லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஒரு பெண்ணை விழுங்குவது எப்படி? - ஹெய்டி ஹார்ட்மன்

புத்துயிர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
புத்துயிர்ப்பு

புத்துயிர்ப்பு

குடும்பம்... இந்தச் சொல் என்னை தவிப்படையச் செய்கிறது என்று சொன்னால் உங்களுக்கு வியப்போ சலிப்போ ஏற்படக்கூடும். `குடும்பம் என்பது எளிமையான ஓர் அமைப்பு. அதில் என்ன சிக்கலைக் கண்டுவிட்டாய்' என்று நீங்கள் எரிச்சலும் அடையலாம். `ஒருவேளை உன் குடும்பம் சிக்கலானதாக இருப்பதால் இந்த உலகிலுள்ள ஒட்டுமொத்த குடும்பங்களும் அப்படித்தான் இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டுவிட்டாயோ' என்று நீங்கள் கேட்டால் என் பதில், `இல்லை' என்பதுதான் என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் பொருளாதார நிபுணருமான ஹெய்டி ஹார்ட்மன். வயது 74.

நான் பேசுவது எனக்காக அல்ல, என் சமூகத்துக்காக. ஓர் ஆய்வாளர் என்னும் முறையில் நான் காண்பதை, கற்றுக் கொள்வதை, சிந்திப்பதை என் சமூகத்துடன் பகிர்ந்து கொள்வது என் கடமை. `நீ மார்க்சியம் படித்ததால் இப்படிப் பேசுகிறாயா' என்று சிலர் கேட்கிறார்கள். `நீ பெண்ணியவாதி அல்லவா... குடும்பத்தை எதிர்ப்பதுதான் உன் வேலையல்லவா' என்று சிலர் நகைக்கிறார்கள். ஆம், நான் பெண்ணியம் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். உண்மைதான், மார்க்சியம் என்னைத் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டிருக்கிறது. மூன்றாவதாக இன்னொரு துறையிலும் நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். பொருளாதாரம் தான் என் ஆய்வுகளின் மையம். இந்த மூன்றில் எதைக்கொண்டு பார்த்தாலும் குடும்பம் எனக்குச் சிக்கலூட்டும் அமைப்பாகவே காட்சியளிக்கிறது. இந்த மூன்றையும் ஒன்றிணைத்துப் பார்க்கும்போது என் சிக்கல் அதிகரிக்கிறதே தவிர, குறையவில்லை.

திருமணம் என்னும் ஏற்பாட்டின்மூலம் ஓர் ஆணும் பெண்ணும் ஒன்றிணையும்போது குடும்பம் என்னும் அமைப்பு உருவாகிறது என்கிறீர்கள். தனிக்குடும்பமோ, கூட்டுக் குடும்பமோ, குடும்பம் என்னும் அமைப்பின் தொகுப்பே ஒரு சமூகமாக மாறுகிறது. சமூகங் களின் தொகுப்பு நாடு. எனவே, உலகின் உந்துசக்தியாகத் திகழும் குடும்பம் என்னும் அலகைப் புனிதமானதொன்றாக உலகம் காண்கிறது; அதற்கு ஈடாக இன்னொரு வலுவான அமைப்பு இதுவரை உருவானதில்லை என்று பெருமிதமும் கொள்கிறது. அதில் நியாயங்கள் இல்லாமலில்லை. அதற்காக குடும்ப அமைப்பைக் கேள்விக்கு உட்படுத்தாதே என்று நீங்கள் சொன்னால் ஏற்கமுடியாது.

புத்துயிர்ப்பு
புத்துயிர்ப்பு

கணவனும் மனைவியும் கலந்து ஒன்றாகின்றனர். இருவரும் மறைந்து ஒருவர் உதயமாகிறார். ஆனால், அந்த ஒருவர் யாராக இருக்கிறார்? ஒரு பெண்ணுக்குள் ஆண் கரைந்துபோகிறாரா அல்லது ஆணுக்குள் பெண் கலக்கிறாரா? கலவை அல்லது கரைதல் முடிந்த பிறகு இந்த இருவரில் யார் துலக்கமாகத் தலைதூக்குகிறார்? ஆணா, பெண்ணா? குடும்பம் உலகம் தழுவிய ஒரு பொது அலகு. எண்ணற்ற சமுதாயங்கள், எண்ணற்ற மொழி பேசும் மக்கள், எண்ணற்ற பண்பாட்டுப் பின்புலங்களைச் சேர்ந்தவர்கள் கணக்கற்ற குடும்பங்களை இதுவரை வரலாற்றில் உருவாக்கிக்காட்டியிருக்கிறார்கள். இப்போதும் உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குடும்பங்களை எல்லாம் அருகில் சென்று கவனித்துப்பாருங்கள். அதன் கட்டுமானத்தை ஆராயுங்கள். இருவரின் குரல்கள் கலந்து ஒற்றைக் குரலாக வெளிப்படும்போது அது யாருடைய குரலைப் போல் ஒலிக்கிறது என்று சொல்லுங்கள். இருவருடைய சிந்தனைகள் ஒன்று கலக்கும்போது வெளிப்படும் ஒற்றைச் சிந்தனை யாருடைய சிந்தனையாக இருக்கிறது? இரண்டு உடல்கள் ஓருடலாக மாறும்போது அந்த ஓருடல் யாருடைய தோற்றத்தைக் கொண்டிருக்கிறது?

குடும்பத்தை ஒரு சோதனைக்குழாயாகக் கற்பனை செய்து ஆண் பெண் இருவரையும் அதற்குள் இறக்கி, அந்த இருவரின் கலப்பு எப்படி நிகழ்கிறது, எப்படி வினையாற்றுகிறது, இறுதியில் எப்படி உருமாறுகிறது என்று நான் தொடர்ச்சியாகக் கவனிக்கிறேன். ஒவ்வொரு முறை கவனிக்கும்போதும் பெண்ணின் குரல், பெண்ணின் உடல், பெண்ணின் சிந்தனையானது ஆணின் குரலுக்குள் ஆணின் உடலுக்குள் ஆணின் சிந்தனைக்குள் கலந்து காணாமல்போவதைப் பார்க்கிறேன். எத்தனை முறை திரும்பத் திரும்ப முயன்றாலும் ஒரே விடைதான் எனக்குக் கிடைக்கிறது. இருவர் ஒருவராக மாறும்போது அதில் ஒருவர் எப்போதும் உள்ளொடங்கிப்போகிறார். அவர் பெண்ணாகவே இருக்கிறார். இருவர் ஒருவராக வெளிப்படும்போது அந்த ஒருவர் எப்போதும் ஆணாகவே இருக்கிறார். ஏன் எப்போதும் ஆண் பெண்ணை விழுங்குபவராக இருக்கிறார்?

இதை ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு பற்றிய பிரச்னையாகப் பார்ப்பதை விடுத்து, பெண்ணுக்கும் பொருளாதார அமைப்புக்கும் இடையிலான உறவு பற்றிய பிரச்னையாகப் பாருங்கள் என்றது மார்க்சியம். பெண்களை ஒரு பாலினமாகப் பார்க்காதீர்கள், தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாகப் பாருங்கள் என்றும் அறிவுறுத்தியது. குடும்பம் என்பது ஏற்றத்தாழ்வு கொண்ட ஓர் அமைப்பு என்பதையும் பெண்கள் தாழ்ந்த நிலையில்தான் இருக்கின்றனர் என்பதையும் பிரெட்ரிக் எங்கெல்ஸ் ஏற்கிறார். அதற்குக் காரணம், சொத்துரிமை என்கிறார் அவர். குடும்பம் என்பது ஆணின் குடும்பமாக இருப்பதற்குக் காரணம், குடும்பச் சொத்து என்பது ஆணின் சொத்தாக இருப்பதுதான். அந்தச் சொத்தைப் பாதுகாக்க ஒரு வாரிசை உருவாக்கிக்கொடுக்கும் பணி மட்டுமே பெண்ணுக்கு வழங்கப்படுகிறது. அவர் அந்தப் பணியை மட்டும் செய்தால் போதுமானது என்று கருதப்படுகிறது. ஒரு பெண்ணுக்குச் சொத்தில் பங்கில்லை என்பதால் அவள் இரண்டாம் பிரஜையாக மாறுகிறாள். ஆண் அவளை ஒடுக்கும் நிலையும் ஏற்படுகிறது.

தொழிலாளர் குடும்பங்களில் சொத்தே இல்லை என்பதால் சொத்துரிமை என்னும் பிரச்னையும் இல்லை. எனவே, அங்கே ஆண் அதிகாரமற்றவனாக இருக்கிறான். சொத்துள்ள ஓர் ஆணைப்போல அவனால் ஒரு குடும்பத் தலைவனாக இருக்க முடிவதில்லை. தன் மனைவியின்மீது ஆதிக்கம் செலுத்தவும் முடிவதில்லை. தனிச்சொத்து இல்லாததே அவனுடைய ஆதிக்கவுணர்வை மழுங்கடிக்கிறது.

பெண்கள் தொழிலாளர்களாக மாறும்போது அவர்கள் தங்கள் அதிகாரத்தைப் பெறத் தொடங்குகிறார்கள். அதுவே அவர்களுடைய விடுதலைக்கான திறப்பாகவும் இருக்கிறது என்றார் எங்கெல்ஸ். பொருளாதாரத் தேவைகளுக்கு ஆணைச் சார்ந்திருக்கும் நிலை பெண் களுக்கு ஏற்படாமல் போகும். பெண்கள் சுதந்திரமாக இருக்கும்போது அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாக மாறுவார்கள். அப்படி மாறும்போது அவர்களும் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். அப்போது ஒரு பெண் தன்னையும் ஒரு தொழிலாளியாக உணர்வார். `குடும்பம்' என்னும் அமைப்பு ஆணையும் பெண்ணையும் மேலும் கீழுமாக நிறுத்துவதைப் போலன்றி, `தொழிலாளி' என்னும் அமைப்பு ஆணையும் பெண்ணையும் ஒரே தளத்தில் ஒன்றாக நிறுத்தும். இரு பாலினங்களுக்கும் ஒரே பெயர், ஒரே அடையாளம், ஒரே உணர்வு, ஒரே கனவு என்று மாறும்போது ஆணாதிக்கத்தின் வேர் சாய்க்கப்படும் என்பதோடு, முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டம் பெண்களின் வரவால் மேலும் பலம் பெறும்.

புத்துயிர்ப்பு
புத்துயிர்ப்பு

பாலினம் பிரிக்கிறது என்றால் வர்க்கம் இணைக்கிறது. பொருள் உற்பத்தியில் இருவரும் சமமாக ஈடுபட ஆரம்பிக்கும்போது அதே உணர்வோடு வீட்டு வேலைகளிலும் இருவரும் சமமாகப் பங்கேற்பார்கள். பெண் வேலை, ஆண் வேலை என்னும் பிரிவினை மறையும். பெண் பொறுப்புகள், ஆண் பொறுப்புகள் என்னும் வேறுபாடு மறையும். ஆண் பலமிக்கவன், பெண் பலவீனமானவன் என்னும் கருத்தாக்கம் உடையும். பாலின வேறுபாட்டைவிட வர்க்க வேறுபாடு கூர்மையானது; வர்க்க பேதத்தை உடைத்தால் பாலின பேதம் தானாகவே உடைந்து உதிர்ந்துபோகும். வர்க்கப் போராட்டம் வெல்லும்போது பாலினப் போராட்டம் நடத்துவதற்கு தேவையே இராது என்றார் எங்கெல்ஸ். ஆனால், நடைமுறை வேறாக இருக்கிறதே...

சொத்து ஏதுமற்றவர்களின் குடும்பங்களிலும் அதே ஏற்றத்தாழ்வு நிகழ்வதை நான் கண்டேன். ஆண் பெண் இருவரும் பணியாற்றும் குடும்பங்களிலும் ஆண் மேலானவனாகவே இருக்கிறான். தொழிலாளி எனும் அடையாளத்துக்குள் ஒரு பெண் வந்து சேரும்போது அங்கும் ஆண் தொழிலாளி, பெண் தொழிலாளி என்னும் இரு உலகங்கள் இயங்குவதையே அவள் காண நேர்கிறது. ஒரே வேலையை ஒன்றுபோலச் செய்தாலும் ஆண் ஊதியமும் பெண் ஊதியமும் ஒன்றாக இருப்பதில்லை. நானே ஒடுக்கப்பட்டவன். எனவே, ஒடுக்குமுறையின் வலி எனக்குத் தெரியும்; குடும்பத்திலாவது நாம் சமமாக இருப்போம் என்று எந்த ஆண் தொழிலாளியும் சொல்லி நான் கேட்கவில்லை. ஒடுக்கப்படுபவனும்கூட ஒடுக்குபவனாகவே இருக்கிறான்.

இதை ஏன் மார்க்சியத்தால் உணரமுடியவில்லை தெரியுமா? ஆணுக்கும் பெண்ணுக்குமான திருமணத்தின்போது ஏற்பட்ட அதே சிக்கல்தான் மார்க்சியத்துக்கும் பெண்ணியத்துக்குமான திருமணத்திலும் ஏற்பட்டது. இரு உடல்களும் கலந்து ஓருடல் தோன்றியது. ஆனால், அந்த ஓருடல் மார்க்சியமாக இருந்தது. இரு சிந்தனைப் பள்ளிகள் கலந்து ஒரு சித்தாந்தமாக மலர்ந்தது. ஆனால், அந்த ஒரு சித்தாந்தம் மார்க்சியமாக இருந்தது. பாலின சமத்துவத்துக்கான போராட்டம் மனைவியின் இடத்தையும் வர்க்க சமத்துவத்துக்கான போராட்டம் கணவனின் பாத்திரத்தையும் ஏற்றுக்கொண்டது.

இதன் பொருள், மார்க்சியம் பலனளிக்காது என்பதல்ல, பொருளா தாரச் சமத்துவத்தைப் பெண்கள் கைவிட்டுவிட வேண்டும் என்பதல்ல, நான் சொல்லவருவது. பெண்களுக்குப் பெண்ணியம் மட்டுமே போதும் என்றும் நான் சொல்ல மாட்டேன். பெண்ணியத்தைப் பற்றிக்கொண்டு அலசும்போது மார்க்சியத்திடம் பல போதாமைகள் இருப்பதைக் காண்கிறேன். மார்க்சியத்தின் பார்வையில் பெண்ணியத்தைப் பார்க்கும்போது அதில் பல சிக்கல்கள் இருப்பது துலக்கமாகத் தெரிகிறது. மார்க்சியத்தின் குறைகளைப் பெண்ணியத்தைக்கொண்டும் பெண்ணியத்தின் குறைகளை மார்க்சியத்தைக் கொண்டும் தீர்க்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? பெண்ணியத்தை நிறைவு செய்யும் மார்க்சியமும் மார்க்சியத்தை முழுமை செய்யும் பெண்ணியமும் இருந்தால் எவ்வளவு அற்புதமாக இருக்கும்? அப்படியோர் இணைப்பை ஏற்படுத்த முடிந்தால் ஆண் பெண் இணைப்பையும் அதே இலக்கணத்தைக் கொண்டு ஏற்படுத்தமுடியும். ஆண்களால் பெண்கள் விழுங்கப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியும்.