Published:Updated:

`நீயா... நானா?' பஞ்சாயத்து; ஆயுஷ் மருத்துவத்தில் அலோபதி இணைவதால் என்ன சிக்கல்? - விரிவான அலசல்

ஆயுஷ் சிகிச்சை
News
ஆயுஷ் சிகிச்சை

`சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் நடைமுறையில் தலையிட வேண்டாம்' என்று காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு குறித்து, அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவர்களிடம் பேசினோம்...

`நீயா... நானா?' பஞ்சாயத்து; ஆயுஷ் மருத்துவத்தில் அலோபதி இணைவதால் என்ன சிக்கல்? - விரிவான அலசல்

`சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் நடைமுறையில் தலையிட வேண்டாம்' என்று காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு குறித்து, அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவர்களிடம் பேசினோம்...

Published:Updated:
ஆயுஷ் சிகிச்சை
News
ஆயுஷ் சிகிச்சை

நவீன முறை ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவர்களும், பாரம்பர்ய மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் பார்க்கும் மரபுவழி மருத்துவர்களும் (ஆயுஷ்) நீண்ட காலமாகவே துறை ரீதியாக மல்லுக்கட்டிக் கொண்டிருப்பது பலரும் அறிந்ததே. ஏனெனில், 'ஆயுஷ் மருத்துவர்கள், அலோபதி மருந்துகளுடன் அதுசார்ந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ளக் கூடாது' என்பது அலோபதி மருத்துவர்களின் வாதம்.

'கொரோனா உட்பட பல்வேறு அவசர காலங்களில் மக்களைக் காக்க மூலிகை மருந்துகளின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. வரையறைக்கு உட்பட்டு அவசியத்தேவைக்கு அலோபதி மருந்துகளைப் பயன்படுத்துவதில் என்ன தவறு?' என்பது மரபுவழி மருத்துவர்களின் கேள்வி.

ஆயுஷ் அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'முதுநிலை ஆயுர்வேதம் படித்த ஆயுஷ் மருத்துவர்கள், குடல் அழற்சி, பித்தப்பை நீக்கம், கண்புரை உள்ளிட்ட 58 விதமான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகள் அவர்களுக்கு அளிக்கப்படும்' என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

'அலோபதி மருத்துவத்துறையில் ஆயுஷ் மருத்துவர்கள் நுழைவது, அவரவர் மேற்கொள்ளும் மருத்துவத்தின் தனித்தன்மையை பாதிக்கும்' என்று மத்திய அரசின் முடிவுக்கு எதிராக அலோபதி மருத்துவர்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தினர். இதனால், நீறு பூத்த நெருப்பாக, முடிவுக்கு வராமல் இந்தப் பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முறையாகப் படிக்காமலும், மருத்துவராகப் பதிவு செய்யாமலும் நடமாடும் போலி மருத்துவர்களைக் கைது செய்யும் படலம் அவ்வப்போது நடைபெறும். அதுபோல, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற ஆயுஷ் படிப்புகளை முடித்த மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படுவதும் அரங்கேறுகிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான செந்தில்குமார் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வெளியானது.

 மருத்துவர்கள்
மருத்துவர்கள்

செந்தில்குமார் மீதான வழக்கை ரத்து செய்த நீதிமன்றம், 'சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி போன்ற பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் நடைமுறையில் தலையிட வேண்டாம்' என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கும் இந்தத் தீர்ப்பு குறித்து, அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவர்களிடம் பேசினோம்.

"இந்தத் தீர்ப்பு வரவேற்கக் கூடியது அல்ல" என்ற வாதத்துடன் பேசுகிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான டாக்டர் ரவீந்திரநாத்.

டாக்டர் ரவீந்திரநாத்
டாக்டர் ரவீந்திரநாத்

“மருத்துவத்துறையில் அவரவர் படிப்புக்கு ஏற்ப சிசிச்சை வழங்குவதுதான் சரியாக இருக்கும். ஒவ்வொருநாளும் நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதுப்புது நோய்களுக்கு ஏற்ப மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. இதுபோன்ற முழுமையான புரிந்துணர்வுடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதுதான் சர்வதேச அளவிலான நடைமுறை. ஆனால், உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில், குறிப்பிட்ட சில நோய்களுக்கு நவீன அறிவியல் முறைப்படி ஆயுஷ் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் எதையுமே சாதாரண நோயாகக் கடந்துபோகக் கூடாது. காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற வழக்கமான பாதிப்புகளாக இருந்தாலும் அதற்குச் சிகிச்சை அளிக்கவும் பரந்துபட்ட மருத்துவப் புரிந்துணர்வு தேவைப்படுகிறது.

எனவே, எந்த வகையிலும் சிறியது, பெரியது என பிரித்துப் பார்க்காமல் எந்த நோயாக இருந்தாலும் தெளிவான அறிவியல் தெளிவுடன் சிகிச்சையளிப்பதுதான் பயன்தரும். எனவேதான், நவீன அறிவியல் மருத்துவத்திலேயே ஒவ்வொரு பிரிவுக்கும் அனுபவம் பெற்ற மருத்துவரைச் சந்தித்துத் தீர்வுபெற வலியுறுத்தப்படுகிறது.

சித்த மருத்துவம்
சித்த மருத்துவம்

அப்படி இருக்கும்போது நவீன அறிவியல் மருத்துவத்தைப் படிக்காமல், அதன் வளர்ச்சிப் போக்கினைப் புரிந்து கொள்ளாமல், ஆயுஷ் மருத்துவம் படித்தவர்கள் அலோபதி மருத்துவ சிகிச்சைகளை வழங்கலாம் என்பது, நவீன அறிவியல் வளர்ச்சிப் போக்குக்கு எதிரானதாக இருப்பதுடன், அந்த முறையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை பாதிக்கவும் வாய்ப்புள்ளது.

`கற்க கசடற’ எனும் குறளுக்கு ஏற்ப, படித்த படிப்புக்கு ஏற்ப முழுக்க முழுக்க தங்களுக்கான மருத்துவ முறையிலேயே நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல், ஆயுஷ் மருத்துவர்கள் நவீன அறிவியல் மருத்துவத்தையும் இணைத்து ஏன் சிகிச்சை தர வேண்டும்? இந்த நடைமுறை தேவையற்ற சிக்கல்களைத்தான் உருவாக்கும்.

இந்த விவகாரத்தை, தொழில் போட்டியாக நாங்கள் அணுகவில்லை. மருத்துவம் வணிகமயமாகக் கூடாது என்பதுதான் எங்கள் சங்கத்தின் நோக்கம். எனவே, இந்தப் பேச்சு தொடங்கியதில் இருந்தே நவீன அறிவியல் மருத்துவம் படித்தவர்களும், எங்கள் சங்கமும் உறுதியுடன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சிப் போக்கைப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இதைப் பார்க்கிறோம்" என்று முடித்தார்.

சித்த மருத்துவர் வேலாயுதம்
சித்த மருத்துவர் வேலாயுதம்

"நவீன மருந்துகள் உடனடியாக வினைபுரிந்து உடல்நலனைக் குணப்படுத்தும். ஆனால், மரபுவழி மருத்துவத்தில் பலன் கிடைக்கச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டாலும், அந்த மருத்துவமுறையால் கிடைக்கும் பலன் சிறப்பானது. இதனை இன்றைய அவசரகாலத்தில் உணரவும் கடைப்பிடிக்கவும் சாமானியர்களுக்கு அவகாசம் இருப்பதில்லை.

எனவே தான், காய்ச்சல் என்றாலும் கசாயத்துடன், அவசர தேவையைக் கருதி 'பாராசிட்டமால்' மாத்திரையையும் மரபுவழி மருத்துவர்கள் சிலர் பரிந்துரைக்கின்றனர். இதை ஏன் பெரிய விவாதமாக்க வேண்டும்?" என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் சித்த மருத்துவர் வேலாயுதம், தங்கள் தரப்பிலான வாதத்தை விரிவாக எடுத்துரைத்தார்.

"நம் நாட்டில் பன்னெடுங்காலமாக பாரம்பர்ய மருத்துவமுறையே தொடர்ந்துவந்த நிலையில், ஆங்கிலேயர்களின் படையெடுப்புக்குப் பிறகே அவர்களுக்காக நவீன மருத்துவமுறை இந்தியாவில் நுழைந்தது. அதிக ரசாயனப் பயன்பாடுகளுடன் கூடிய அந்த மருந்துகள், துரிதமாக வேலை செய்ததால் மக்களிடம் விரைவாகச் செல்வாக்கு பெற்றுவிட்டன. ஆட்சியாளர்களும் அந்த மருந்துகள் விரைவான பலன் கொடுத்ததால் நவீன மருத்துவத்தை ஊக்கப்படுத்தி, அதற்கான சந்தையைத் திறந்துவிட்டனர். இதனால், மரபுவழி மருத்துவத்தை வளர்த்தெடுப்பதில் உரிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டனர்.

ஆயுஷ் (மாதிரி படம்)
ஆயுஷ் (மாதிரி படம்)
Pixabay

சுதந்திரத்துக்குப் பிறகே மரபுவழி மருத்துவத்துக்கான முக்கியத்துவம் மீண்டும் உயிர்பெற்றது. அதன் நீட்சியாக, 1970-ல் 'சி.சி.எம் - சென்ட்ரல் கவுன்சில் ஆஃப் இந்தியன் மெடிசின்' என்ற தன்னாட்சி அமைப்பைத் தொடங்கிய மத்திய அரசு, இந்திய பாரம்பர்ய மருத்துவத்தைப் பாதுகாக்கத் தனிச்சட்டத்தைக் கொண்டுவந்தது.

அதில், பிரிவு 17-ல் கீழ், அவரசகாலத்தில் மரபுவழி மருத்துவத்துடன் நவீன மருந்துகளையும் பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சி.சி.எம் மருத்துவப் படிப்பில் நவீன அறிவியல் மருத்துவப் பாடத்திட்டங்களும் சேர்க்கப்பட்டன. இதேபோல 1997-ல் சித்த மருத்துவத்துக்குத் தமிழகத்திலும் தனி சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இன்றைய சூழலில் நவீன மருத்துவம் என்பது பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்பட்டதாக மாறிவிட்டது. எதற்கெடுத்தாலும் அறுவை சிகிச்சை, பலவிதமான மருத்துவப் பரிசோதனைகள் என்றாகிவிட்ட நிலையில், இதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் அளவுக்கு சாமானியர்களின் பொருளாதார நிலை வலுவாக இல்லை. அதனால், விருப்பமுள்ள மக்கள் மரபுவழி மருத்துவத்தை தேடிவருகின்றனர்.

இந்த மரபுவழி மருத்துவத்தில், சில மருத்துவர்கள் வரையறை எல்லையை மீறி நவீன மருந்துகளைப் பயன்படுத்துவது தவறுதான். அதற்காக அவர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர, காவல்துறையினரால் கைது செய்து தண்டிப்பது தவறான அணுகுமுறை. இதைத்தான் இப்போது உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியிருக்கிறது.

இந்தத் தீர்ப்புக்கு ஏற்ப, உரிய வரையறைக்கு உட்பட்டு மரபுவழி மருத்துவத்தில் நவீன மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தமிழக அரசு ஏற்படுத்திக் கண்காணிக்க வேண்டும். அவரவர் மருத்துவமுறைகள் அவரவருக்கு உயர்வானதுதான்.

ஆயுர்வேதம்
ஆயுர்வேதம்

எனவே, குறிப்பிட்ட வரையறைக்கு மீறி நவீன மருத்துவத்தைப் பயன்படுத்துவது மரபுவழி மருத்துவச் சிறப்புகளுக்கு உகந்தது இல்லை. எனவே, மரபுவழி மாண்பைக் குறைத்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நவீன மருத்துவத்திலும் மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கெல்லாம் மரபுவழி மருத்துவர்கள் எதிர்ப்பு சொல்வதில்லை. நவீன மருத்துவத்தில் பயிற்சி மருத்துவர்களுக்கு இப்போது ஆயுஷ் பயிற்சியும் வழங்கப்படுகிறது. கொரோனா உள்ளிட்ட எத்தனையோ அவசரகாலங்களில் மக்களின் உயிரைக் காக்க நவீன மருத்துவத்துடன் மரபுவழி மருத்துவமும் தோள் கொடுத்திருக்கிறது. எந்த மருத்துவமுறையாக இருந்தாலும் அதன் நோக்கம் மக்களைக் காப்பதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, யார் பெரியவன் என்ற போட்டி அதில் இருக்கக் கூடாது" என்று முடித்தார்.