அரசியல்
அலசல்
Published:Updated:

‘இந்தியச் சிறைகள்... நரகங்கள்!’ - அமித் ஷா முன்னெடுக்கும் சீர்திருத்தம் என்ன?

இந்தியச் சிறைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியச் சிறைகள்

வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

நரகத்துக்கு ஒப்பானவை’ என்று விமர்சிக்கப்படும் இந்தியச் சிறைச்சாலைகளை, மனிதர்கள் வசிக்கத்தக்க இடங்களாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருப்பதாகச் சொல்கிறது மத்திய பா.ஜ.க அரசு. ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட ‘சிறைகள் சட்ட’த்தில் சில திருத்தங்களைச் செய்து, ‘மாதிரி சிறைகள் சட்டம்’ ஒன்றை மத்திய அரசு கொண்டுவரவிருக்கிறது.

மிகவும் மோசமான சிறைச்சாலைகளைக் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று. சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ‘சிறைகள் சட்டம்’தான் இப்போதும் நடைமுறையில் இருக்கிறது. பெரும்பாலான இந்தியச் சிறைகள், ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை. ஆகையால்தான், ஆங்கிலேயர் காலத்தில் நிலவிய சிறைக் கொடுமைகள், நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் தொடர்கின்றன.

இந்தியச் சிறைகளின் தற்போதைய அவலநிலை குறித்தும், புதிய சட்டத்தின் மூலமாகச் சிறைகளில் என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றியும் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன. இந்தியச் சிறைகள் எவ்வளவு கொடுமையானவை என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகச் சிறைகளில் தண்டனை அனுபவித்துவந்த இந்தியாவைச் சேர்ந்த கைதிகளை, இந்தியச் சிறைகளுக்கு மாற்ற இரு நாடுகளுக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் போடப்பட்டது. அப்போது, ஐக்கிய அரபு அமீரகச் சிறைகளில் இருந்த இந்தியக் கைதிகளில் பலர், தங்களை இந்தியச் சிறைகளுக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். “இந்தியச் சிறைகள் நரகத்துக்கு ஒப்பானவை. அங்கு தண்டனை அனுபவிப்பதை எங்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஐக்கிய அரபு அமீரகச் சிறைகளில் வழங்கப்படும் தரமான உணவு, கண்ணியமாக நடத்தப்படும்விதம், மருத்துவ வசதிகள், கழிப்பிட வசதிகள், தூய்மை ஆகியவற்றை இந்தியச் சிறைகளில் எதிர்பார்க்க முடியாது” என்று அந்தக் கைதிகள் கூறினார்கள்.

 ‘இந்தியச் சிறைகள்... நரகங்கள்!’ - அமித் ஷா முன்னெடுக்கும் சீர்திருத்தம் என்ன?

வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குச் தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மனித உரிமைகள் ஆர்வலரான ஆலன் மிச்சேல் என்பவர், இந்தியச் சிறைகள் குறித்து அதிர்ச்சிக்குரிய சில தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். 2013-ம் ஆண்டு இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இங்கிலாந்து நாட்டினர் சிலர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் புழல் சிறை பற்றிச் சொன்னதாகச் சில தகவல்களை நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். “புழல் சிறையில் எலிகள், கரப்பான்பூச்சிகள், பாம்புகள் ஆகியவற்றுடன் இருந்ததாக அந்த நபர் கூறினார். மிகச்சிறிய அறையில் அடைக்கப் பட்டிருந்ததாகவும், உணவும் மருத்துவச் சிகிச்சையும் கிடைக்காமல் அவதிப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதைப்போலவே, மும்பை ஆர்தர் சாலை சிறையிலும், அலிப்பூர் சிறையிலும் மோசமான நிலை இருப்பதையும் அறிய முடிகிறது’’ என்று மிச்சேல் கூறினார். “இது போன்ற காரணங்களால்தான் இந்தியாவுக்குச் செல்ல விஜய் மல்லையா தயங்குகிறார்” என்று மல்லையாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

சுதந்திரத்துக்குப் பின்பான காலம் முதலே, இந்தியச் சிறைச்சாலைகளின் நிலை மாற வேண்டும் எனத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் பேசிவருகிறார்கள்.

அஜுதாகூர்
அஜுதாகூர்

இந்த நிலையில்தான், சிறைச் சீர்திருத்தங்களைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்தியாவில் சிறைச் சீர்திருத்தம் கொண்டுவரப்படவிருக்கிறது. மத்திய அரசால் 2016-ம் ஆண்டு ‘மாதிரி சிறைக் கையேடு’ கொண்டுவரப்பட்டது. அதை 11 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மட்டுமே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களில் ‘மாதிரி சிறைச் சட்டம்’ கொண்டுவரப்படவிருக்கிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கப்பட்டுவருகிறது. சிறைச்சாலைகளில் நல்ல சூழலை ஏற்படுத்துவதுடன், அதை நவீனப்படுத்துவதும், தொழில்நுட்பத்துடன் இணைக்கவேண்டியதும் முக்கியமானவையாக இருக்கின்றன” என்றிருக்கிறார்.

மாதிரி சிறைக் கையேட்டில், பிரதானமாகச் சிறையில் லஞ்சத்தைத் தடுப்பது, சிறைக்குள் சிறை ஊழியர்களின் தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறை ஊழியர்களை இடமாற்றம் செய்வது, கைதிகள் சிறைக்குள் செல்போன் பயன்படுத்துவதைத் தடுப்பது, மனநல ஆலோசகர்கள் மூலமாகக் கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகளை உறுதிசெய்வது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 ‘இந்தியச் சிறைகள்... நரகங்கள்!’ - அமித் ஷா முன்னெடுக்கும் சீர்திருத்தம் என்ன?

இந்தியச் சிறைகளில் நிலவும் சூழல், சிறைச் சீர்திருத்தங்கள் பற்றி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜு தாகூரிடம் பேசினோம். “அளவுக்கு அதிகமாகக் கைதிகளை அடைத்து வைத்திருப்பதால், கடுமையான நெரிசலில் இந்தியச் சிறைகள் திணறுகின்றன. இந்தியச் சிறைகளில் அடிப்படை வசதிகள் மிகவும் மோசம். குளியலறைக்காகவும், கழிப்பறைக்காகவும் கைதிகளுக்குள் பெரும் அடிதடிச் சண்டைகள் நடப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தவறு செய்தவர்களைத் திருத்துவதற்கான இடமாக அல்லாமல், புதிய குற்றவாளிகளை உருவாக்கும் கூடாரங்களாகச் சிறைகள் இருப்பது வேதனைக்குரியது. கூலிப்படையினர் உள்ளிட்ட குற்றவாளிகள் புதிய நெட்வொர்க்கை ஏற்படுத்திக்கொள்வதற்கான இடங்களாகச் சிறைகள் இருக்கின்றன. மக்கள்தொகையும், குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில், சட்டங்களை மாற்றவேண்டியது மிகவும் அவசியம். அதேநேரத்தில், சிறைச் சீர்திருத்தம் என்பது ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டும். நவீனப்படுத்துகிறோம் என்கிற பெயரில், ஏ.சி போன்ற ஆடம்பர வசதிகளைச் சிறைக்குள் கொண்டுவந்துவிட்டால், அது மிகவும் ஆபத்தாக அமையும். போதிய எண்ணிக்கையில் சிறை ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும். சிறை நிர்வாகத்துக்குத் தேவையான நிதியை அரசு ஒதுக்க வேண்டும்” என்றார் வழக்கறிஞர் அஜுதாகூர்.

ஆட்சியாளர்களின் அஜண்டாவில் என்ன இருக்கிறதோ?