
#Utility
சென்ற தலைமுறை மட்டுமல்லாது இந்தத் தலைமுறைப் பெண்களையும் தன் எழுத்துகளால் கட்டிப்போட்டிருப்பவர் மூத்த எழுத்தாளர் ரமணிசந்திரன். இவரின் மகள் வயிற்றுப் பேத்தி அம்ரிதா, மலர்களைப் பதப்படுத்தி, அவற்றை கண்ணாடிக்குள் வைத்து, மூக்குத்தி, கம்மல், பெண்டென்ட், நெக்லஸ் போன்றவற்றை ‘அலங்காரா' என்ற பெயரில் வடிவமைக்கிறார்.
‘‘என்னோட டீன் ஏஜ்ல ஸ்போர்ட் ஸில்தான் ஆர்வம் இருந்தது. ஆனால், போகப்போக அது நுண்கலை, இலக்கியம் பக்கம் திசை திரும்பிடுச்சு. எனக்கு எழுதவும் பிடிக்கும். ‘என்னோட பேரப்பிள்ளைகளிலேயே உனக்கு மட்டும்தான் எழுதுவதில் ஆர்வம் வந்திருக்கு’னு பாட்டி சொல்வாங்க.
ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் விஷுவல் ஆர்ட்ஸ் படிச்சிட்டு, பெங்களூரில் ‘ஆர்ட் அண்டு டிசைனிங்' பண்ணினேன். கன்னியா குமரியில் கிளிஞ்சல்களை வெச்சு கலைப்பொருள்கள் செய்யுற பெண்களோடு சேர்ந்து புராஜெக்ட் பண்ணினோம். கன்னியாகுமரி, ராமேஸ்வரம் பகுதிகளில் மிக அதிகமாகத் தயாரிக்கப்படக்கூடிய, மிகக் குறைந்த தயாரிப்புச் செலவுடைய கிளிஞ்சல் பொருள்களை எப்படி மார்க்கெட் பண்றதுன்னு ‘வொர்க் அவுட்’ பண்ணினோம். அது தான் கல்லூரியில் அந்த ஆண்டின் மிகச் சிறந்த புராஜெக்ட்.

படிப்பை முடிச்சதுக்கப்புறம், அதே துறையிலேயே மார்க் கெட்டிங்கில் சென்னையில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போதான் கன்னியாகுமரி புராஜெக்ட்டுக்கு நிதி வழங்கிய ஒரு நிறுவனம் என்னிடம், ‘நீங்க மறுபடியும் கிளிஞ்சல் பொருள்கள் பண்ணித் தர்றீங்களா?’ன்னு கேட்டாங்க. திரும்பவும் கன்னியாகுமரிக்குப் போய், அந்தப் பெண்களை வெச்சுத் தயாரிக்க ஆரம்பிச்சேன். அங்கேதான் பொருள்களைப் பதப்படுத்தும் கலையைக் கத்துக்கிட்டேன்.
இது நம்ம இந்திய நாட்டுக் கலை இல்லை. அயர்லாந்தில் ரூபி ராபின் என்னும் ஒரு பெண்மணி மூலமாகத்தான் இதைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். பதப்படுத்தும் குட்டிக் குட்டி பொருள்களைக் கண்ணாடிக் குப்பிக்குள் வெச்சா எப்படி இருக்கும்னு கூகுளில் தேடிப் படிச்சு தகவல்கள் சேகரிச்சேன். அப்புறம், அயர்லாந்து ரூபி ராபின் சில தொழில்நுட்பங்களைச் சொல்லி உதவினாங்க. அவங்க சொன்னது, நான் படிச்சது எல்லாத்தையும் வெச்சுதான் அலங்காரா மூலம் ஆபரணங்கள் செய்யத் தொடங்கினேன்’’
- கலையார்வம் வளர்ந்த கதை சொல்கிறார் அம்ரிதா.
‘‘மலர்களை ஒரு திரவத்தில் போட்டு பதப்படுத்தி, பாடம் பண்ணி, நெக்லஸ், மோதிரம், பிரேஸ்லெட், பெண்டென்ட், மூக்குத்தி எல்லாம் செய்யுறோம். இந்தக் கலையை வேறு வடிவங்களிலும் கொண்டு வந்தா என்னன்னு யோசிச்சதன் விளைவு ‘மெமரி பாக்ஸ்’!

தேக்கு மரத்தில் அழகிய பெட்டிகள் செய்யுறோம். விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக நாம கருதும் விஷயங்களை அதுக்குள்ளே வெச்சுப் பாடம்பண்ணித் தர்றோம். ஈரோட்டிலிருந்து ஒரு பொண்ணு, அவங்களுடைய கல்யாண மாலையை அனுப்பினாங்க. அதிலிருந்து சில பூவிதழ்கள், அவங்க தலையில் வெச்சிருந்த பூக்களில் ரெண்டு, அப்புறம் அவங்க கணவர் கையில் கட்டியிருந்த கயிறு எல்லாத்தையும் பதப்படுத்தி, உள்ளே வெச்சுத் தர முடியுமான்னு கேட்டாங்க. வாழ்க்கையில் சில நினைவுகளை மனசுக் குள்ளே பொக்கிஷமாக வைப்பதுபோல, நிகழ்வுகளுடன் கலந்த பொருள்களையும் பாதுகாத்துக் கொடுக்கிறோம். காலத்துக்கும் தலைமுறைகள் கடந்தும் அந்த ‘மெமரி பாக்ஸ்’ இருக்கும் இல்லையா?’’ - அழகாய் புன்னகைக்கும் அம்ரிதா, தன் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் செம்பருத்தி, இட்லிப்பூ, சாமந்தி, லில்லி, மல்லியிலிருந்து துளசியின் காம்பு வரை எல்லாவற்றையும் தன் கலைக்குப் பயன்படுத்துகிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன் இறந்த தன் தாத்தாவின் காலில் இருந்த சாமந்திப்பூக்களைப் பத்திரப்படுத்தி அனுப்பிய பெண்ணுக்கு அவற்றை வைத்து நெக்லஸ், மகளின் தொப்புள்கொடியைக் கொண்டுவந்த பெண்ணுக்கு அதில் மோதிரம் என சென்டிமென்ட்டுகளுக்கேற்பவும் டிசைன் செய்வது இவரது ஸ்பெஷாலிட்டி.
‘‘எனக்கு இந்த ஸ்டார்ட்அப் பிசினஸ் ஆரம்பிக்க என் அக்காதான் பண உதவி செய்தாங்க. அதிலிருந்து வளர்ந்து, இப்போ ரெண்டாவதா ஒரு ஸ்டூடியோ ஆரம்பிச்சு ஆறு பேரை வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு வளர்ந்திருக்கேன். இந்த டிசைன் ஸ்டூடியோ ஆரம்பிக்கும்போதே, இந்தக் கலைக்கான
தீவிர தேடலும் ஆர்வமும் உள்ளவங்களை மட்டும் தான் வேலைக்கு எடுப்பதுங்கிற விஷயத்தில் தெளிவாக இருந்தேன். பொறுமை இருக்கிறவங்களுக்கு இந்தக் கலையைக் கத்துக் கொடுக்க நான் தயார். என்கிட்ட இப்போ இருக்கிற பணியாளர்கள் எல்லாருமே ஆரம்பத்திலிருந்து என்னோடு இருக்கிறவங்கதான்''
- அதீதமான நிறைவு ததும்புகிறது அம்ரிதாவின் கண்களில்.