அரசியல்
அலசல்
Published:Updated:

‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளருக்கு சிறை... காவு வாங்கப்படுகிறதா கருத்துச் சுதந்திரம்?

முகமது ஸுபைர்
பிரீமியம் ஸ்டோரி
News
முகமது ஸுபைர்

மனித உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தியிருக்கிறது

‘ஆல்ட் நியூஸ்’ இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் முகமது ஸுபைர் மீதான கைது நடவடிக்கை, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது சிறையில் இருக்கும் ஸுபைருக்கு ஆதரவாகவும், இந்தக் கைதுக்கு எதிராகவும் ஐ.நா சபையிலிருந்து கண்டனக் குரல் எழுந்திருக்கிறது!

செய்திகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து வெளியிடும் (Fact Checking) ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளம், குஜராத்தைச் சேர்ந்த பிரதிக் சின்ஹா, பெங்களூருவைச் சேர்ந்த முகமது ஸுபைர் ஆகியோரால் 2017-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள், ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான ஏராளமான போலிச் செய்திகளையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஆய்வுசெய்து, அவற்றின் உண்மைத்தன்மையை வெளியிட்டுவருகிறார்கள். இதனால், கடும் அச்சுறுத்தல்களையும் இவர்கள் எதிர்கொண்டுவருகிறார்கள். ‘ஆல்ட் நியூஸ்’ இணையதளத்தின் இணை நிறுவனரான முகமது ஸுபைர் மீது உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லியில் எஃப்.ஐ.ஆர்-கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளருக்கு சிறை... காவு வாங்கப்படுகிறதா கருத்துச் சுதந்திரம்?
‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளருக்கு சிறை... காவு வாங்கப்படுகிறதா கருத்துச் சுதந்திரம்?

ஏன் கைதுசெய்யப்பட்டார்?

‘முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்’, ‘முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும்’ என்று இந்து மதத் தலைவர்கள் என்று சொல்லப்படும் யதி நரசிங்கானந்த், பஜ்ரங் முனி, ஆனந்த் ஸ்வரூப் ஆகியோர் பொது இடங்களில் பேசியிருந்தனர். அவற்றைக் குறிப்பிட்டு, ‘வெறுக்கத்தக்கவர்கள்’ என்று ஸுபைர் ட்வீட் வெளியிட்டார். அதற்காக, உ.பி காவல்துறை வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்ய முயன்றது. ஆனால், முன்ஜாமீன் பெற்றதால், கைது நடவடிக்கையிலிருந்து ஸுபைர் தப்பினார்.

இந்த நிலையில், 2018-ல் பகிர்ந்த ஒரு ட்விட்டர் பதிவுக்காக, டெல்லி போலீஸார் முகமது ஸுபைரைக் கடந்த ஜூன் 27-ம் தேதி கைதுசெய்தனர். ரிஷிகேஷ் முகர்ஜி நடிப்பில் 1983-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை இந்தித் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, ‘2014-க்கு முன்: ஹனிமூன் ஹோட்டல்’, ‘2014-க்குப் பின்: ஹனுமன் ஹோட்டல்’ என ட்விட்டரில் ஒரு பதிவை ஸுபைர் வெளியிட்டார். பிரம்மச்சாரி கடவுளான ஹனுமனை, தேனிலவுடன் ஒப்பிட்டது மத உணர்வைப் புண்படுத்தும் செயல் என்று ‘ஹனுமன் பக்தர்’ என்ற அநாமதேய ட்விட்டர் கணக்கிலிருந்து தெரிவிக்கப்பட்ட புகாரின் பேரில், ஸுபைர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

“ஸுபைரின் ட்விட்டர் கணக்கை 5.78 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். அதனால், அவரது ட்விட்டர் பதிவுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க-வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான காணொளிப் பதிவை ட்விட்டர் பக்கத்தில் ஸுபைர் வெளியிட்டார். நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. அது, இந்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அதேபோல, ஹரித்வாரில் நடந்த ‘தரம் சன்சத்’ நிகழ்வில், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் வெறுப்பூட்டும் பேச்சுகளைப் பேசியது தொடர்பான காணொளிகளையும் ட்விட்டரில் ஸுபைர் பகிர்ந்திருந்தார். அதுவும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால், அதிகார மையங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட அவர், தற்போது கைதுசெய்யப்பட்டிருக்கிறார்” என்று சொல்லப்படுகிறது.

‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளருக்கு சிறை... காவு வாங்கப்படுகிறதா கருத்துச் சுதந்திரம்?
‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளருக்கு சிறை... காவு வாங்கப்படுகிறதா கருத்துச் சுதந்திரம்?

“கருத்து சொல்வதற்காக ஒருவரை சிறையில் அடைக்கக் கூடாது!”

`முகமது ஸுபைரின் கைது நடவடிக்கை, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்களின் ஒரு பகுதி’ என்று காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பத்திரிகையாளர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் ஆண்டனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர், ‘செய்தி எழுதுவதற்காகவோ, ட்விட்டரில் பதிவு வெளியிடுவதற்காகவோ, கருத்து சொல்வதற்காகவோ ஒருவரைச் சிறையில் அடைக்கக் கூடாது. அச்சுறுத்தலும் துன்புறுத்தலும் இல்லாமல் மக்கள் சுதந்திரமாகக் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “மனித உரிமைகள், பத்திரிகைச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் ஐரோப்பிய ஒன்றியம் நடத்தியிருக்கிறது. `உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில், கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்ற ஜனநாயக மாண்புகளுக்கு உரிய இடம் தரப்பட்டிருக்கிறது. அதை, இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார். ஜெர்மனியின் விமர்சனத்துக்கு இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறது. இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரியான அரிந்தம் பக்சி, “இது போன்ற கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும். இது உள்நாட்டுப் பிரச்னை. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடப்பதால், இது குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது” என்றார்.

‘ஆல்ட் நியூஸ்’ பத்திரிகையாளருக்கு சிறை... காவு வாங்கப்படுகிறதா கருத்துச் சுதந்திரம்?

உத்தரப்பிரதேசம், சீதாபூர் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், ‘இந்த வழக்கு தொடர்பான ட்விட்டர் பதிவுகள் எதையும் வெளியிடக் கூடாது. பெங்களூரிலோ அல்லது வேறு இடங்களிலோ இருக்கும் மின்னணு ஆதாரங்கள் உள்ளிட்ட எந்த ஆதாரத்தையும் அழிக்கக் கூடாது’ என்ற நிபந்தனைகளுடன் முகமது ஸுபைருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் வழங்கப் படவில்லை. அதனால், சிறையைவிட்டு அவரால் வெளியே வர முடியவில்லை.

“மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக அநாமதேய ட்விட்டர் கணக்கிலிருந்து தெரிவிக்கப்பட்ட புகாரில் ஸுபைரைக் கைதுசெய்த காவல்துறை, மத உணர்வுகளைப் புண்படுத்திய நுபுர் ஷர்மாவை, சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்த பிறகும்கூட ஏன் கைதுசெய்யவில்லை?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

கருத்துகளை அடக்குமுறையால் எதிர்கொள்வது ஜனநாயகமல்ல!