, மருதன் நம்பினார். அவரிடம் எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்து முடிப்பார் என்கிற தீர்க்கம் மருதனிடமிருந்தது. மணியனும் நானும் கிளிநொச்சிக்குச் செல்வதாகத் திட்டம். அம்மாவிடம் சொல்லிவிட்டுக் காலையிலேயே வெளிக்கிட்டேன். அக்கா வீட்டுக்குள் இருந்தாள். அவளை இருள் மூடியிருந்தது. போர்வையை விலக்கி நித்திரையைத் தணிக்க அவள் விரும்பவில்லை. இணை இழந்த மறியாட்டின் கண்களைப்போல எப்போதும் கலங்கிக்கிடக்கும் அவளது கண்களால் என்னைப் பார்த்தாள். மருதன் வன்னிக்கு வந்துவிடவேண்டுமென்ற அவளின் விருப்பம் நிறைவேறிவிட்டால், அவள் ஓர் இளங்கன்றின் உற்சாகத்தோடு துள்ளியெழும்புவாள். மணியன் வீட்டுக்கு வந்தான். ‘ஒரு தேத்தண்ணி குடிச்சிட்டுப் போகலாமா?’ என்று கேட்டான். அம்மா மணியனுக்குத் தேத்தண்ணியும் வாய்ப்பனும் கொடுத்தாள். நாங்கள் கிளிநொச்சிக்குப் போக தமிழீழப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தில் ஏறினோம். எங்களுடைய பேருந்தைக் கடந்து மிக வேகமாகப் போராளிகளின் வாகனங்கள் சென்றன. மணியன் சொன்னான்,

“தமிழ்ச்செல்வண்ணா போகிறார்போலக் கிடக்கு.”

“அவரும் பாவம், உந்த வெளிநாட்டுக்காரரிட்ட கதைச்சுக் களைச்சுப்போயிருப்பார்” என்றேன்.

“நீ சொல்லுற மாதிரி கிடையாது. அவர் எவ்வளவு வேணுமெண்டாலும் கதைப்பார்.”

“அதுசரி. ஆனால் வெளிநாட்டுக்காரரிட்ட எங்கட பிரச்னையைக் கேக்கிறதுக்குக் காதில்லையே...”

பேருந்தில் மகளிர் படையணியைச் சேர்ந்த போராளிகள் ஏறினர். அவர்களுக்குள் சிரிப்பும் எள்ளலுமாக உரையாடல் நடந்துகொண்டிருந்தது. மூத்த போராளியொருவர், அவர்களைக் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். அந்தக் குழுவில் இருந்த அக்கா என்னைப் பார்த்து “எப்பிடி இருக்கிறியள் தம்பி?” எனக் கேட்டார்.

“நல்ல சுகம், நீங்கள்?”

“ம். எனக்கென்ன நல்லாய் இருக்கிறன். அம்மா என்ன செய்யிறா?”

“இருக்கிறா அக்கா. உங்கட பேர் என்ன?”

“அணிநிலா, அம்மாவிட்ட சுகம் கேட்டதாய்ச் சொல்லிவிடுங்கோ, விடுப்புக் கிடைக்கேக்க வாறன்.”

தவம் அத்தைக்கு மாவீரராகிப்போனது மூன்று பிள்ளைகள். மூத்தவளின் இயக்கப் பெயரும் அணிநிலாதான். மேஜர் அணிநிலா. அப்படியே அத்தையை உரித்துப் படைத்ததைப்போல சாயல்கொண்டவள். முல்லைத்தீவு சமரில் வீரச்சாவு அடைந்திருந்தாள். பரந்தன் வந்ததும் போராளிகள் இறங்கினர். அணிநிலா அக்கா கையசைத்து விடைபெற்றாள். நாங்கள் கிளிநொச்சி சென்றடைந்தோம். மணியன் என்னை கனகபுரத்திலுள்ள இயக்க முகாமொன்றுக்கு அழைத்துச் சென்றான்.

அங்கு என்னை மருதனின் தம்பியென அறிமுகப்படுத்திவைத்தான். சில நிமிடங்களில் ஒரு கைப்பேசியை எடுத்து வந்து யாருக்கோ அழைத்தான்.

“பக்கத்திலதான் இருக்கிறான், குடுக்கிறன் கதையுங்கோ” என்ற மணியன் என்னிடம் கைப்பேசியைத் தந்து “மருதன் கதைக்கிறார். கதை” என்றான்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 46

“ஹலோ, எப்பிடி இருக்கிறியள் மருதன்?”

“நான், நல்ல சுகம் ஆதீரா. அம்மா, அக்கா எல்லாம் எப்பிடி இருக்கினம்?”

“இஞ்ச எல்லாரும் சுகம். நீங்கள் கவனமாய் இருங்கோ. இஞ்சால வரவேண்டியதுதானே...”

“ஓம், எனக்கென்ன நான் கவனமாய்த்தான் இருக்கிறன். உங்கால உறுதியாய் வருவன். ஆனால், எப்பவெண்டுதான் தெரியேல்ல.”

“கெதியாய் வாங்கோ மருதன்.”

“அக்கா என்ன செய்யிறா?”

“யேசுதாஸின்ர பாட்டைக் கேட்டுக்கொண்டு இருக்கிறா.”

மருதன் எதுவும் கதைக்கவில்லை. சில நொடிகள் கழித்து “அவாவ, கேட்டதாய்ச் சொல்லிவிடு” என்றார்.

“ஓம், உறுதியாய் சொல்லுறன்” என்றேன்.

மருதனின் பக்கத்தில் அழைப்பு துண்டிக்கப்பட்டது. மணியன் கைப்பேசியை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று கொடுத்தான். மதியம் பாண்டியன் சுவையூற்றில் சென்று சாப்பிட்டோம். இருவரும் விசேஷமாகக் குளிர்களி உண்டோம். கிளிநொச்சி, எல்லோருக்குமானதாய் இந்த வாழ்வு படைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பறைசாற்றுவதைப்போல நேசத்துடன் இயங்கிக்கொண்டிருந்தது. எங்கும் போராளிகளின் நடமாட்டம். நான் மணியனிடம் சொன்னேன்.

“கிளிநொச்சியா, யாழ்ப்பாணமா... உனக்கு எது பிடிக்கும்?”

“எனக்கு கிளிநொச்சிதான், உனக்கு?”

“கிளிநொச்சியிலதான் ஒரு கம்பீரம் இருக்கு. ஆண்டாண்டு காலமாக எங்களைக் கொன்றொழித்த ஆக்கிரமிப்பாளனை விரட்டியடித்த சமர்க்களத்தின் நிமிர்வு இருக்கு.”

“நீ சொல்றது சரிதான். கிளிநொச்சியெண்டாலே அது தலைநிமிரத் துடிக்கிற எல்லாருக்கும் ஒரு ஊக்கச்சொல் மாதிரி.”

“நீ மருதனோட என்னைக் கதைக்கவைக்கத்தான் இஞ்ச கூட்டிக்கொண்டு வந்தனியே?”

“ஓம். மருதன்தான் சொன்னவர். உன்னோட கதைக்க வேணுமெண்டு.”

“மருதன் உறுதியாய் வருவாராம்.”

“என்ர வேண்டுதலும் அதுதான். வந்தால் சந்தோஷம்.”

நாங்கள் கிளிநொச்சியிலிருந்து வீட்டுக்கு மீண்டும் புறப்பட்டோம். பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். ஆனையிறவைக் கடந்துபோனது பேருந்து. மணியன் கேட்டான்.

“ஆதீரா, நான் இயக்கத்தில சேரலாமெண்டு முடிவெடுத்திருக்கிறன், நீ என்ன நினைக்கிறாய்?”

“அதில நான் என்னத்த நினைக்கிறது, போக விரும்பினால் போய்ச் சேரேன்.”

“எனக்கு எந்த யோசினையுமில்ல. உன்னட்ட சும்மா கேட்டுப் பார்த்தனான்.”

“இயக்கத்துக்குப் போறதெண்டால் யோசிக்கவெல்லாம் கூடாது. போய்டவேணும்.”

“கொஞ்ச நாளையில போய்டுவன். அப்பாவ கொஞ்ச நாளைக்குப் பார்க்கோணும். அவருக்கு எந்தவிதத்திலயாவது உதவியாய் இருக்க வேணுமெண்டு ஆசை.”

“நல்ல முடிவு” என்றேன்.

பேருந்தைவிட்டு இறங்கி, நேராக ஒரு கடையில் தேத்தண்ணி குடித்தோம். கஞ்சி மாதிரி இருந்தது. மணியன் கடைக்காரரிடம் சொன்னான்.

“கஞ்சிக் கடையெண்டு பலகையில எழுதிப்போடுங்கோ.”

கடைக்காரர், சுடுதண்ணியின் ஆவியை வாயால் ஊதிக்கொண்டு சொன்னார்.

“இஞ்ச உன்ர பகிடி மயிரை ஆரிட்டையாவது கொண்டே காட்டு. உனக்கு நான் ஆளில்லை.”

“இருங்கோ, இவங்கள் சுகாதாரப் பிரிவு காரங்களிட்ட சொல்லி, உங்கட கடைக்கு சீல் வெக்கச் சொல்லுறன்.” மணியன் காசைக் கொடுத்துவிட்டுச் சொன்னான்.

“ஆரெண்டாலும் வரட்டும். நான் போடுகிற தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ஒரு காலத்தில கிட்டுவே பாராட்டினவர். அதெல்லாம் உங்களுக்கு எங்கையடா தெரியப் போகுது... நீங்களெல்லாம் இப்ப முளைச்ச காளானுகள்.”

“சரி, அவங்கள் வரவிட்டு இதெல்லாத்தையும் சொல்லுங்கோ, என்ன முடிவு எடுக்கிறாங்கள் என்று பாப்பம்.”

மணியன் சிரித்துக்கொண்டு நடக்கத் தொடங்கினான். அந்தத் தேத்தண்ணிக் கடைக்காரர், எங்களுடைய சொந்தக்காரர். மணியனுக்கும் சொந்தம். அதுதான் இப்படி உரிமையோடும் எள்ளலோடும் கதைக்கிறான் என்று நினைக்கிறேன். நாங்கள் வீடு வந்து சேர கிட்டத்தட்ட அரை மணித் தியாலம் ஆகியிருந்தது. மாலை புலர்ந்திருந்தது. அம்மா வீட்டில் இல்லை. அக்காவும் இல்லை. பூட்டம்மா மட்டும் வீட்டில் இருந்தாள்.

“ரெண்டு பேரும் எங்க போய்ட்டினம்?”

“கொம்மா பக்கத்தில எங்கையோ போய்ட்டு வாறன் என்று சொல்லிப்போட்டுப் போனவள். இப்பதான் போய் கொஞ்ச நேரம் இருக்கும்.”

“அக்கா?”

“அவளைத்தான் காலமையிலருந்து காணேல்ல. ‘அம்பிகா வீட்ட போய்ட்டு வாறன்’ என்று சொல்லிப்போட்டு போனவள். இன்னும் வரேல்ல. கொம்மாவும் எல்லா இடமும் தேடிப் பாத்திட்டாள்.”

“பின்ன எங்க போய்ட்டா?”

கடவுள்... பிசாசு... நிலம்! - 46

“கொம்மா சொல்லுறாள். அவள் கொம்பனியில சேரத்தான் போய்ட்டாளாம்.”

“அக்கா அப்பிடிப் போக மாட்டா. அவாவுக்கு இயக்கத்தின்ர சில செயற்பாடுகள் பிடிக்காது.”

“எனக்கு என்ன மோனே தெரியும், கொம்மா சொன்னதைச் சொல்லுறன். அவள் வரட்டும். வந்ததும் நீயே கேளு.”

“இப்ப அம்மா எங்க போய்ட்டா?”

“எங்கையெண்டு சொல்லிப்போற பழக்கம் உன்ர கொம்மாவுக்கு இல்லையெண்டு தெரியாதோ?”

அக்கா இயக்கத்தில் போய்ச் சேர்ந்துகொண்டாளா? அவள் இயக்கத்துக்குப் போக மாட்டாள் என்று சொல்ல முடியாது. மருதனைப்போல அவளும் போராட விரும்பியிருக்கலாம். அம்மா வரும்வரை வீட்டிலேயே அமர்ந்திருந்தேன்.

ஒரு சின்னச் சாக்குப்பையில் மரக்கறியைச் சுமந்துகொண்டு அம்மா வந்தடைந்திருந்தாள். பொழுது சாயத் தொடங்கியிருந்தது. அம்மா பற்பொடியைப் போட்டு லாம்புச் சிமிலியைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

“அக்கா எங்க போய்ட்டா, எதாவது தகவல் தெரிஞ்சதே?”

“அவள் இயக்கத்தில போய் சேர்ந்திருக்கிறாள். கொட்டடியில இருக்கிற அரசியல்துறை பணிமனையிலதான் இருக்கிறாளாம்.”

“நான் போய் பார்த்திட்டு வரவா?”

“பார்க்க விடமாட்டினம்.”

“இல்லை, நான் அக்காவைப் பார்த்து ஒரு தகவல் சொல்லவேணும்.”

“நீ போய் கதைச்சிட்டு வா.”

நான் சைக்கிளை மிதிக்கத் தொடங்கினேன். மிக வேகமாகக் கொட்டடி அரசியல்துறை பணிமனைக்குள் போனேன். அங்கிருந்த பெண் போராளி ஒருவரிடம் அக்காவின் பெயரைச் சொல்லி சந்திக்க வேண்டுமென்று சொன்னேன்.

“என்ன விடயம்?” என்று கேட்டார்.

“எங்கட குடும்ப விஷயம்” என்றேன்.

``உதில இருங்கள்’’ என்று கைகாட்டினார். மாமரத்தின் கீழே இருந்த பிளாஸ்டிக் கதிரையில் அமர்ந்திருந்தேன். அக்கா வெளியே வந்தாள். என்னைப் பார்த்ததும் கண்கள் கலங்கின. நானும் அவளை அணைத்துக்கொண்டு அழுதேன்.

“அழாத ஆதீரா... அக்கா செத்துப்போகேல்ல. இயக்கத்துக்குத்தான் வந்திருக்கிறன்” என்றாள்.

நான் மருதன் சொன்னவற்றை ஒரு சொல் தவறாமல் சொன்னேன்.

அக்கா எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டாள். பிறகு உள்ளே சென்று வோக்மெனை எடுத்துவந்து என்னுடைய கையில்வைத்து “நீ வெச்சிரு. நான் விடுமுறையில வரேக்க வாங்கிக்கிறன்” என்றாள்.

அக்காவும் இயக்கமாகிவிட்டாள். நானும், அம்மாவும், பூட்டம்மாவும் வீட்டினில் இருந்தோம். அன்றைக்கு முழுவதும் அக்காவின் பிரிவினால் நித்திரையற்று புரண்டபடி இருந்தேன். அதிகாலையானதும் வீட்டின் வெளியே வந்து வாசலைப் பார்த்தேன்.

ஒரு போராளி நின்றுகொண்டிருந்தார்!

(நீளும்...)