Published:Updated:

அழியும் நிலையில் ஆனைமலை பழங்குடிகள்!

ஆனைமலை பழங்குடிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனைமலை பழங்குடிகள்

வனத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பே காடுகளை பூர்வீகமாகக்கொண்டு காடர், முதுவர், மலை மலசர், மலசர், இரவாளர், புலையர் என ஆறு வகையான பழங்குடியினர் ஆனைமலைத் தொடர் களில் வசித்துவருகின்றனர்.

நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளாகின்றன. ஆனால், பூர்வகுடிகளுக்கு மட்டும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவேயில்லை. ஆங்கிலேயே காலனிய ஆதிக்கத்திலிருந்து சொந்த அரசின் காலனிய ஆதிக்கத்துக்கு அவர்களின் அடிமைத்தளை மாற்றப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் பெரும்பான்மையான பழங்குடிகளால் தங்கள் பூர்வீக மண்ணில் குடியிருப்புகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் பட்டா பெற முடியவில்லை. வனத்துறையின் தொடர் வஞ்சகத்தால் பூர்வகுடிகள் தங்களுடைய உரிமைகளை இழந்ததுடன், `வனத்தை ஆக்கிரமித்திருக்கும் குற்றவாளிகள்’ என்றே முத்திரை குத்தப்படுகின்றனர். தமிழக மேற்குதொடர்ச்சி மலையின் ஆனைமலைத் தொடர்களில் வாழும் பழங்குடிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

அழியும் நிலையில் ஆனைமலை பழங்குடிகள்!

அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் ஆனைமலை பூர்வகுடிகளுக்குக் கிடைக்க வனத்துறை முட்டுக்கட்டை போடுவதால், பூர்வகுடி மக்கள் வாழும் பகுதி தொடர்ந்து இருண்ட கண்டமாகவே உள்ளது. சமீபத்தில் பழங்குடிகளுக்கு ரேஷன் அட்டை வழங்கச் சென்ற தாசில்தாரை, ஐந்து மணி நேரம் வனத்துறை சோதனைச்சாவடியில் உட்காரவைத்துத் திருப்பி அனுப்பினர். உணவும் வாழிடமும் மறுக்கப்படும் வனவிலங்குகள்கூட காட்டைவிட்டு வெளியே வந்து தங்கள் பிரச்னையை நமக்கு உணர்த்துகின்றன. ஆனால், உரிமைகள் மறுக்கப்படும் பழங்குடிகளின் குரல், இந்தக் காடுகளுக்குள்ளேயே புதைக்கப்படுகிறது.

வனத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பே காடுகளை பூர்வீகமாகக்கொண்டு காடர், முதுவர், மலை மலசர், மலசர், இரவாளர், புலையர் என ஆறு வகையான பழங்குடியினர் ஆனைமலைத் தொடர் களில் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேயிலை, காபி பெருந்தோட்டங் களுக்காகவும், அணைகள் கட்டுவதற்காகவும் தங்கள் பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள் இவர்கள். இந்த மலைத்தொடரில் 1976-ம் ஆண்டு இந்திரா காந்தி வனச்சரணாலயமும், 2008-ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகமும் வந்த பிறகு பழங்குடிகளின் நிலை மிகவும் பரிதாபமாகிவிட்டது. வனம், வன உயிரினப் பாதுகாப்புத் திட்டங்களால் பூர்வகுடிகளின் வாழ்வா தாரமும் உரிமைகளும், அவர்களை வெளியேற்றும் முகாந்திரத்துடன் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. வனத்துக்குள் அரசின் இதர துறைகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், வனத்துறையே பிரதானம். இதனால், வனத்தின் புதல்வர்கள் வனத்துறையிடம் கையேந்தும் நபர்களாக மாற்றப்பட்டு, பரிதாபமான நிலையில் வாடுகின்றனர்.

ஆனைமலை பழங்குடிகள்
ஆனைமலை பழங்குடிகள்

வால்பாறையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கல்லார் காடர் வனக்குடியிருப்பு. கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த பெருமழையால் அடர்வனத்தில் உள்ள இந்தக் கிராமம் ஒட்டுமொத்தமாகச் சேதமடைந்தது. இனியும் இங்கு இருந்தால் கிராமமே அழிந்துபோனால் கூட வெளியுல குக்குத் தெரியாது என அஞ்சி, உயிர்பயத்தில் தங்கள் வீடு, உடைமை, வளர்ப்புப் பிராணிகளை விட்டுவிட்டு தங்கள் முன்னோர் வாழ்ந்த பாரம்பர்ய வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் கல்லார் மக்கள். மலையில் மண்சரிவு ஏற்படாத இடத்தை தங்களின் பாரம்பர்ய அறிவின்மூலம் அறிந்து மூங்கில், இலைதழைகளால் ஆறு சிறிய குடிசைகளை அமைத்தனர். இவர்கள் மொத்தம் 100 பேர். இதில் பெரும்பாலானோர் முதியோர், குழந்தைகள், பெண்கள், உடல் நலிவுற்றோர். தங்கள் துயரநிலைகுறித்து அரசுக்கு தொடர்ந்து மனுவும் அனுப்புகிறார்கள்.

நோய்த்தொற்று, வனவிலங்கு அச்சுறுத்தல் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் தங்கள் குடியிருப்பை பழங்குடிகள் இவ்வாறு மாற்றுவது இயல்பானது. ஆனால் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர், கல்லார் காடர் பழங்குடிகளின் இந்தச் செயலை மிகப்பெரிய அத்துமீறலாகக் கருதி அங்கு இருந்தவர்களை பலவந்தமாக அகற்றி, குடிசைகளுக்குத் தீ வைத்தனர். அருகில் உள்ள தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் கட்டாயப்படுத்தித் தங்கவைத்துள்ள னர். பழுதடைந்த நான்கு வீடுகளில் 23 குடும்பத்தினர் 110 நாள்களுக்குமேல் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று வரை அவர்களுக்கு மாற்று இடம் அளிக்கப்படவில்லை.

ஆனைமலை பழங்குடிகள்
ஆனைமலை பழங்குடிகள்

2006-ம் ஆண்டு வன நில உரிமை அங்கீகாரச் சட்டம் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப் பட்டபோது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங், ‘பழங்குடி மக்களுக்கு அரசு மிகப்பெரும் அநீதி இழைத்துவிட்டது. அவர்கள் நீதிக்காக வெகுநாள் காத்துக்கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். பாரம்பர்யமாக வனத்தில் வாழும் பழங்குடிகளுக்கு 10 சென்ட் பரப்பளவில் குடியிருப்பு மனையும், விவசாயத்துக்காக அதிக பட்சமாக 10 ஏக்கர் வரை நிலமும் வழங்கவேண்டும். அவர்களுடைய பாரம்பர்ய உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என்றார். இது, பழங்குடி மக்களுக்காக இயற்றப்பட்ட முக்கியமான சட்டம். இந்தச் சட்டம், பழங்குடிகளி டமிருந்து தட்டிப்பறிக்கப்பட்ட அதிகாரத்தை, மீண்டும் பழங்குடிகளுக்கே பகிர்ந்தளித்தது. மேலும் வனத்தில் நிர்வாகம், மேலாண்மை செய்வதில் பழங்குடிகளுக்கு உள்ள பங்கை உறுதிசெய்தது.

வனத்துறையால் பழங்குடிகளுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு, நீதி வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டமும் நடைமுறைக்கு வந்து 12 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. இந்தச் சட்ட அமலாக்கத்தை மிகத் தாமதப்படுத்திய வனத்துறையினர், தற்போது பழங்குடி மக்களை வனத்தைவிட்டு வெளியேற்றும் மூர்க்கத்தனமான ரகசியத் திட்டத்துடன் களமிறங்கியுள்ளனர். ‘நீங்கள் சமவெளிப் பகுதிக்கு வந்தால் உங்களுக்கு வீடும் பணமும் தருகிறோம்’ என ஆசைவார்த்தை காட்டும் ‘கோல்டன் ஹேண்ட்ஷேக்’ எனும் திட்டத்தை பழங்குடி மக்களுக்கான கூட்டங்களில் முன்வைக்கிறது வனத்துறை. பழங்குடிகளுக்கும் காடுகளுக்கும் உள்ள தொடர்பை முற்றாக அறுத்திட முனைகிறது இந்தத் திட்டம். ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைதான் இது.

ஆனைமலை பழங்குடிகள்
ஆனைமலை பழங்குடிகள்

இந்தச் சட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கோடிக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பழங்குடி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டும், ஆனைமலைத் தொடரில் வாழும் பழங்குடிகளில் ஒருவருக்குக்கூட நிலம் வழங்கப்படவில்லை என்பதுதான் அநீதியின் உச்சம். இந்தச் சட்டத்தின் முதல் அம்சமான அனைத்து வனக்கிராமங்களையும் வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டிய செயல்திட்டத்தை தமிழக அரசு இப்போதுதான் இந்தப் பகுதியில் தொடங்கியிருக்கிறது.

பூர்வகுடிகளைப் புறக்கணிப்பது, உரிமைகளை மறுப்பது, அவர்களின் தனித்த கலாசாரம், மொழி, வாழ்வியலைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவது ஆகியவை, அரசியல் சாசனம் பழங்குடி மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளுக்கு எதிரானவை. மேலும், ஐக்கிய நாaடுகள் சபையின் பூர்வகுடிகளுக்கான உரிமைப் பிரகடனத்துக்கும் எதிரானவை. பழங்குடிகளுக்கு நீதி வழங்க வேண்டிய மற்ற துறைகளும் நிர்வாக அமைப்புகளும் வனத்துறையின் இந்தச் சர்வாதிகாரப் போக்குக்குத் துணைபோவது மிகவும் வேதனை. இத்தகைய அநீதிகளிலிருந்து பழங்குடிகளைப் பாதுகாக்க சட்டங்கள் உள்ளன. அநீதிக்கு உடந்தையாகும் இதுபோன்ற செயல், வன உரிமைச் சட்டம் 2006 பிரிவு V(7) கீழ் 1,000 ரூபாய் அபாராதத்தொகை செலுத்தப்பட வேண்டிய குற்றமாகும். இவ்வளவு குறைவான தொகையே ஓர் அநீதிதான். பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்மீதான வன்கொடுமைத் தடுப்புத் திருத்தச் சட்டம் 2016 பிரிவு 3-ன்கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். காட்டில் வாழும் பழங்குடிகளுக்குப் பயன்தராதவரை, இத்தகைய சட்டங்கள் இருந்து என்ன பயன்?

நுகர்வுக் கலாசாரத்தைக் குறைத்து இயற்கை யுடன் இணைந்து பொதுச்சமூகம் வாழ உதாரண மாக விளங்குபவர்கள் பழங்குடிகள்; காலம்காலமாக தங்களுக்குத் தேவையானதை இந்தக் காடு தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடையவர்கள். சந்தைக்காக எதையும் உற்பத்தி செய்யாமல், பிறப்பு முதல் இறப்பு வரை ஆடல், பாடல், நம்பிக்கைகள், சடங்குகள் என அனைத்தையும் காடு சார்ந்ததாகவே அமைத்திருப் பார்கள். கலாசாரச் செழுமையோடு வாழ்வைக் கொண்டாடத் தெரிந்த இந்தச் சமூகத்தை இன்று பெரும்சிக்கலுக்கு உள்ளாக்கியதில் வனத்துறையின் பங்கே மிக அதிகம்.

தங்களுடைய பிரச்னைகளை, உணர்வுகளை, அரசும் பொதுச்சமூகமும் செய்துதரும் என்ற நம்பிக்கையுடன் நீண்டநாளாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் பூர்வகுடிகள். கையறு நிலையில் உள்ள இவர்களின் வாழ்வை, பாரம்பர்ய உரிமையை உறுதிசெய்ய நாம் என்ன செய்யப் போகிறோம்? அதற்கான பொறுப்பும் கடமையும் அரசைப்போலவே பூமியை நேசிக்கும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு. ஏனென்றால், பழங்குடிகள் காடுகளின் புதல்வர்கள்... நாம் பழங்குடிகளின் புதல்வர்கள்!