சினிமா
Published:Updated:

தாயைப் பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!

பொம்மன் - பெள்ளி
பிரீமியம் ஸ்டோரி
News
பொம்மன் - பெள்ளி

கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை பக்கத்துல கரன்ட் ஷாக் அடிச்சு இறந்துபோன ஒரு யானையோட கன்று தாயைப் பிரிஞ்சு தவிக்குதுன்னு என்னைக் கூட்டிப் போனாங்க

The Elephant Whisperers என்ற ஒற்றை ஆவணப்படம் ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஆஸ்கர் விருதின் ஆவணக்குறும்படப் பிரிவுப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிறது. தாயைப் பிரிந்து தவித்த இரண்டு யானைக் கன்றுகளுக்குத் தாய் தந்தையாக மாறிக் கடைத்தேற்றி விட்ட பழங்குடித் தம்பதியரின் உண்மைச் சம்பவத்தை எதார்த்தமாகக் காட்டியிருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்.

காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மனையும், பெள்ளியையும் தேடி முதுமலைக்குக் கிளம்பி, ஆசியாவின் மிகப் பழைமையான தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை அடைந்தோம். வனத்துறையினரிடம் கேட்டபோது, “யானைக்குச் சாப்பாடு கொடுத்துட்டு வீட்டுப் பக்கத்துல போய் கட்டி வைப்பார். அங்க போய்ப் பாருங்க” என்றனர்.

மாயாற்றின் மறுகரையில் பொம்மன் வருகைக்காகக் காத்திருந்தோம். காக்கி உடுப்பு, தலைப்பாகை சகிதமாக கையில் சிறிய குச்சியுடன் கம்பீர தோரணையில் யானைமீது வந்துகொண்டிருந்தார். பாறைகள் நிறைந்த மாயாற்றில் பக்குவமாக நடக்கச் சொல்லி யானைக்குக் கட்டளையிட்டு மறுகரைக்கு வந்து சேர்ந்தார். அனிச்சையாய் யானை கால் நீட்ட, தடவிக் கொடுத்தபடியே கீழே குதித்தார் பொம்மன்.

தாயைப் பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!

யானையின் பச்சை வாசம் பொம்மன்மீதும் மணந்து காற்றைக் கனக்கச் செய்துகொண்டிருந்தது. பொம்மனிடம் அறிமுகமாகி, பேச்சுக் கொடுத்தோம். மூங்கில் தழைகளை யானைக்குத் தின்னக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார், “எங்க அப்பாவும் பாகன்தான். எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே யானைதான் உலகம். 10 வயசுல அப்பாவுக்கு உதவியா வேலைக்கு வந்துட்டேன். 18 வயசுல அண்ணா யானைக்குக் காவடியா டூட்டில சேர்ந்தேன். அப்புறம் அதே யானைக்குப் பாகனாவும் மாறினேன். இப்போ 54 வயசு ஆகுது. 40 வருஷத்துக்கு மேல யானை அனுபவம் இருக்கு. குட்டி யானைங்க மேல ரொம்ப இஷ்டம். தாயைப் பிரிஞ்ச குட்டியை எப்படியாவது தாயோட சேர்க்கத்தான் போராடுவோம். குட்டியைக் கண்டுபிடிச்ச ஏரியாவைச் சுத்தி, பால் குடுக்குற பருவத்துல பெண் யானை இருக்கான்னு தேடி அலைவோம். தாய் யானைகிட்ட குட்டிய கொண்டு போனால் குட்டி நம்மகூடயே திரும்ப ஓடி வரும். அதைப் பார்த்த மத்த யானைங்க நம்மள விரட்டும். பெரும் போராட்டமா இருக்கும். ஒருவழியா தாயோட சேர்த்துட்டா அதுல கிடைக்கிற சந்தோஷத்துக்கு அளவே இருக்காது.

தாயைப் பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!

கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை பக்கத்துல கரன்ட் ஷாக் அடிச்சு இறந்துபோன ஒரு யானையோட கன்று தாயைப் பிரிஞ்சு தவிக்குதுன்னு என்னைக் கூட்டிப் போனாங்க. ஊருக்குள்ள வந்த குட்டியை நாய்ங்க கடிச்சுக் கொதறினதுல உடம்பு முழுக்கக் காயம். அந்த மூணு மாசக்குட்டி பிழைக்கறதே கஷ்டம்னு சொல்லிட்டாங்க. எனக்கு மனசே கேக்கல‌. அங்கேயே 10, 15 நாள் தங்கி, குழந்தை மாதிரி கூடவே இருந்து பார்த்து, கொஞ்சம் சரியானதும் முதுமலைக்குக் கொண்டு வந்துட்டோம். குட்டி பிழைக்காதுன்னு பராமரிக்க யாருமே முன்வரலை. சரி, நம்மளே பார்த்துக்கலாம்னு முடிவெடுத்தேன். ரகுன்னு பேர் வச்சு, நானும் என் சம்சாரம் பெள்ளியும் க்ரால்லயே (காட்டு யானைகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தப் படும் மரக்கூண்டு) தங்கி 24 மணி நேரமும் பார்த்துக்க ஆரம்பிச்சோம். கத்தும்போதெல்லாம் பால் குடுக்கணும். ஒரு நிமிஷம்கூட நகர முடியாதபடி கத்தும். மகளோட சாவுக்குக்கூடப் போக முடியலை. என்னையும் பெள்ளியையும் தாய் தகப்பனாவே நினைச்சு பிடிவாதம் பிடிக்கும். காயமெல்லாம் சரியாகி புல் சாப்பிட ஆரம்பிச்ச அப்புறம் எந்தத் தொந்தரவும் இல்லை. நாங்களும் குழந்தை மாதிரிதான் ரகுவைப் பார்த்துக்கிட்டோம். அதுவும் மனுஷக் குழந்தை மாதிரியேதான் நடந்துக்கும்.

அந்தச் சமயத்திலதான் கார்த்திகி வந்தாங்க. எங்களைப் படம் எடுக்க பெரிய அதிகாரிங்ககிட்ட அனுமதி வாங்கியிருக்கறதா சொன்னாங்க. நாங்களும் சரின்னு ஒத்துக்கிட்டோம். இதுல நடிப்பு எதுவுமே கிடையாது. நாங்க வழக்கமா செய்யற வேலைகள எல்லாமே ரெண்டு வருஷமா வீடியோ எடுத்தாங்க. இதனால ஏதாவது நல்லது நடந்தா சந்தோஷம்.”

தாயைப் பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!

அதிகமா பனி இறங்குவதாகச் சொல்லி கிருஷ்ணாவுக்குக் கூடுதலாக மூங்கில் தழைகளை அள்ளிப்போட்டுத் தடவிக்கொடுத்துவிட்டு நம்மை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சிறிது நேரப் பேச்சில் பொம்மன் வீடிருக்கும் தேக்குப்பாடியை அடைந்தோம். மூங்கில்களால் வேயப்பட்ட வீட்டின் வாசலில் குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டியிருந்தார் பெள்ளி.

இன்முகத்துடன் வரவேற்றுப் பேசத் தொடங்கினார் பெள்ளி, “ரகுவைக் கூட்டிட்டு வரும்போதுதான் முதல்முறையா யானை வேலைக்குப் போனேன். ஆரம்பத்துலதான் கொஞ்சம் பயம் இருந்தது. பாசத்தோட பழகுனா, ஆயிரம் மடங்கு பாசத்தை யானை நம்ம மேல காட்டும். மடியில படுக்க வச்சுதான் பாலூட்டியிருக்கோம். வயித்துப்போக்கு, வாந்தின்னு எந்தச் சங்கடமும் இல்லாம கட்டுன சீலையில துடைச்சு சுத்தம் பண்ணுவேன். சுடுதண்ணி வச்சுதான் குளிப்பாட்டுவோம். எங்க மேல எப்போதும் குட்டிங்க பால் வாசம்தான் அடிக்கும்.

தாய் இல்லாம ஒரு குட்டி யானை இருக்குன்னு தெரிஞ்சா முதல் தகவல் இவருக்குத்தான் வரும். எதைப் பத்தியும் யோசிக்காம எந்த நேரமா இருந்தாலும் உடனே கெளம்பிருவார். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஆத்து வெள்ளத்துல அடிச்சிட்டு வந்த குட்டிய மறுபடியும் அதோட தாய்கிட்டயே போராடி ஒப்படைச்சிட்டு வந்தாங்க. குட்டி யானைக்கும் எங்களுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கு. ரகுவைக் காப்பாத்த நாங்க பட்ட பாடு சொல்லவே முடியாது. அந்த மாதிரிதான் அம்முவையும் கொண்டு வந்தாங்க. ரொம்ப சின்னதா யானைக்கான நிறமே கூடாம இளஞ்சிவப்பு நிறத்துல இருந்தது. எப்படிக் காப்பாத்தப்போறோம்னு கலங்கிட்டோம். பாரஸ்ட்ல கொடுத்த சம்பளக் காசுல பால், பழம்னு வாங்கிக் கொடுத்தோம். பாரஸ்ட்லயும் எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தாங்க. தாய் இல்லாம இருக்கும் குட்டிகளைப் பார்த்தாலே மனசு பாரமா இருக்கும்.

தாயைப் பிரிந்த யானைக்கன்றுகளின் தாயுமானவர்கள்!

அப்போதான் கார்த்திகி பொண்ணு வந்து அறிமுகமானது. நல்லா பழகி என் மகளாவே மாறிடுச்சு. வீட்டுக்கு வந்தா நாங்க குடுக்குறதை சாப்பிடும். எங்களுக்கும் எதாவது வாங்கிட்டு வந்து கொடுக்கும். படம் எடுக்க ரெண்டு வருஷமா நிறைய பேர் ரொம்ப கஷ்டப்பட்டாங்க. நடுக்காட்டுல இருக்கற எங்க வாழ்க்கைய உலகம் பூராவும் காட்டிட்டாங்க. யார் யாரோ வந்து எங்ககூட போட்டோ எடுத்துட்டுப் போறாங்க. ஏதோ அவார்டுக்குப் போயிருக்குன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. கார்த்திகி வந்ததும் படத்தைப் பார்ப்போம்” என்றார் அதே வெள்ளந்திச் சிரிப்புடன்.

நிலத்தில் வாழ்ந்துவரும் இந்தப் பேருயிர்கள் மீது பேரன்பு வைத்திருக்கும் தாயுமானவர்களின் அன்புக் கதகதப்பிலிருந்து விலக மனமின்றி விடைபெற்றுக் கிளம்பினோம்.