நடிகர் அமிதாப் பச்சன் கமலா பசந்த் என்ற பான் மசாலா கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். அமிதாப் பச்சன் நடித்த பான் மசாலா விளம்பரங்கள் டி.வி-களில் ஒளிபரப்பப்பட்டுவந்தன. புகையிலை எதிர்ப்பாளர்கள் இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த விளம்பர ஒப்பந்தத்திலிருந்து அமிதாப் பச்சன் விலக வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் டி.வி-களில் ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரத்தை அமிதாப் பச்சன் நியாயப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த விளம்பரத்தால் இளைய தலைமுறையினர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயம் இருப்பதால், இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என்று தேசிய தொண்டு நிறுவனம் ஒன்று அமிதாப் பச்சனிடம் கேட்டுக்கொண்டது.

இதையடுத்து கடந்த மாதம் அமிதாப் பச்சன் கமலா பசந்த் பான் மசாலா கம்பெனியுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுத்தார். அமிதாப் பச்சன் அலுவலகத்திலிருந்தும் இது தொடர்பாக முறைப்படி செய்தி வெளியிடப்பட்டது. தடைசெய்யப்பட்ட சிகரெட், புகையிலை, போன்றவற்றை விளம்பரப்படுத்தும் வகையில் விளம்பரம் அமைந்ததால் அதிலிருந்து விலகுவதாக அமிதாப் பச்சனும் தெரிவித்திருந்தார். ஆனால், அமிதாப் பச்சன் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் தொடர்ந்து அந்த பான் மசாலா நிறுவனம் அமிதாப் பச்சன் நடித்த விளம்பரத்தை டி.வி-யில் ஒளிபரப்பு செய்துவந்தது.
இது அமிதாப் பச்சனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, கமலா பசந்த் பான் மசாலா கம்பெனியிடம் விளக்கம் கேட்டு அமிதாப் பச்சன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அமிதாப் பச்சன் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறார். புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 10.35 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனாலும் மக்கள் புகையிலை பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தித்தான்வருகின்றனர்.