மெட்ரோபாலிட்டன் மற்றும் பெருநகர முகங்களே பெரும்பாலும் உலகின் கவனத்துக்கு வருகின்றன. ஆனால் இரண்டாம் தர நகரங்களிலும், கிராமங்களிலும், தங்கள் அளவில் ஒரு வெற்றியை, சேவையை, சாதனையை, நெகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பெண்கள் பலர். அந்த தேவதைகளை அங்கீகரிக்கும் தொடர் இது. #SheInspires
``நல்லா படிப்பேன். ஆனா, எட்டாவதுக்கு மேல படிக்கவிடல. எட்டாவது படிக்கும்போதே, விளையாட்டுப் போட்டிகள்ல ஒன்றிய அளவுல பரிசுகள் வாங்கினேன். பள்ளி ஆண்டு விழாவுல எட்டு போட்டிகள்ல பரிசுகள் வாங்கிக் குவிச்சேன். கனவுகளோடு திரிஞ்ச எனக்கு, மேற்கொண்டு படிக்கவோ, விளையாடவோ வாய்ப்பு கிடைக்கல. 18 வயசுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. ஆசைகள மனசுக்குள்ள புதைச்சுக்கிட்டு, குடும்பம், வயக்காட்டு கூலி வேலைனு குடும்பத்துக்காக ஓடினேன்.

18 வருஷம் கழிச்சு, 36 வயசுல ஒரு வாய்ப்பு கிடைச்சுச்சு. போல் வால்ட், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 2,000 மீட்டர் தடை ஓட்டம்னு இப்போ உலக அளவு போட்டிகள்ல போய் விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கேன். காலம் போன கடைசியில என் கனவுகளுக்கு றெக்கை முளைச்சிருக்கு" - மனதிலும் உற்சாகம் பொங்கப் பேசுகிறார் கீதா.
`மூத்தோர் தடகள போட்டி'களில் சத்தமில்லாமால் சாதித்துக் கொண்டிருப்பவர் கீதா. கரூர் மாவட்டம், குளித்தலை பக்கமுள்ள வை.புதூரைச் சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் மகன் சரண்குமார், பள்ளி இறுதியாண்டு படிக்கும் மகள் யுவஸ்ரீ என இரண்டு பிள்ளைகளின் தாய். கீதாவின் கணவர் செல்வராஜ் இரண்டு வருடங்களுக்கு முன் மாரடைப்பில் இறந்துவிட்டார். குடும்பத்தின் பொருளாதார பாரத்தை ஒற்றை மனுஷியாக சுமக்க வேண்டிய சூழல் கீதாவுக்கு. அதற்கான கடின உழைப்பையும் செலுத்திக்கொண்டு, இன்னொருபக்கம் விளையாட்டிலும் சாதித்துக்கொண்டிருக்கும் வைராக்கிய மனுஷி. கீதா தொடர்ந்து பேசினார்.

``நான் பொறந்த ஊரு பொய்கை புதூர். எனக்கு நாலு அண்ணன்கள், ஒரு அக்கா. அண்ணனுங்க எல்லாருமே விளையாட்டில் ஆர்வமா இருந்து, போட்டிகள்ல ஜெயிச்சுனு இருந்தாலும் எனக்கு விளையாட்டுல ஆர்வம் இருந்ததில்ல. படிப்புலதான் ஆர்வம் அதிகமா இருந்துச்சு.
எட்டாவது படிக்கும்போது, எங்க பள்ளியில இருந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அளவுல நடந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு பிள்ளைகளை அழைச்சுட்டுப் போனாங்க. அப்ப ஒரு பிள்ளை திடீர்னு வரலைனு சொன்னதால, என்ன ஒப்புக்கு சப்பா நினைச்சு, அழைச்சுட்டுப் போனாங்க.
பிச்சம்பட்டி பள்ளியில நடந்த விளையாட்டுப் போட்டியில, கபடியில வின்னரா வந்தோம். நீளம் தாண்டுதல்ல ரெண்டாவது இடம் வந்தேன். கயிறு தாண்டுதல்ல ரெண்டாவது இடமும், 100 மீட்டர் ஓட்டத்துல முதல் இடமும் வந்தேன். அதை பார்த்துட்டு மொத்தப் பள்ளியும் மிரண்டுட்டு. எல்லோரும் கைதட்டி எனக்குப் பரிசு கொடுத்தப்ப, அந்த அனுபவம் புது உற்சாகத்தை தந்துச்சு. தொடர்ந்து, எங்க பள்ளியில நடைபெற்ற ஆண்டுவிழா போட்டியில கலந்துகிட்டு, எட்டு போட்டிகள்ல பரிசு வாங்கினேன். நமக்குள்ள இவ்வளவு திறமையானு நானே என்னை உணர்ந்த தருணம் அது. தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள்ல சாதிக்கணும்னு நினைச்சேன். ஆனா, அந்தக் கனவுக்கு கருவிலேயே கள்ளிப்பால் ஊத்திட்டாங்க'' என்பவருக்கு, வறுமையால் படிப்பு தடைபட்டிருக்கிறது.
``எட்டாவது தேர்ச்சியானதும், `நீ படிச்சது போதும்'னு என்னை மேற்கொண்டு படிக்க வைக்கல. காரணம், அப்போ எங்க மூணாவது அண்ணன் கல்லூரியில படிக்க சேர்ந்திருந்தார். எல்லாரையும் படிக்க வைக்க முடியாத குடும்பச் சூழல். அதனால, வீட்டு வேலைகளை பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும், நான் வாங்குன பரிசுகளை எடுத்து அப்பப்ப பார்த்து, பெருமூச்சு விட்டுக்குவேன்.
இந்த நிலையிலதான், எனக்கு 18 வயசுல திருமணம் நடந்துச்சு. என் கணவர் செல்வராஜ், ரைஸ் மில்லுல மூட்டை தூக்குற வேலை பார்த்தார். தங்கமான மனுஷன். குடும்ப வறுமைக்காக நானும் வாழைக்காய் தூக்குறது, கரும்பு வெட்டுறதுனு கூலி வேலைக்குப் போனேன். குழந்தைங்க பொறந்தாங்க.
இந்த நிலையிலதான், 2017-ம் வருஷம் ஆரம்பத்துல, என் ரெண்டாவது அண்ணன், ஒரு தனியார் பள்ளியில அலுவலக உதவியாளரா எனக்கு வேலை வாங்கிக்கொடுத்தார்.

தினமும் நூறு ரூபா சம்பளம். அங்க வேலைபார்த்த என்னை, தடகள சங்க கரூர் மாவட்ட தலைவர் `அமுதா' சுப்பிரமணியன், உப தலைவர் `கபடி' பாலு, பொருளாளர் விவேகானந்தன் மூணு பேரும், `மூத்தோர் தடகள போட்டி நடக்குது, அதுல கலந்துக்கிறியா? உங்க அண்ணன்கள் விளையாட்டுக்கள்ல சாதிக்கிறதால, உனக்கும் விளையாட்டு நல்லா வரும்னு நினைக்கிறோம்'னு சொன்னாங்க'' - அந்த சிறிய ஒளிக்கீற்றை சரியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் கீதா.
``அதைக் கேட்டதும், உள்ளுக்குள்ள கருகிக்கிடந்த ஆசை, விசுக்குனு துளிர் விட்டுச்சு. `எங்க அண்ணன், கணவர்கிட்ட அனுமதி கேளுங்க'னு சொன்னேன்.
அவங்களும் ஒத்துக்க, எங்கண்ணன் சேகர், பொய்கை புதூர்ல எனக்கு பயிற்சி கொடுத்தார். சேகர் அண்ணனோட மனைவி சரளாவும், தேசிய அளவுல போல் வால்ட் போட்டியில சாதிச்சாங்க. அதைப் பார்த்ததும் எனக்கு ஆர்வம் கூடுனுச்சு. சனி, ஞாயிறுகள்ல கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டேன். வீட்டுக்குப் பின்னாடியே மணலைக் குவிச்சு, போல் வால்ட் விளையாட்டிலும் பயிற்சி எடுத்தேன்.
2017-ம் வருஷம் ஆரம்பிச்சது விளையாட்டுப் போட்டி பயணம்...
மாவட்ட அளவிலான போட்டி, சென்னை நேரு ஸ்டேடியத்துல நடந்த மாநில அளவிலான 35 - 40 வயதினருக்கான மூத்தோர் தடகளப் போட்டினு ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், போல் வால்ட்னு எல்லாத்துலயும் பரிசுகளைக் குவிச்சேன். ரெண்டு புள்ள பெத்த உடம்பா இருந்தா என்ன, வயசு 35-க்கு மேல ஆனா என்ன... விளையாட்டுல இருந்த ஆர்வத்துல நான் விரட்டுன விரட்டுக்கு எல்லாம் என் உடம்பு ஓடி, வளைஞ்சுனு எனக்குப் பரிசுகள் வாங்கிக் கொடுத்துச்சு.

நான் அடைஞ்ச ஆனந்தத்துக்கு அளவே இல்லை. மறுபடியும், வேலைக்குப் போய்கிட்டே, அடுத்த போட்டிகளுக்கு ஆயத்தமானேன். எங்கண்ணன் விடுமுறை நாள்கள்ல பயிற்சி கொடுப்பார். தொடர்ந்து, தேசிய அளவுல ஹைதராபாத்ல உள்ள காஜிபோலி மைதானத்துல நடைபெற்ற போட்டிகள்ல, போல் வால்ட் தாண்டுதல்ல முதலிடம் வந்தேன்.
ஒரு பக்கம் சாதிச்சாலும், இன்னொரு பக்கம் ஊர்க்காரங்க, `இவளுக்கு இது தேவையா?'னு என் கணவர்கிட்டயே சொல்வாங்க. அதுக்கு அவர், `என் மனைவி சாதிக்க பிறந்தவ'னு சொல்லி அவங்க வாயை அடைச்சுருவார். அதோடு, நான் போட்டிகளுக்குப் போக மூட்டை தூக்கி சம்பாதிச்ச காசை கொடுத்து அனுப்புவார்'' என்பவர் தன் கிராமத்தின் சிறிய சாலைகளிலிருந்து புறப்பட்டு பெங்களூரு, ஆந்திரா, கோவா என்று சென்று விளையாடி வெற்றியைத் துரத்தி தொடர்ந்து பரிசுகளைக் குவித்துள்ளார்.
``2018-ம் வருஷம் கரூர்ல நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில, போல் வால்ட், ஹை ஜம்ப், லாங் ஜம்ப் போட்டிகள்ல முதலிடம் வந்தேன். தொடர்ந்து நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில போல் வால்ட், லாங் ஜம்ப் போட்டிகள்ல முதலிடமும், ஹைஜம்ப் போட்டியில் இரண்டாமிடமும் வந்தேன். பெங்களூரு இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் போல் வால்ட் தாண்டுதல்ல முதலிடம், லாங் ஜம்ப்பில் இரண்டாமிடம், ஹைஜம்ப்பில் மூன்றாமிடமும் வந்தேன். அதேபோல், 2019-ம் வருடமும் மாவட்ட அளவுல நடைபெற்ற போட்டியில, மூன்று போட்டிகள்லயும் முதலிடம் வந்தேன். தஞ்சை பூண்டி கல்லூரியில நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில போல் வால்ட், லாங் ஜம்ப் போட்டிகள்ல முதலிடம் வந்தேன். ஹைஜம்ப் போட்டியில் இரண்டாமிடம் வந்தேன். ஆந்திரா குண்டூர்ல நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில, போல் வால்ட் தாண்டுதல்ல முதலிடமும், லாங் ஜம்ப் மற்றும் 2,000 மீட்டர் தடையோட்டத்துல இரண்டாமிடமும் வந்தேன்.

தொடர்ந்து, கோவாவுல நடந்த `விமன்ஸ் மீட்'ல கலந்துக்கிட்டேன். அதுக்கு போக்குவரத்துச் செலவுக்கு மூட்டை தூக்கி சம்பாதிச்ச பணத்துல என் கணவர் 5,000 ரூபாய் கொடுத்தார். `அமுதா' சுப்பிரமணியன், `கபடி' பாலுனு பலரும் நிதியுதவி பண்ணினாங்க'' என்பவர், வாழ்க்கையில் தனக்கு பேரிழப்பு காத்திருப்பதை அப்போது அறியவில்லை.
``கோவாவுக்கு கிளம்பினப்போ, என் கணவருக்கு உடம்புக்கு முடியலை. லூஸ் மோஷன் போயிட்டே இருந்துச்சு. `நான் போகலை'னு சொல்லியும், என்னை கணவர் கோவாவுக்கு அனுப்பி வெச்சார். 2019-ம் வருஷம் நடந்த அந்தப் போட்டியில், லாங் ஜம்ப்ல ரெண்டாமிடம் வந்தேன். ஜூலை 4-ம் தேதி வீட்டுக்கு வந்தேன். 7-ம் தேதி விடியற்காலை, என் கணவர் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டார்'' - கண்கள் குளமாகின்றன கீதாவுக்கு.
வேறு எந்த ஆதரவும் இல்லாத நிலையில், குடும்பப் பொறுப்புகள், விளையாட்டு முயற்சிகள் என இரட்டை குதிரை பயணத்தை வைராக்கியத்துடன் தொடர்ந்திருக்கிறார் கீதா.
``கணவரை இழந்த பேரிடியில இருந்து நான் மீள்றதுக்குள்ள, நான்தான் இனி குடும்ப பாரத்தை சுமக்கணும் என்ற நிதர்சனம் என் முன்னாடி நின்னது. அதோடு, `இனி ஒரு வருஷத்துக்கு எங்கேயும் விளையாட போக வேண்டாம்'னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா, மணிப்பூரில் தேசிய அளவிலான போட்டி நடக்குறதா சொல்லி, காவல்துறை உயரதிகாரி ஒருத்தர் எனக்கு ஃப்ளைட் டிக்கெட்டுக்கு ஏற்பாடு பண்ணி, அனுப்பி வெச்சார். துயரத்தை எல்லாம் துடைச்சுப் போட்டுட்டு கிளம்பினேன்.
`உன் மனசு இப்போ இருக்குற நிலையில விளையாட முடியுமா'னு சிலர் கேட்டாங்க. என் கண்ணீரையெல்லாம் வைராக்கியமா திரட்டிக்கிட்டு கிரவுண்டுல இறங்கினேன். போல் வால்ட், 2,000 மீட்டர் தடை ஓட்ட போட்டிகள்ல இரண்டாமிடம் வந்தேன். அதன் மூலமா போன வருஷம் மே மாசம் கனடாவுல நடைபெற இருந்த உலக அளவிலான போட்டியில கலந்துக்க தேர்வானேன். என் கனவு கைக்கு எட்ட போகுதுனு நெனச்சுக்கிட்டு இருந்தப்ப, கொரோனா வந்து அதை தடுத்துட்டு'' எனும் கீதா, பயிற்சி கம்பத்தை ஆற்றாமையுடன் பார்க்கிறார்.
பள்ளியில் தினமும் 100 ரூபாய்தான் சம்பளம் என்பதால், இப்போது தாத்தயங்கார்பேட்டையில் உள்ள டெக்ஸ்டைல்ஸில் மாதம் ரூ. 6,000 சம்பளத்துக்கு வேலைக்குச் செல்கிறார் கீதா.
``தனியார் கல்லூரியில படிக்கும் என் மகனின் படிப்புச் செலவை, என்னோடு போட்டிகள்ல கலந்துக்கும் கோவையைச் சேர்ந்த காயத்ரிதான் ஏத்துக்குறாங்க. என் மகளின் கல்லூரி படிப்பு செலவையும் அவங்க ஏத்துக்குறதா சொல்லியிருக்காங்க.
என் மகனும் கபடியில் மாநில அளவில் சாதிச்சுருக்கான். அதை வெச்சு ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல அவனுக்கு போலீஸ் வேலை வாங்கும் முயற்சியில இருக்கோம்'' என்று நம்பிக்கையுடன் கூறும் இந்தத் தாய், தனக்கான வெற்றி எல்லையையும் தீர்மானித்து வைத்திருக்கிறார்.
``நான் உலக அளவுல சாதிக்கணும். இப்போ நான் சாதாரண இரும்பு போலை வெச்சுதான் தாண்டுறேன். அதோட மதிப்பு 10,000 ரூபாய். ஃபைபர் போல் வச்சு தாண்டினா, என்னால இன்னும் அதிக உயரம் தாண்ட முடியும். ஆனா, அதோட குறைஞ்சபட்ச விலையே ஒரு லட்சம்.
கொரோனா பிரச்னை முடிஞ்சதால, இப்போ மதுரை அல்லது திருநெல்வேலியில மாநில அளவிலான போட்டி வைக்க பேசிக்கிட்டு இருக்காங்க. அதுல சாதிச்சு, கடந்த வருஷம் கொரோனாவால பறிபோன வாய்ப்பை இந்த முறை மீண்டும் வசப்படுத்துவேன்; உலக அளவிலான போட்டில இந்த வருஷம் கலந்துக்குவேன். நிச்சயம் சாதிப்பேன்" என்றார் உறுதியாக!
கிராமம், வறுமை, ஒற்றை பெற்றோர் பொறுப்புகள், பயிற்சிக்கான உபகரணம் இல்லாமை என இவற்றுக்கு எல்லாம் இடையிலும், தன் சர்வதேச கனவை கதகதப்பு குறையாமல் அடைகாத்து வருகிறார் கீதா. வெற்றி வந்து சேரட்டும் விரைவில்!