Published:Updated:

கோத்தபய ராஜபக்சே - `தானும் இப்போது ஓர் அகதி என உணர்ந்திருப்பாரா..?!'

கோத்தபய ராஜபக்சே
News
கோத்தபய ராஜபக்சே

இலங்கையிலிருந்து தப்பிச்செல்ல புறப்பட்ட ராணுவ விமானம் 2006-ல் செஞ்சோலையில் குழந்தைகள் காப்பகம்மீது குண்டு வீசப் பயன்படுத்தப்பட்ட விமானமாகக்கூட இருக்கலாம். இது குறித்து அந்த விமானியிடம் விசாரித்திருப்பாரா?

Published:Updated:

கோத்தபய ராஜபக்சே - `தானும் இப்போது ஓர் அகதி என உணர்ந்திருப்பாரா..?!'

இலங்கையிலிருந்து தப்பிச்செல்ல புறப்பட்ட ராணுவ விமானம் 2006-ல் செஞ்சோலையில் குழந்தைகள் காப்பகம்மீது குண்டு வீசப் பயன்படுத்தப்பட்ட விமானமாகக்கூட இருக்கலாம். இது குறித்து அந்த விமானியிடம் விசாரித்திருப்பாரா?

கோத்தபய ராஜபக்சே
News
கோத்தபய ராஜபக்சே

ஒரு நிலத்தை, ஒரு காட்டை, வெப்பம் வழிந்தோடும் ஒரு தெருவை, ஒரு பூவின் ஸ்பரிசத்தை, மழை கிளப்பும் மண் வாசனையை, ஒரு கோயிலின் மணியோசனையை நினைவில் மட்டுமே சுமக்கும் ஓராயிரம் மக்களை நாம் தமிழ்நாட்டு முகாம்களில் பார்க்கலாம். தீவு தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் அல்லது மிச்சமிருக்கும் உயிரையாவது தக்கவைத்துக்கொள்ள படகேறி வந்தவர்கள் அவர்கள்.

நாகாவதி அணை முகாமோ, கும்மிடிப்பூண்டி முகாமோ... இல்லை திருச்சி முகாமோ, அகதி என ஒற்றை பட்டத்துடன் வெயிலோடும் அரிச்சல்முனையில் இறங்கியவர்களிடம் சொல்ல ஏராளமான கதைகள் உண்டு. எல்லாம் நிலம் குறித்த கதைகள்தான்.

இப்போது அப்படியான நிலத்தை தம் நினைவில் சுமந்து நாடு நாடாக அலைகிறார் கோத்தபய ராஜபக்சே. அவருக்கும் சொல்ல இப்போது பல கதைகள் இருக்கலாம். ஆனால் கேட்க சொந்த மக்கள்கூட இல்லை.

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

சொந்த மக்களால் கைவிடப்பட்டு நாடு நாடாக அலைகிறார். இரு நாட்டு குடியுரிமை உள்ளவரை வெளிப்படையாக வரவேற்க ஒரு நாடும் தயாராக இல்லை.

இது 11 நாடுகள் சேர்ந்து நடத்திய போர் என்றார். ஆனால், ஒரு நாடும் அவரை அழைத்துக் கொள்ளவில்லை.. அணைத்துக் கொள்ளவில்லை.

தப்பிச் செல்ல ஹெலிகாப்டர் ஏறும்போது என்ன நினைத்திருப்பார் கோத்தபய?

விடுதலைப் புலிகள் நினைவுக்கு வந்திருக்குமோ, பாலச்சந்திரன் குறித்து நினைத்திருப்பாரோ... கிளிநொச்சி, முல்லைதீவு, யாழ்கோட்டையை ஹெலிகாப்டர் ஜன்னல் வழியாகப் பார்க்க எத்தனித்திருப்பாரா?

என்ன செய்திருப்பார் கோத்தபய?

15 நாள்களுக்கு மேல் தங்கள் நாட்டில் தங்க இடமில்லை எனச் சிங்கப்பூர் சொன்ன போது வள்ளிபுரம் பார்வதி அம்மாவின் நினைவு அவருக்கு வந்திருமா?

என்ன நினைத்திருப்பார் கோத்தபய?

ஹூம்… அவர் இலங்கையிலிருந்து தப்பிச்செல்ல புறப்பட்ட ராணுவ விமானம் 2006-ல் செஞ்சோலையில் குழந்தைகள் காப்பகம்மீது குண்டு வீசப் பயன்படுத்தப்பட்ட விமானமாகக்கூட இருக்கலாம். இது குறித்து அந்த விமானியிடம் விசாரித்திருப்பாரா?

கோத்தபய ராஜபக்சே
கோத்தபய ராஜபக்சே

விமானியிடம் என்ன பேசி இருப்பார் கோத்தபய?

ஹம்மந்தோட்டா துறைமுகத்தை மூன்று முறை சுற்றி வரச் சொல்லி இருப்பாரா?

சொந்த மக்கள் கைவிட, நட்பு நாடுகள் தயங்க... செல்லும் திசை தெரியாமல் நிற்கிறார் கோத்தபய.

32 சதுர கிலோமீட்டரில் மக்களுக்கான பாதுகாப்பு மண்டலத்தை முல்லை தீவில் ஏற்படுத்தியுள்ளோம்; மக்கள் அங்குத் தஞ்சம் புகலாம் என்று 2009-ம் ஆண்டு கொக்கரித்தவர் சொந்த நாட்டில் ஒரு சதுர அடி நிலம்கூட இல்லாமல் நாடு நாடாக அலைகிறார்.

தம் மாளிகை மக்களால் கைப்பற்றப்பட்டு, தமது படுக்கை அறையில் மக்கள் கூடி இருப்பதைப் பார்க்கும்போது முள்வேலி முகாம்கள் நினைவுக்கு வந்திருக்குமா?

தஞ்சமடைய வந்த தலைவர்கள்மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தும்படி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார் என்று விக்கிலீக்ஸில் கசிந்த செய்தி ஒன்று கூறுகிறது. இப்போது தஞ்சம் கேட்டு வேறு நாடுகளுக்கு ஓடும்போது நடேசன் குறித்த நினைவுகள் அவருக்கு வந்திருக்குமா?

இலங்கை
இலங்கை
Rafiq Maqbool

இலங்கை போர் உக்கிரமாக நடந்த காலகட்டத்தில் அரசை விமர்சித்த ஊடகவியலாளர், மனித உரிமை போராளி லசந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்ட பின்னணியில் கோத்தபய ராஜபக்சே இருக்கிறார் என்கிறது மற்றொரு செய்தி.

இப்போது லசந்தாவின் முகம் நினைவுக்கு வந்திருக்குமா? இல்லை, "மரணத்தின் பாதையை நான் அறிவேன்" என்ற லசந்தாவின் கடைசி தலையங்கத்தின் பத்திகளை ஒரு முறை வாசிக்க முயன்றிருப்பாரா?

சிங்கையில் அமர்ந்து என்ன யோசித்துக் கொண்டிருப்பார் கோத்தபய?

இறுதியாக, தானும் இப்போது ஓர் அகதிதான் என்பதை உணர்ந்திருப்பாரா கோத்தபய?!