மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கடவுள்... பிசாசு... நிலம்! - 66

கடவுள்... பிசாசு... நிலம்
பிரீமியம் ஸ்டோரி
News
கடவுள்... பிசாசு... நிலம்

பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் என்னை அழைத்துக்கொண்டு வீதிக்குப் போனார். அவரிடமிருந்த பெரிய பிரம்புப் பிடியிலான குடைக்குள் சேர்ந்து நடந்து சென்றேன்

இளவெயினியின் வித்துடல் துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டது. எங்களுடைய பிரிவின் முக்கியப் பொறுப்பாளர்கள் வந்திருந்தனர். நானும் பூம்பாவையும் மீண்டும் களமுனை நோக்கிச் செல்ல ஆயத்தமானோம். பூம்பாவைக்கு நிறைய யோசனைகளும் குழப்பங்களும் வந்தன. அவள் கொஞ்சம் பயந்துபோயிருக்கலாம். தன்னுடைய வீட்டுக்குச் சென்று இரண்டு நாள்கள் செலவிட அவள் விரும்பினாள். தன்னுடைய விடுமுறை கோரும் கடிதத்தைப் பொறுப்பாளரிடம் கையளித்தாள். ஆனால், உடனடியாகவே விடுமுறை மறுக்கப்பட்டது. நான் அவளை ஆற்றுப்படுத்தினேன். “இன்னும் பத்து நாள்கள் கழித்து மீண்டும் கேட்டுப் பார்க்கலாம். வா...” என்று அழைத்தேன். அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு வாகனத்தில் ஏறினாள். நாங்கள் ஆனையிறவைக் கடந்து போய்க்கொண்டிருந்தோம். இயக்கச்சி, கரந்தாய் பகுதிகளில் கடுமையான எறிகணை வீச்சுகள் தொடர்ந்த வண்ணமிருப்பதாகத் தகவல் வந்தது. வாகனத்தை அடர்ந்த மரத்தின் கீழே விட்டோம். வேவு விமானத்தின் பார்வையிலிருந்து தப்பித்தலே அப்போதைய நோக்கமாயிருந்தது. பூம்பாவை இயல்புக்கு வருவதற்குச் சிரமப்பட்டாள் என்றே தோன்றியது. இளவெயினியின் வீரச்சாவு இவளைக் கொஞ்சம் அச்சுறுத்திவிட்டது. மழையின் இரைச்சல் கூடியிருந்தது. இருண்டிருக்கும் பொழுதின்மீது மின்னல் விழுந்து மறைந்தது. எறிகணை வீச்சு குறைந்திருந்தது. வாகனம் புறப்பட்டது.

“தூரி, நான் இந்தத் தடவை வீரச்சாவு அடைஞ்சிடுவனெண்டு உள் மனசு சொல்லுது” பூம்பாவை சொன்னாள்.

“உள் மனசு சொல்லுறதையெல்லாம் நம்பாத, அது உனக்கொண்டு சொல்லும் காலத்துக்கு இன்னொண்டு சொல்லும்.”

“அப்பிடி நான் வீரச்சாவு அடைந்தால், நீ இளவெயினிக்கு எப்பிடி வந்தியோ, அது மாதிரி வரவேணும்.”

“நான் மட்டும் என்ன இறவா வரம் வாங்கிக்கொண்டா சண்டையில வந்து நிக்கிறன். உனக்கு முதல் நான் வீரச்சாவு அடைந்தால் நீ என்ன செய்வாய்?” என்று பூம்பாவையிடம் கேட்டேன். அவள் முகத்தைக் கோபமாக வைத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து,

“இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்

பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்

மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்”

என்ற இந்தப் பெரியபுராணப் பதிகத்தைப் பாடினேன். அவளுக்கு அர்த்தம் தெரிந்திருந்தது. பூம்பாவை கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீரால் எனை நனைத்தாள். வீதியால் போராளிகளின் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. நாங்கள் சென்றுசேர வேண்டிய இடத்தை அடைந்தோம். அதன் பிறகு நடந்து செல்லவேண்டிய தூரம் விரிந்துகிடந்தது. எங்களுடைய படையணியைச் சேர்ந்த போராளிகளில் இன்னும் சிலர் விழுப்புண் அடைந்தும் வீரச்சாவும் ஆகியிருந்தனர் என்று அறிய முடிந்தது. போர்க்களத்தில் அழுகையில்லை. குருதி பூக்கும், நிலவு சிவக்கும், இருள் வெறிக்கும், பகல் நெரிக்கும் இந்தப் போர்க்களத்தில் குன்றென வித்துடல்கள் குவிந்தாலும் எஞ்சிய தீரர்கள் அழுவதில்லை. அழுவதால் எஞ்சுவது எதுவுமில்லை என்றே ஆயுதம் ஏந்திய வீரயுகத்தின் புதல்வர்கள் நாங்கள். பூம்பாவை தன்னுடைய துவக்கை எடுத்துக்கொண்டு போகலாம் என்றாள். நானும் அவளும் முன்னரங்கை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 66

பிரதேச அரசியல்துறைப் பொறுப்பாளர் என்னை அழைத்துக்கொண்டு வீதிக்குப் போனார். அவரிடமிருந்த பெரிய பிரம்புப் பிடியிலான குடைக்குள் சேர்ந்து நடந்து சென்றேன். அவர் அண்ணாவின் வீரச்சாவுத் தகவலை என்னிடத்தில் கூறினார். அவரது குரலும் கண்களும் சோர்ந்துபோயிருந்தன. அவர் சொல்லி முடித்ததும் மழை இன்னும் வலுத்துப் பெய்தது. அண்ணா வீரச்சாவு என்பதை அம்மாவுக்குச் சொல்ல வேண்டும். ஆனால், அவளுக்குச் சொல்ல முதல் பூட்டம்மாவுக்குச் சொல்லிவிட வேண்டுமென நினைத்துக்கொண்டேன். மழைக்கு அம்மாவும் பூட்டம்மாவும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். பொறுப்பாளர் பிரம்புப் பிடியிலான குடையோடு மீண்டும் வீட்டுக்குள் வந்தார். நான் உள்ளூரக் கலங்கிப்போயிருந்தேன். அலைகளின் சீற்றம் அடங்கிய கடலைப்போல மனதுக்குள் எதுவுமில்லை. ஈரக் காகிதத்தின் வாசனையைப்போல உடலுக்குள் ஏதோ அமிலம் சுரக்கிறது. துயரமடர்ந்த நேரங்களில் நான் அப்படி உணர்கிறேன். நானே அம்மாவிடமும் பூட்டம்மாவிடமும் சொன்னேன்.

“அண்ணா வீரச்சாவு...”

பொறுப்பாளர் பார்வையை நிலத்தின்மீது குவித்திருந்தார். அம்மா அடிவயிற்றில் அடித்துக்கொண்டு தலைவிரி கோலமாக நிலத்தில் விழுந்து அழுதாள். அம்மாவின் ஒப்பாரி கேட்டு சுற்றத்தில் இருந்தவர்கள் வந்தனர். ‘அண்ணா வீரச்சாவு’ என்கிற செய்தியை எல்லோரும் அறிந்தனர். அவர்களுக்கு அக்காவா, அண்ணாவா என்கிற கேள்வி இருந்ததினால் நான் மீண்டும் மீண்டும் ``அண்ணா... அண்ணா...’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தேன். பிரதேசப் பொறுப்பாளர் அடுத்தகட்டத்துக்கான வேலைகளைச் செய்துமுடிக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார். அம்பிகா, அம்மாவுடன் இருந்தாள். வெவ்வேறு இடங்களில் இடம்பெயர்ந்து வாழும் பன்னிச்சையடி கிராமத்தின் சனங்களுக்குப் பேருந்துகளிலும், சிலர் நேரடியாகவும் சென்று செய்தி சொல்லினர்.

அக்கா, களத்திலிருந்து வர வேண்டும். அவளுடைய பிரிவின் செயலகத்துக்குத் தகவல் சொல்லப்பட்டது. அண்ணாவின் வித்துடல் இரவு வந்துவிடுமென பொறுப்பாளர் சொன்னார். அம்மா, அண்ணாவின் பெயரைச் சொல்லிச் சொல்லி அரற்றிக்கொண்டிருந்தாள். சனங்கள் கூடிவிட்டனர். பழக்கமாகிப்போன கூடுகை நிகழ்வுதான். இன்று எங்களுடைய வாசலில் இந்தக் கூடுகை. நாளை இன்னொருவரின் வாசலில். இந்தக் காலத்தின் இயற்கையிது. பந்தல் போடப்பட்டது. சொந்த வீடற்று, ஊரற்று பிள்ளையை வழியனுப்பப் போகிறோமென்கிற நினைப்பு, இழப்பைவிடப் பெரிதாக எங்களை ஆட்கொண்டது. அண்ணாவின் வித்துடல் வருவதற்கு முன்பாகவே, அம்மாவுக்குத் தெரிந்த நிறைய போராளிகள் வந்தனர். அவர்களில் பாதிப் பேரை அப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன். பூட்டம்மா அழவில்லை. அவள் அண்ணாவுக்காகக் காத்திருந்தாள். அவனுக்குக் கையளிக்க ஒரு சொல்லை மட்டுமே தான் வைத்திருப்பதாகச் சொன்னாள். மழை விடுவதாயில்லை. சனங்கள் அவதிப்பட்டனர். எல்லோரும் பந்தலுக்குள்ளேயே அமர்ந்திருந்தனர். போராளிகள் மழையங்கி அணிந்திருந்தனர். `மழை இப்படிப் பெய்தால், சரியான கஷ்டமாயிடும்’ என்று சிலர் கதைத்தனர். வேறு இடங்களில் இருந்த சொந்தக்காரர்கள் அப்போதுதான் வரத் தொடங்கியிருந்தனர். வீட்டின் முகப்பினுள்ளே நுழைகிறபோதே அழுகை பீறிட ஓடிவந்தனர். தாய்மார்களின் ஒப்பாரியில் மழை உலர்ந்தது. வானம் தெளிந்தது. மண்ணுக்குள் இறங்கியது போக, மீதி மழைநீர் வாய்க்காலுக்கு ஓடிக் கடந்தது. அம்மா கண்களைத் துடைத்துக்கொண்டு வந்திருந்த போராளிகளுக்கு அருகில் போய் “தேத்தண்ணி போடவா?” என்று கேட்டாள். அவர்கள் வேண்டாம் என்று மறுக்க எண்ணுகையில் ‘வெறுங்கால் நந்தன்’ சொன்னார்... “அக்கா நீ வழமையாய்ப் போடுகிற மாதிரி, நல்ல சாயம்விட்டு ஒரு தேத்தண்ணி ஊத்து. எல்லாருமாய்க் குடிப்பம்.”

தாழ்வாரத்தில் அடுக்கப்பட்டிருந்த விறகுகளை எடுத்துக்கொண்டு அம்மா வீட்டுக்குள் நுழைந்தாள். எங்களுடைய சொந்தக்காரப் பெண்மணி ஒருத்தி வந்து சொன்னாள்.

கடவுள்... பிசாசு... நிலம்! - 66

“அக்கா துக்க வீட்டில அடுப்பு மூட்டக் கூடாது.”

“என்ர பிள்ளை மண்ணுக்காக மடிஞ்சிட்டான். அதுக்காக நான் துக்கப்பட மாட்டான். நான் அழுவன். அது பிள்ளையை இழந்த கருப்பையோட வெக்கை. அதுக்காக இதை துக்க வீடென்று ஒருநாளும் நினைக்க மாட்டன். என்ர வீட்டில ஒரு போராளி வந்து தேத்தண்ணி குடிக்காமல், சாப்பிடாமல் போனால் அண்டைக்குத்தான் நான் துக்கப்படுவன். அண்டைக்குத்தான் நான் செத்திருப்பன்” என்ற அம்மாவின் குரலில் எந்தக் கலக்கமும் இல்லை. அவள் அடுப்பை மூட்டி நீரைக் கொதிக்கவைத்தாள். தீ நிறம் கொண்டு எரிந்தது. தண்ணீரின் கொதிப்பை அது மெல்ல மெல்ல உணர்த்தியது. அம்மா எழுந்து வந்து என்னை அழைத்தாள். அம்பிகா ஏற்கெனவே தேநீர்க் கோப்பைகளைக் கழுவி ஆயத்த நிலையில் வைத்திருந்தாள். அம்மா தேத்தண்ணியைத் தயாரித்து எல்லோருக்கும் அளிக்கும்படி என்னிடமும் அம்பிகாவிடமும் சொன்னாள். போராளிகள் நின்ற இடத்துக்கு எடுத்துச் சென்று கொடுத்தோம். அம்மா அவர்களைப் பார்த்துப் புன்னகைத்தபடியிருந்தாள். ‘வெறுங்கால் நந்தன்’ அம்மாவை அழைத்து “மகனின்ர இயக்கப் பெயர் என்ன” என்று கேட்டிருக்கிறார். அம்மாவுக்குத் தெரியவில்லை. என்னை அழைத்து பெயரைக் கேட்டாள்.

“சோழ மறவன்” என்றேன்.

வெறுங்கால் நந்தன் “சோழ மறவனா?” என்று வியந்து கேட்டார்.

“ஓம். அப்பிடித்தான் ஒருக்கால் அண்ணா சொன்னவர்” என்றேன்.

பூம்பாவையும் நானும் முன்னரங்கைச் சென்று அடைந்த சில நிமிடங்களில் எனக்கொரு தொடர்பு வந்தது. “நீங்கள் மீண்டும் பின்னுக்கு வர வேண்டும். அவசரம்!” என்பதே அந்தத் தொடர்பில் எனக்குக் கிடைத்த உத்தரவு. நான் பூம்பாவைக்கும் சொல்ல முடியாது மிக வேகமாக அங்கிருந்து மீண்டும் நடக்கலானேன். என்னோடு இன்னொரு போராளியும் வந்தார். அவரது பெயர் நல்லாள். அவருக்கும் என்ன விடயமென சொல்லப்படவில்லை. உண்மையில் இது போன்ற குழப்பங்களோடு தூரத்தை நடந்து கடப்பது கொடுமையானது. நானும் நல்லாளும் நடந்து போய்க்கொண்டிருந்தோம். அவளது கையில் ஏற்கெனவே காயம்பட்ட தழும்புகள் இருந்தன. அவரிடம் கேட்டேன்.

“நீங்கள் இயக்கத்துக்கு வந்து எத்தினை வருஷம்?”

“பத்து வருசத்துக்கு மேல, ஏன் கேக்கிறியள்?”

“காயப்பட்டிருக்கிறியள், நிறையத் தழும்புகள் இருக்கு.”

“ஓம்... சும்மா சின்னச் சின்ன காயங்கள்தான்.”

நாங்கள் கட்டளைச் செயலகத்தை வந்தடைந்தோம். எங்களை ஏற்றிச் செல்ல வாகனம் காத்திருந்தது. ஆனால், எதற்காக எங்கே என்றெல்லாம் சொல்லப்படவில்லை. நாங்கள் இருவரும் குழம்பிப் போயிருந்தோம். எங்கள் இருவருக்கும் சேர்த்துச் சொல்லப்பட்ட செய்தி ஒன்றெனினும் உறவு வேறாக இருந்தது. என்னிடத்தே “மேஜர் சோழமறவன் என்கிற உங்களுடைய சகோதரன் வீரச்சாவு அடைந்தார்’’ என்றனர். எனக்கருகில் நின்றுகொண்டிருந்த நல்லாள் “ஐயோ என்ர சோழன்” என்று களத்திடை அலறித் துடித்தாள். அண்ணாவின் காதலியோடு அவனது வித்துடலைப் பார்க்க பயணிக்கத் தொடங்கினேன்.

களத்தில் சண்டை தொடங்கியது!

(நீளும்...)