
- பீதியில் அமெரிக்கா... பின்னணி என்ன..?
ஒசாமா பின்லேடன், அல்-ஜவாஹிரி என அடுத்தடுத்து அல்-கொய்தாவின் தலைவர்களையெல்லாம் அழித்தொழித்துவிட்டோம் என நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்த அமெரிக்காவுக்குப் பேரிடியாக வந்திறங்கியிருக்கிறது ஐ.நா-வின் அதிர்ச்சி தரும் அறிக்கை ஒன்று. உலக நாடுகள் பலவற்றாலும் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடைசெய்யப்பட்டிருக்கும் அல்-கொய்தா, தனக்கான புதிய தலைவரை மிகவும் ரகசியமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது எனும் செய்தியை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது ஐ.நா. யார் அந்தத் தலைவர்... அவர் பின்னணி என்ன..?

ராணுவ அதிகாரி டூஅல்-கொய்தா தலைவன்!
அமெரிக்காவால் தலைக்கு 10 மில்லியன் டாலர் விலைவைக்கப்பட்டு, மூன்று தசாப்தங்களாகத் தேடப்பட்டுவரும் பயங்கரவாதியான சைஃப் அல்-அடெல் (Saif al-Adel), தற்போது அல்-கொய்தாவின் சக்திவாய்ந்த தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எகிப்து நாட்டின் ராணுவ வீரராக வாழ்வைத் தொடங்கிய சைஃப் அல்-அடெல் ஒரு பொறியியல் பட்டதாரி. அதுமட்டுமல்ல, உலக அரங்கில் தேடப்பட்டுவரும் அதிபயங்கரக் குற்றவாளி. 1981-ம் ஆண்டு எகிப்து நாட்டின் அப்போதைய அதிபர் அவர் அல்-சதாத் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியிலேயே அடெலின் முதல் தீவிரவாத நடவடிக்கை தொடங்கியது.

எகிப்து ராணுவத்தில் பணியாற்றிவந்த அடெல், 1990-களில் சூடான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, அல்-கொய்தா அமைப்புக்குப் படை திரட்டியதோடு, அந்த நாடுகளில் தீவிரவாதப் பயிற்சி முகாம்களை அமைத்து, பயிற்சியும் கொடுத்துவந்தார். பின்னர் 1991-ல் அல்-கொய்தாவுடன் தன்னை முழுவதுமாக இணைத்துக்கொண்ட பிறகு அடெல் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் மிகப் பயங்கரமானவை. குறிப்பாக, அமெரிக்காவுக்கு எதிரானவை. 1993-ல் சோமாலியாவிலிருந்த அமெரிக்க ராணுவப் படைத் தளங்களைத் தாக்கி, 18 அமெரிக்கர்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்தார். இந்தத் தாக்குதல் சம்பவம் அமெரிக்கா - ஐ.நா-வின் அமைதி காக்கும் படையை சோமாலியாவைவிட்டே வெளியேறச் செய்தது. அமெரிக்க ராணுவ வரலாற்றில் கறுப்பு நாளாகப் பார்க்கப்பட்ட இந்தச் சம்பவத்தை `Black Hawk Down’ எனக் குறிப்பிட்டது அந்த நாடு.
அதைத் தொடர்ந்து, 1998-ம் ஆண்டு, ஆப்பிரிக்க நாடுகளான தான்சானியா, கென்யாவிலிருந்த அமெரிக்கத் தூதரகங்கள்மீது மிகப்பெரிய குண்டு வெடிப்புத் தாக்குதல் அடெல் தலைமையில் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில், 224 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால், எஃப்.பி.ஐ அடெலைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அதேநேரம், அமெரிக்காவுக்கு எதிராக அடெலின் பயங்கரவாத நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட அப்போதைய அல்-கொய்தா தலைவரான ஒசாமா பின்லேடன், தன்னுடைய தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக அடெலை நியமித்தார். அதிலிருந்து அல்-கொய்தா அமைப்புக்குள்ளும் அடெலின் செல்வாக்கு வளரத் தொடங்கியது.

புதிய தலைவராகத் தேர்வு...
இந்த நிலையில், 2001-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, அல்-கொய்தா தலைவர் ஒசாமாவின் உயிருக்குக் குறிவைத்தது அமெரிக்கா. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, 2011-ல் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்வைத்துக் கொல்லப்பட்டார். அதன் பின்னர், ஒசாமா-வுக்கு வலதுகரமாகச் செயல்பட்ட அய்மன் அல்-ஜவாஹிரியை தங்களின் புதிய தலைவராக நியமித்தது அல்-கொய்தா. பல ஆண்டுகளாக அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களிலிருந்து தப்பிவந்த ஜவாஹிரி 2022, ஜூலை மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமான ஏவுகணைத் தாக்குதலால் ஆப்கானிஸ்தானில்வைத்துக் கொல்லப்பட்டார். எனினும் ஆறு மாதங்களுக்கு மேலாக அல்-ஜவாஹிரி மரணம் குறித்தோ, புதிய தலைமை குறித்தோ எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் ரகசியம் காத்துவந்தது அல்-கொய்தா. இந்த நிலையில், அல்-கொய்தா அமைப்பின் புதிய தலைவராக சைஃப் அல்-அடெல் போட்டியின்றி தேர்வாகியிருப்பதாக திடுக்கிடும் தகவலை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருக்கிறது.

“இந்த அறிவிப்பை அல்-கொய்தா அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. ஒசாமா, ஜவாஹிரியைப்போல சைஃப் அல்-அடெலையும் அமெரிக்கா கொல்லக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பை அல்-கொய்தா மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது. அமெரிக்காவின் மோஸ்ட் வான்டட் லிஸ்ட்டில் அடெல் பெயர் இருந்தாலும், அடெலின் ஒரு சில பழைய புகைப்படங்கள் மட்டுமே அமெரிக்காவின் வசம் இருக்கின்றன.
அந்த அளவுக்கு அடெல் குறித்த எந்தத் தகவலும் வெளியில் கசிந்துவிடாமல் ரகசியம் காக்கிறது அல்-கொய்தா. இருப்பினும், இரான் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அடெல் தலைமறைவாக இருப்பதாகவும், அங்கிருந்தபடியே அல்-கொய்தா அமைப்பை வழிநடத்தி வருவதாகவும் ஐ.நா தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. எப்படியிருப்பினும், அமெரிக்கா தன் மோசமான எதிரியை மீண்டும் எதிர்கொள்ளவிருக்கிறது. அடெலின் உயிரைக் குறிவைத்து அரபு நாடுகளின் வானத்தில் தன் ஹெல்ப் ஃபயர் ஏவுகணைகளை வட்டமிடச் செய்திருக்கிறது அமெரிக்கா” என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.
போரையும் பயங்கரவாதத்தையும் அரசுகளோ, அமைப்புகளோ யார் கையிலெடுத்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள்தான்!