அறிவிப்புகள்
கார்ட்டூன்
சமூகம்
Published:Updated:

பணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்!

பணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பணம் இருக்கும் எவரும் ஆட்சியைப் பிடித்துவிடலாம்!

ஒரே தேசம்... ஒரே தேர்தல்

இரண்டாவது முறையாகப் பிரதமர் பதவி ஏற்றதும் நரேந்திர மோடி நடத்திய முதல் அனைத்துக் கட்சிக் கூட்டம், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியோ, விவசாயிகள் பிரச்னை பற்றியோ, நாட்டை உலுக்கும் வறட்சி பற்றியோ விவாதிக்கவில்லை. இந்தியா முழுக்க எல்லா தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக ‘ஒரே தேசம்... ஒரே தேர்தல்’ என்ற விஷயத்தை விவாதிக்கவே இந்தக் கூட்டத்தைக் கூட்டினார் மோடி. புதிய மக்களவைத் தொடங்கிய முதல் நாளில், ஜனாதிபதி நிகழ்த்திய உரையிலும் இந்த விஷயமே இடம்பெற்றுள்ளது. மோடி எந்த அளவுக்கு இதில் சீரியஸாக இருக்கிறார் என்பது புரிகிறது.

இதற்குக் காரணங்கள் உண்டு. நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. ராஜஸ்தான் மாநிலத்தின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பி.ஜே.பி கைப்பற்றியது. பெரும்பாலான தொகுதிகளில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி. மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத்தின் மகன் போட்டியிட்ட சிந்த்வாரா தவிர மற்ற 28 தொகுதிகளிலும் பி.ஜே.பி வென்றது.

அனைத்துக்கட்சிக் கூட்டம்
அனைத்துக்கட்சிக் கூட்டம்

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தையும் இப்படி ஒப்பிடலாம். 2017 டிசம்பரில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, பி.ஜே.பி தோற்றுவிடும் எனப் பலரும் சொன்னார்கள். மோடி பிரசாரத்தின்போது கண்ணீர்விட்ட சம்பவம்கூட நடந்தது. 182 உறுப்பினர் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில், 81 இடங்களை வென்ற காங்கிரஸ், நூலிழையில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்தது. நாடாளு மன்றத் தேர்தலில், அங்கு 26 தொகுதிகளையும் பி.ஜே.பி வென்றது. காங்கிரஸுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

‘‘அப்படிச் செய்தால், மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால் எல்லா மாநில அரசுகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டுமா, சில மாநிலங்களில் அரசுகள் கவிழ்ந்தால், மத்திய அரசையும் கலைக்க வேண்டுமா?’’ என்ற கேள்விகளைப் பலர் எழுப்புகிறார்கள். இதற்குத்தான் சட்ட ஆணையம் சாமர்த்தியமான ஒரு வழியைச் சொல்லியிருக்கிறது. அதாவது, அரசியல் சட்டத்தில் 1985-ம் ஆண்டு செய்யப்பட்ட 52-வது திருத்தமான கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே ஒன்றுமில்லாமல் செய்யச் சொல்கிறது.

‘கட்சிக் கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தால் எம்.எல்.ஏ அல்லது எம்.பி-யின் பதவி பறிபோகும்’ என்ற விஷயத்தைச் சட்ட ஆணையம் திருத்தச் சொல்கிறது. அதன்பின், ஓர் அரசின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தால், கூடவே ‘நம்பிக்கைத் தீர்மானம்’ ஒன்றையும் கொண்டுவர வேண்டும். நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஜெயித்தால் முதல்வரோ, பிரதமரோதான் பதவி இழப்பார்கள். அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் அல்லது எம்.பி-க்கள் தங்கள் கட்சிகளின் கொறடா உத்தரவை எல்லாம் புறக்கணித்துவிட்டு, வேறு யாராவது ஒருவர்மீது நம்பிக்கைவைத்து வாக்களித்து அவரை முதல்வர் அல்லது பிரதமர் ஆக்குவார்கள். அதாவது, ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு இருக்கும். ஆள்பவர்களே மாறுவார்கள்.

இந்தச் சூழலில், சில கேள்விகள் எழுகின்றன.

  • கட்சித் தாவல் தடைச் சட்டம் வலிமையாக இருக்கும்போதே அதைக் கேலிக்கூத்து ஆக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. ‘நிலையான அரசு’ என்ற பெயரில், அந்தச் சட்டத்தைப் பல் இல்லாத பாம்பு ஆக்கினால், பணம் இருக்கும் எவரும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியைப் பிடித்துவிட முடியும் அல்லவா?

  • ‘ஒவ்வொரு பகுதியிலும் நடக்கும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, கசப்பான முடிவுகள் எதையும் அரசால் எடுக்க முடியவில்லை’ என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. மக்கள் விரும்பாத, மக்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று பயப்படுகிற அளவுக்குக் கசப்பான முடிவுகளை, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசு ஏன் எடுக்க வேண்டும்?

  • ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், எதையும் செய்ய முடியவில்லை’ என்கிறார்கள். தேர்தல் எப்போது வரப்போகிறது என்று எல்லோருக்குமே தெரியும். அதற்கு முன்பாக நலத்திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் யார் தடுக்கிறார்கள்?

  • தேசப் பாதுகாப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை போன்றவை நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்னையாக விவாதிக்கப்படும். சட்டம் - ஒழுங்கு, கல்வி, மின்தடை, குடிநீர்ப் பிரச்னை போன்றவை சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பிரச்னையாகப் பார்க்கப்படும். வெங்காய விலைகூட ஆட்சியைக் கவிழ்த்த வரலாறு உண்டு. இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தும்போது, தங்களின் தேவையை உணர்த்தும் வாய்ப்பை மக்கள் இழக்கிறார்கள். 1999 முதல் 2014 வரை இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற்ற மாநிலங்களில் ஐ.டி.எஃப்.சி இன்ஸ்டிட்யூட் ஓர் ஆய்வு நடத்தியது. ‘மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சிக்கு மக்கள் வாக்களிக்க 77 சதவிகித வாய்ப்பு உள்ளது’ என அதில் தெரியவந்தது. 1989 முதல் இப்படி இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடைபெற்ற 31 மாநிலங்களில் இன்னோர் ஆய்வு நடத்தப்பட்டது. ஜக்தீப் சோக்கர், சஞ்சய் குமார் ஆகியோர் நடத்திய இந்த ஆய்வு, ‘80 சதவிகித மக்கள் இரண்டு இடங்களுக்கும் ஒரே கட்சியைத் தேர்வு செய்கிறார்கள்’ என்ற உண்மையை உணர்த்தியது. இதுபோன்ற ஒரு முடிவையே மோடி அரசு எதிர்பார்க்கிறதா?

  • உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு இந்தோனேஷியா. இதேபோன்ற ஒரு சட்டம் அங்கு இந்த ஆண்டு அமலாகி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடைமுறையில் மாபெரும் குழப்பங்கள் ஏற்பட்டன. ‘ஒரே தேசம்... ஒரே தேர்தல்’ எனத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அன்வர் உஸ்மான், தன் தீர்ப்பை நினைத்து வருத்தம் தெரிவிக்கும் அளவுக்குக் குழப்பங்கள். இந்தியாவில் அந்த அளவுக்குக் குழப்பங்கள் இருக்காது என்றாலும் கூடைக்கும் முரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் வாக்களித்த மக்கள் இருக்கும் தேசம் இது. மக்கள் தேர்தலில் தெளிவாக முடிவெடுக்க வாய்ப்பு தரலாமே?

ஸ்வீடன், இந்தோனேஷியா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின், ஹங்கேரி, பெல்ஜியம், போலந்து, ஸ்லோவேனியா, அல்பேனியா என உலகின் 10 நாடுகளில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் உணவு முதல் உணர்வு வரை எல்லாமே வேறுபடும் தேசம் இந்தியாவைத் தவிர எதுவும் இல்லை. அந்த வித்தியாசங்களை அங்கீகரிப்பதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் அழகு!