Election bannerElection banner
Published:Updated:

கன்னியாகுமரி: காமராஜர் அரசியலை கையில் எடுத்த அமித்ஷா! - பா.ஜ.க-வின் தேர்தல் அரசியல்

நாகர்கோவிலில் அமித்ஷா பிரசாரம்
நாகர்கோவிலில் அமித்ஷா பிரசாரம்

தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க அரசு உருவாகும் என நம்புகிறேன். இன்று இங்குள்ள 11 வீடுகளுகுச் சென்று வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கியுள்ளோம் என்றார் அமித்ஷா.

மத்திய உள்த்துறை அமைச்சர் அமித்ஷா கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திருவனந்தபுரம் வந்த அமித்ஷா இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலுக்கு சென்றார். அமித்ஷா வருகையை முன்னிட்டு சுசீந்திரம் பகுதியில் குலை வாழைகள் நட்டு தோரணம் கட்டப்பட்டிருந்தது. மேலும் தெருக்களில் கோலங்கள் போடப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுசீந்திரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அமித்ஷா. அமித்ஷா வருகையை முன்னிட்டு சுசீந்திரம் ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பஜனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபாடு செய்த அமித்ஷா சுசீந்திரம் கீழத்தெருவில் உள்ள 11 வீடுகளில் பா.ஜ.க-வுக்கு வாக்கு கேட்டு துண்டுபிரசுரமும், ஸ்டிக்கரும் வழங்கி பிரசாரத்தை தொடங்கிவைத்தார்.

காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த அமித்ஷா
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த அமித்ஷா

அமித்ஷா துண்டுபிரசுரம் வழங்குவதற்காக ஏற்கனவே 11 வீடுகளை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்தவர்களும் இடம்பெறும்படி அந்த லிஸ்ட் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் செட்டிகுளம் வந்த அமித்ஷா அங்கிருந்து வேப்பமூடு சந்திப்புவரை சாலை ஓரத்தில் திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அமித்ஷா ரோட் ஷோ சென்ற லாரியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க-வைச் சேர்ந்த தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், மேலிட பார்வையாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

காமராஜர் சிலை அருகே வந்ததும் பேரிக்காடுகளை அகற்றி தொண்டர்களை அருகில் விடும்படி காவல்துறையினரிடம் அமித்ஷா கூறினார். பின்னர் காமராஜர் சிலைக்கு ரோஜா மாலை அணிவித்தார் அமித்ஷா. ஏற்கனவே காமராஜர் சிலைக்கு காவி மற்றும் பச்சை நிறத்தில் பா.ஜ.க கொடியின் நிறத்தில் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் சமயத்தில் பா.ஜ.க காமராஜர் சிலைக்கு பெருந்திரளாக கூடி மரியாதை அளித்து காங்கிரஸை சீண்டியுள்ளது. காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு அங்கிருந்து உடுப்பி ஓட்டலில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்றார் அமித்ஷா.

நாகர்கோவிலில் அமித்ஷா பிரசாரம்
நாகர்கோவிலில் அமித்ஷா பிரசாரம்

முன்னதாக சுசீந்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, "தமிழகத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க அரசு உருவாகும் என நம்புகிறேன். இன்று இங்குள்ள 11 வீடுகளுக்குச் சென்று வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கியுள்ளோம். இடைத்தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றிபெறுவதை உறுதி செய்யும் வகையில் வாக்களிக்க வேண்டுகிறேன்" என்றார். இதில் அ.தி.மு.க கூட்டணியில் சீட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்திவரும் தே.மு.தி.க குறித்து அமித்ஷா பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு