கரூர் மாவட்டம், கடவூர் அருகில் உள்ள வடவாம்பாடியைச் சேர்ந்தவர் ஜெகஜோதி. கணவனையிழந்த இவர் விழிச் சவால் மாற்றுத்திறனாளி. இவருக்கு, கௌசல்யா, கனிஷ்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கணவரை இழந்து, வருமானத்துக்கு வழியில்லாமல், குடியிருக்க வீடு இல்லாமலும் அல்லல்பட்ட ஜெகஜோதி, தனக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த திங்கள் அன்று, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் கோரிக்கை மனு அளித்தார். உடனடியாக, வருவாய்த்துறை அலுவலர்களை அனுப்பி, அவரது சொந்த ஊரில் ஜெகஜோதிக்கு பட்டா வழங்க இடம் தேர்வு செய்ய வழி செய்தார்.

துரிதகதியில் நடந்த நடவடிக்கைகளுக்கு பிறகு, மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஜெகஜோதிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான ஆணையை வழங்கினார். அவர் விழிச் சவால் மாற்றுத்திறனாளி என்பதால், அதே இடத்தில் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் விடியல் வீடு திட்டத்தின் கீழ் விழிச் சவால் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கழிவறை, சாய்தளம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளுடன் வீட்டிற்குள்ளேயே இருக்கும் வகையில் பிரத்யேகமான வடிவமைப்புடன் வீடு கட்டித் தரப்படும் என ஆட்சியர் உத்தரவாதம் அளித்தார்.
மேலும், ஜெகஜோதியின் பெண் குழந்தைக்கு சமூக குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான கல்வி நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் மாதம் ரூ.4000 கிடைப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அந்த வீட்டிலேயே ஒரு பகுதியில் சிறிய கடை அமைத்துத் தரப்படும் இரண்டாவது குழந்தை வாய் பேசாமலும். காது கேட்காமல் இருப்பதால், அந்த குழந்தைக்குத் தேவையான மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து, அந்த இரண்டு பெண்குழந்தைகளுக்கும் பள்ளிக்குக் கொண்டு செல்லும் நோட்டுகள், புத்தகப்பை, புதிய ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனால், மகிழ்ந்துபோன ஜெகஜோதி, "கணவர் இறந்தபிறகு, கண்தெரியாத நான் இரண்டு குழந்தைகளை வச்சுக்கிட்டு வாழவே வழி தெரியாம அல்லாடிட்டு இருந்தேன். இந்நிலையில், நம்பிக்கையே இல்லாமல்தான் இங்க வந்து மனு கொடுத்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரம் எனக்கு வீட்டுமனை, மற்ற உதவிகள் கிடைக்கும்னு நினைக்கலை. இது போதும். என் ரெண்டு பிள்ளைகளை எப்படியாவது கரை சேர்த்துடுவேன்" என்றார் நெகிழ்ச்சியாக!