Published:Updated:

வாக்குப்பெட்டியை மாற்றியதாக குற்றச்சாட்டு - ஆலங்காயத்தில் அதிமுக போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாக்குப்பெட்டிகளை மாற்றியதாக வெளியான சி.சி.டி.வி காட்சி
வாக்குப்பெட்டிகளை மாற்றியதாக வெளியான சி.சி.டி.வி காட்சி

தி.மு.க. மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான தேவராஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்திலிருக்கும் ஆலங்காயம், மாதனூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களிலும் பல்வேறு பிரச்னைகளுடன் வாக்குப்பதிவு நடந்துமுடிந்தது. ஆலங்காயம் ஒன்றியத்திலிருக்கும் 27 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், ஐம்பதாயிரம் வாக்குகளுக்கான 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகள், ஐந்தாயிரம் வாக்குகளுக்கான 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் மற்றும் 237 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் 161 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. பதிவான வாக்குகள் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து சீலிடப்பட்டு ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்று காலை 11 மணியளவில், திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ-வுமான தேவராஜி கட்சிக் கொடி பொருத்தப்பட்டிருந்த காரில் தனது ஆதரவாளர்கள் சிலருடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜி
தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜி

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளைப் பிரித்து பார்த்ததாகவும், அதில் சில வாக்குப்பெட்டிகளை எடுத்துச்சென்று திரும்பக் கொண்டுவந்து வைத்ததாகவும் தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜிமீது அ.தி.மு.க குற்றம் சாட்டுகிறது. ‘‘மையத்துக்குள் எம்எல்ஏ-வை அனுமதிக்கக்கூடாது என்பது வரைமுறை. என்றாலும் அவர் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ. உள்ளேயே அனுமதித்திருக்கக் கூடாது’’ என்றுகூறி அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் மையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். சம்பவ இடத்துக்கு வாணியம்பாடி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமாரும் விரைந்து வந்து தேர்தல் அதிகாரிகளிடம் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

‘‘எதன் அடிப்படையில் தி.மு.க மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான தேவராஜியை உள்ளே அனுமதித்தீர்கள்?’’ என்றுகேட்டதுடன் அதிகாரிகளின் அனுமதியுடன் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். அப்போது, சரியாக 12.21 மணிக்கு மூன்று வாக்குப் பெட்டிகளை மைய கட்டடத்தின் மேலிருந்து கீழே கொண்டுச் செல்வதும், பிறகு திரும்ப கொண்டுவந்து வைப்பதும் கேமராவில் தெள்ளத்தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன. இதனால், அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமாரும் போராட்ட களத்தில் குதித்தார். இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை மையத்தின் முன்பு போடப்பட்டிருந்த நாற்காலிகளையும் உடைத்து தூக்கியெறிந்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. ‘‘வாக்குப்பெட்டிகளுக்குள் இருந்த வாக்குச்சீட்டுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், எனவே மறு தேர்தல் நடத்தவேண்டும். தி.மு.க. மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான தேவராஜியை உடனடியாக கைது செய்ய வேண்டும்’’ எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பதற்றம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக-வினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக-வினர்.

இதுதொடர்பாக, வாணியம்பாடி தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமாரிடம் பேசினோம். ‘‘மதியம் 12 மணிக்கு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு சீல் வைக்கப்பட இருந்ததால் அனைத்து வேட்பாளர்களுக்கும் போன்மூலம் அதிகாரிகள் அழைப்புவிடுத்துள்ளனர். அதற்குள் 10.45 மணியளவில் தி.மு.க மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான தேவராஜி அங்கு வந்திருக்கிறார். அவரை மட்டும் உள்ளே அனுமதித்துள்ளனர். இதனைப் பார்த்த மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களையும் உள்ளே அனுமதிக்குமாறு கூறியுள்ளனர். ஸ்டாக் ரூமிலிருந்து மூன்று வாக்குப் பெட்டிகளை எடுத்துவந்து அவர்களுக்கு ஏற்றாற்போல் வாக்குகளை மாற்றி கொண்டுச்சென்று வைத்துள்ளனர். வாக்குப் பெட்டிக்கு மேல் ஒரு கவர் போடப்பட்டிருக்கிறது. அதன்மேல் வெள்ளை நிறப் பையை போடப்பட்டு அதற்குமேல் மூன்று சீல்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. தேவராஜியின் ஆதரவாளர்கள் எடுத்துச்சென்ற மூன்று வாக்குப்பெட்டிகளிலும் சீல் அகற்றப்பட்டிருக்கிறது. வெறும் பெட்டிகள் மட்டுமே கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தகவலறிந்து, பிரச்னை ஏற்பட்ட பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளிலும் இருந்த கவர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. மொத்தமாகவே அனைத்து வாக்குப் பெட்டிகளையும் திமுக-வினர் மாற்றியிருக்கிறார்களா? அல்லது மூன்று பெட்டிகளை மட்டும் மாற்றி வைத்துள்ளனரா? என்றும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜிமீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தேர்தல் நடத்தும் அதிகாரி (ஆர்.ஓ) காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதேசமயம், திமுக-வினர் வாக்குப் பெட்டிகளை மாற்றுவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் ஆலங்காயம் பி.டி.ஓ சிவகுமாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜி தனது இளைய மருமகள் காயத்ரி பிரபாகரனை ஏழாவது வார்டு கொத்தக்கோட்டை ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு களமிறக்கியிருக்கிறார்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார்
அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார்

இந்த வார்டில் மருமகளை வெற்றிப் பெற வைப்பதற்காகவும் வாக்குச்சீட்டுகளை மாற்றிருக்கலாம் என்றும் எங்களுக்குத் தோன்றுகிறது. தோல்விப் பயத்தில் இப்படி செய்கிறார்கள். வாக்கு எண்ணிக்கையின்போது, குளறுபடி கண்டறியப்பட்டால் நிச்சயமாக அந்த பதவிக்கு மறு தேர்தல் நடத்தியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்’’ என்றார் அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார்.

குற்றச்சாட்டு குறித்து திருப்பத்தூர் மாவட்டச் செயலாளரும் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏ-வுமான தேவராஜியிடம் விளக்கம் கேட்டோம். ‘‘தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்கள். தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார்கள். ஆலங்காயம் பிடிஓ-வை சஸ்பெண்ட் செய்திருக்க மாட்டார்கள். பண்ணவும்கூடாது. சஸ்பெண்ட் பண்ணிவிட்டும் போகட்டும். அதனால், எங்களுக்கு என்ன இருக்கிறது? மக்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளனர். தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிப்பெறுவதில் எந்த பிரச்னையும் கிடையாது. ஆலங்காயத்திலிருக்கும் 18 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிப்பெற தயாராக இருக்கிறார்கள். அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி, லோக்கல் எம்.எல்.ஏ செந்தில்குமார் தோல்வி பயத்தில் பிரச்னை ஏற்படுத்திவருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற அதிமுக-வினர் மதுபோதையில் இருக்கிறார்கள். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை என்பதால் நான் அங்குச் சென்றேன். கேட் அருகில் 5 நிமிடங்கள்தான் நின்றேன். தேர்தல் அதிகாரியை அழைத்து, ‘மழை வருகிற மாதிரி இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்வதற்கான கார்டுகளை எப்போது தருவீர்கள்’ என்று கேட்டுவிட்டு அங்கிருந்துப் புறப்பட்டு வந்துவிட்டேன். சுற்றிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. வாக்குப் பெட்டிகளை இரவில் மாற்றினார்கள் என்றால்கூட சொல்வது நம்பும்படி இருக்கும். பகலில் எப்படி எடுத்துச்சென்று மாற்ற முடியும். அதிமுக-வினர் பொய் பேசிவருகிறார்கள்’’ என்றார் தி.மு.க எம்.எல்.ஏ தேவராஜி.

பிரச்னை ஏற்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அமர்குஷ்வாஹா, மாவட்ட எஸ்.பி பாலகிருஷ்ணன் ஆகியோரும் நேரில்வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதால், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு