
அந்த வாய்ப்பைத்தான் இப்போதைய அறிவிக்கையில் பறித்திருக்கிறது மத்திய அரசு.
கொரோனாவால் உலகம் நிலைகுலைந்து கிடக்கிறது. எபோலா, மெர்ஸ், சார்ஸ், ஸிகா, நிபா வரிசையில் விலங்கிலிருந்து பரவிய இந்தத் தீநுண்மியை அழிக்க வழிதெரியாமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள் மனிதர்கள். `இதுமட்டுமல்ல, இதைப்போல இன்னும் வரப்போகின்றன’ என்று அச்சமூட்டு கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்படியொரு பேரிடரில் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை-2020-ன் வரைவை வெளியிட்டு மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது மத்திய அரசு. அந்த அறிவிக்கை, கொரோனாவைப் பின்னுக்குத்தள்ளிப் பேசுபொருளாகியிருக்கிறது. சமூக ஊடகங்களில் #WithdrawEIA2020, #ScrapEIA2020 போன்ற ஹேஷ்டேக்குகளில் அறிவிக்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசிவருகிறார்கள் நெட்டிசன்கள்.
கருத்துக் கேட்புக் கூட்டங்களில் எழுப்பப்படும் எதிர்ப்புகள், போராட்டங்கள் காரணமாகப் பல ஆபத்தான திட்டங்கள் நிறுத்திவைக்கப் பட்டுள்ளன. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள வரைவு, `மக்களிடமிருந்து அந்த உரிமையைப் பறித்து, நிறுவனங்களுக்கும் அரசே மேற்கொள்ளும் திட்டங்களுக்கும் சட்ட அரணாக இருக்கிறது’ என்பதுதான் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு.
1984-ல் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். அந்த விபத்துக்குப்பிறகுதான் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்தன. அதன் தொடர்ச்சியாக, 1986-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. காற்று, நீர், நிலத்தோடு மனிதர்கள், விலங்குகளையும் பிணைக்கும் இந்தச் சட்டத்தின் கீழ், விதிகளை மீறுவோருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை, ஒரு லட்சம் அபராதம் விதிக்கமுடியும்.

இந்தச் சட்டத்தின்கீழ் தொழிற்சாலைகளை வரையறைப்படுத்த 1994-ல் உருவாக்கப் பட்டதுதான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை. `சூழலியல் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறைகளை ஓர்மைப்படுத்துவதும், மக்களை சூழலியல் பாதுகாப்பில் இணைப்பதுமே இந்த அறிவிக்கையின் நோக்கம்’ என்று கூறப்பட்டது.
1994-ல் உருவாக்கப்பட்ட இந்த அறிவிக்கையின் நடைமுறைகளை, 2006-ல் மன்மோகன்சிங் அரசு மாற்றி அமைத்தது. அப்போதே நிறுவனங்களுக்குச் சாதகமாக அரசு நடந்துகொண்டதாகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன.
சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, வெள்ளை எனத் தொழில்களின் தன்மை பிரிக்கப்பட்டு `ஏ’, `பி’ என இரண்டாக அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. தொழில் தொடங்கும் நிறுவனம், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, திட்டத்தின் பரப்பளவு, வெளியேறும் கழிவுகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், கழிவுகளைக் கையாளும் முறைகள், பாதிப்புகளுக்கான தீர்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டும். அந்த அறிக்கையை முன்வைத்து, மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஆதரவு, எதிர்ப்பு அனைத்தையும் முறைப்படி பதிவு செய்யவேண்டும். அவற்றையெல்லாம் இணைத்து, `ஏ’ பிரிவில் வரும் தொழில் என்றால் மத்திய அரசிடமும் `பி’ பிரிவில் வரும் தொழிலென்றால் மாநில அரசு நியமித்துள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடமும் சமர்ப்பிக்க வேண்டும். அங்கிருக்கும் நிபுணர்குழு முழுமையாக ஆய்வுசெய்து, திட்டத்துக்கு அனுமதி தரும் அல்லது நிராகரிக்கும். ஆக, வாழ்வாதாரத்தையோ, சுற்றுச்சூழலையோ பாதிக்கும் திட்டங்களை எதிர்க்க மக்களுக்குக் கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்பாக இந்த அறிவிக்கையும், கருத்துக்கேட்பும் இருந்தன.
2008-ல் திருவண்ணாமலையில் உள்ள கவுத்தி-வேடியப்பன் மலையில், ஜிண்டால் நிறுவனம் இரும்புத்தாது எடுக்கும் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டது. அந்நிறுவனம் தயாரித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில், திட்டத்துக்காக 2.2 லட்சம் மரங்கள் வெட்டப்படும் என்றும், மலையை உடைக்கும் சத்தத்தால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குக் கேட்புத்திறன் பாதிக்கும் என்றும், தூசியை சுவாசிப்பதால் நுரையீரல் நோய் ஏற்படலாம் என்றும் படிப்படியாக இதையெல்லாம் குறைப்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அறிக்கை மக்கள் மத்தியில் பரவ, கருத்துக்கேட்புக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். பிறகு அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. எண்ணூர் அனல்மின் நிலையத் திட்டம், தூத்துக்குடி தொழில் பூங்காப் பணிகளும் கருத்துக்கேட்பில் எழுப்பப்பட்ட எதிர்ப்பால் முடங்கியிருக்கின்றன. அந்த வாய்ப்பைத்தான் இப்போதைய அறிவிக்கையில் பறித்திருக்கிறது மத்திய அரசு.

“முன்புள்ள நடைமுறையில், `பி’ பிரிவில் இருக்கும் தொழில்களில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாத தொழில்களை, மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையமே `பி 2’ பிரிவுக்குக் கொண்டுபோகும். அந்தப் பிரிவில் வரும் தொழில்களுக்குக் கருத்துக்கேட்பு, சுற்றுச்சூழல் ஆய்வு தேவையில்லை. செங்கற்சூளை, சிறிய குவாரிகள் அப்படிக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. இப்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிவிக்கையில், மத்திய அரசே `பி 2’ பிரிவில் தொழில்களைச் சேர்த்திருக்கிறது. அதில பல தொழில்கள் `ஏ’, `பி’ பிரிவுகளில் இருந்த, அதிக சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துபவை. இதுபற்றி மக்கள் கேள்வி எழுப்பவே முடியாது. சுற்றுச்சூழல் ஆய்வும் தேவையில்லை என்கிறார்கள். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்போது குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூடப் பதிவுசெய்ய முடியாதது, மிகப்பெரிய அநீதி.
சர்வதேச எல்லையிலிருந்து 100 ஏரியல் கி.மீ பரப்பில் செயல்படுத்தப்படும் பைப் லைன், விமான நிலையங்கள், கப்பல் உடைக்கும் தளங்கள், தொழிற்பேட்டைகள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு, சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று வரைவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடி அதிகபட்சம் 27 ஏரியல் கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது’’ என்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன்.

இந்த அறிவிக்கையில் இருக்கும் இன்னொரு விபரீதத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள் சூழலியலாளர்கள். சூழலியலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு தொழிலை அனுமதியே பெறாமல் தொடங்கமுடியும். தொடங்கியபிறகு, எவ்வளவு காலம் அனுமதி பெறாமல் நிறுவனம் இயங்கியதோ அவ்வளவு காலத்துக்கான அபராதத்தைச் செலுத்திவிட்டு அனுமதி பெற்றுக்கொள்ளலாம். அதிகபட்ச அபராதம் ஒரு நாளைக்கு 5000 ரூபாய். இதன்மூலம், `பி 2’ பிரிவில் வராத தொழில்களுக்கும்கூட குறுக்கு வழி நடைமுறைகளை வகுத்துக்கொடுத்திருக்கிறார்கள் என்ற குமுறல் வெளிப்படுகிறது.
“தமிழகத்தைப் பொறுத்தவரை அண்மைக்காலமாகத்தான் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். எந்தத் திட்டமாக இருந்தாலும் சூழலியல் ஆர்வலர்களோடு கைகோத்துக்கொண்டு மக்கள் களத்தில் நிற்கிறார்கள். இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து மக்கள் பக்கம் நிற்க வேண்டிய அரசு, `நீங்கள் யார் இதை எதிர்க்க’ என்ற மனநிலையை இந்த அறிவிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறது. திட்டம் எந்தப் பகுதியில் தொடங்கப்படு கிறதோ அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கருத்துக்கேட்புக் கூட்டங்களில் பங்கேற்கமுடியும்; ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டால் அந்தப்பகுதியில் வசிக்கும் அதே மக்களோ, சமூக அமைப்புகளோ புகார் செய்யமுடியாது; நீதிமன்றத்துக்கும் செல்லமுடியாது; அரசோ, அரசு நிறுவனங் களோ மட்டுமே புகார் செய்யமுடியும். மக்களைப் பிளவுபடுத்துவதற்கான வெளிப்படையான சூழ்ச்சி இது’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார் சுந்தர்ராஜன்.
ஒரு திட்டத்தை, `தேசப் பாதுகாப்பு சார்ந்தது’ (strategic plan) என்று அரசு அறிவித்துவிட்டால், அதற்குச் சூழலியல் தாக்க மதிப்பீடோ, மக்கள் கருத்துக்கேட்போ அவசியமில்லை என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், `தமிழகத்தில் உருவாக்கப்படும் எட்டுவழிச்சாலை தேச நலனுக்கானது. மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த அவசியமில்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது ஒரு சமீபத்திய உதாரணம்.
“1994 தொடங்கி 2006க்குள் 12 முறையும் 2006 முதல் 2020 வரை 53 முறையும் சின்னச்சின்னதாக இந்த அறிவிக்கையைத் திருத்தியிருக்கிறார்கள். இப்போது மொத்தமாகத் திருத்தி எழுதப்பட்டிருக்கிறது’’ என்கிறார் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன்.
காடழிப்பும், சூழலியலில் ஏற்பட்ட பாதிப்புகளுமே கொரோனா போன்ற தொற்றுகள் ஏற்படக்காரணம் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். தேசத்தின் வளர்ச்சியில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. அதற்காக இழப்புகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், வளர்ச்சி யாருக்கானது என்பதுதான் இங்கே எழுப்பப்படுகிற கேள்வி.

“வளர்ச்சி மக்களுக்கானதாக இல்லை என்பதுதான் இங்கே பிரச்னை. ்இந்தியாவின் பண்பாடே விவசாயம் சார்ந்ததுதான். அதை அழித்துவிட்டு, கீழேயிருக்கிற கனிமங்களைச் சுரண்டுவதைத்தான் எதிர்க்கிறோம். ஜனவரி 15-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஏலம் நடந்தது. வேதாந்தா நிறுவனமும், ஓ.என்.ஜி.சி நிறுவனமும் ஏலம் எடுத்தார்கள். மறுநாள், `ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் ஆய்வும், மக்கள் கருத்துக்கேட்பும் தேவையில்லை’ என்று அறிக்கை வெளியிட்டது மத்திய அரசு. இப்போது அதைச் சட்ட பூர்வமாக்குகிறார்கள். பெரும்பாலான அந்நிய நிறுவனங்கள், இங்கே தொழிற்சாலை அமைத்து தங்கள் தயாரிப்பை இந்தியாவுக்குத் தரப்போவதில்லை. நம் வளத்தைப் பயன்படுத்தி ஏதோ ஒரு நாட்டுக்குக் கொண்டு செல்லப் போகிறார்கள். 30,000 பேருக்கு வாழ்வாதாரமாக இருக்கிற விவசாய நிலத்தில் ஒரு தொழிற்சாலையைக் கொண்டு வந்தால் 200 பேருக்கு வேலை கிடைக்கும். இதுதான் எதார்த்தம். இருப்பதை அழிக்காமல் வளர்வதுதான் வளர்ச்சி...’’ என்கிறார் சூழலியாளர் பேராசிரியர் ஜெயராமன்.
``மத்திய அரசின் இந்தச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவைத் தமிழக அரசு எப்படிப் பார்க்கிறது?’’ தமிழகச் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணனிடம் கேட்டோம். “அறிவிக்கையை முழுமையாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். விவாதித்து இது தொடர்பாக அறிக்கை வெளியிடுவோம்’’ என்றார் அவர்.

பொருளாதார வளர்ச்சி, தொழில் மேம்பாடு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் அவசியம்தான். ஆனால் அதன் விலை? உலக நாடுகள் காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு அஞ்சி பல்வேறு ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், `வளர்ச்சி’ என்ற பெயரில் இந்தியா மேலும் மேலும் இயற்கையைச் சிதைக்கும் நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்பதும் மக்களின் உரிமையைப் பறிக்கக்கூடாது என்பதும்தான் எல்லோரின் கோரிக்கை.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை குறித்துத் தமிழக பாரதிய ஜனதா மாநிலத் துணைத்தலைவர் வானதி சீனிவாசனிடம் உரையாடினோம்.
``சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில், பல திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்பு விலக்கப்பட்டுள்ளதே?”
``எந்தவிதச் சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்தாத தொழில்களை மட்டும் பி-2 என்று குறிப்பிட்டு, கருத்துக்கேட்புக் கூட்டம் தேவையில்லை என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள். ஏ, பி-1 பிரிவுகளுக்குக் கருத்துக்கேட்பு கட்டாயம். பி-2-ல், சாலைகள், பாலங்கள் போன்ற திட்டங்களும் சிறிய அளவிலான தொழில்களும்தான் வருகின்றன. காலதாமதமில்லாமல் உடனடியாகத் தொழிலைத் தொடங்குவதற்காகச் செய்யப்பட்ட மாற்றம் இது.’’

`` `பி2’ பட்டியலில் இருக்கும் பெரும்பாலான தொழில்கள் சிவப்பு, ஆரஞ்சு நிற அடையாளமுள்ள தொழில் நிறுவனங்கள்...’’
`` `பெட்ரோலியம் கெமிக்கல் இண்டஸ்ட்ரி’ என்றால் நீங்கள் மீத்தேனையும் ஹைட்ரோகார்பனையும்தான் நினைப்பீர்களா? பெட்ரோல் பங்க் இருக்கிறது. அதுவும் பெட்ரோலிய நிறுவனம்தான். எது அத்தியாவசியமோ, மக்களுக்குத் தேவை எதுவோ அதைத்தான் `பி2’-ல் வைத்திருக்கிறோம். அதில் பிரச்னை இருக்கும்பட்சத்தில் மக்கள் கேள்வியே கேட்கமுடியாது என்றில்லை. அரசியலமைப்புச் சட்டம் கேள்வி கேட்க, தன்னை பாதிக்கும் ஒன்றைப்பற்றிப் புகார் செய்ய எல்லோருக்கும் உரிமை கொடுத்திருக்கிறது. நீதிமன்றம்கூடப் போகலாம். சரி... இப்போது அறிவிக்கை மக்கள் முன்னால்தானே வைக்கப்பட்டிருக்கிறது. `பி2’-ல் இருப்பது ஆபத்தான நிறுவனங்கள் என்று அதில் பதிவு செய்யுங்கள்.’’
``ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே வைக்கப்பட்டிருக்கிற அறிவிக்கையை தூத்துக்குடியிலோ, தஞ்சாவூரிலோ இருக்கிற ஒரு சாதாரண மனிதர் எப்படிப் புரிந்துகொண்டு கருத்து சொல்ல முடியும்?’’
``நீங்கள் சொல்வது மிகவும் நியாயமான விஷயம்... எல்லா மொழிகளிலும் தரப்படவேண்டும். இதுபற்றி அரசிடம் தெரிவிப்போம்.’’
``மக்கள் பேரிடரில் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் இந்த அறிவிக்கையைப் பார்த்து மக்கள் கருத்து சொல்லமுடியும் என்று நம்புகிறீர்களா?’’
``நீங்கள் கொரோனா பற்றிச் சொல்கிறீர்கள். இன்னொரு பக்கம் `பொருளாதாரம் என்னாச்சு’ என்றும் கேட்கிறீர்களே... அரசாங்கம் என்ன செய்யும், அரசு இயங்கவேண்டுமல்லவா? மற்ற நேரங்களைவிட வேகமாக இயங்கவேண்டிய தருணம் இது. இதற்கு முக்கியத்துவம் அளித்துதான் ஆகவேண்டும்.’’
``அரசு எல்லா வளங்களையும் தொழில் நிறுவனங்களுக்குத் திறந்து விட்டுவிட்டதாகச் சொல்கிறார்களே சூழலியலாளர்கள்?’’
``சுற்றுச்சூழலை நாசமாக்குவதில் மேலைநாடுகளுடைய பங்குதான் அதிகம். நாம் மிகவும் பொறுப்போடுதான் செயல்படுகிறோம். ஜெயந்தி நடராஜன் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து மேலை நாடுகளின் தவறுகளைப் பேசியது. இன்றும் நாம்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னிற்கிறோம். நம்மிடம் ஒரு பண்பாடு இருக்கிறது. இயற்கையை அளவாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் எல்லோருக்கும் தெளிவு இருக்கிறது.’’
``ஏராளமான பாக்சைட் சுரங்கங்களும் நிலக்கரிச் சுரங்கங்களும் வனத்துக்குள்தானே வரப்போகின்றன?’’
``காட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை தொட்டில் கட்டி மருத்துவமனைக்குத் தூக்கி வருவதை சில நாள்களுக்கு முன்கூட டிவியில் பார்த்தேன். வருத்தமாக இருக்கிறது. மலைவாழ் கிராமங்களில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்றால்கூட ஒரு ஏக்கர் மரங்களை வெட்டத்தானே வேண்டியிருக்கிறது. எந்தத் திட்டத்தையும் நாங்கள் மேம்போக்காகச் செய்வதில்லை. தேவை என்னவோ அதை முறைப்படி ஆய்வுசெய்துதான் செய்கிறோம். தேவையில்லாமல் சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பிக்கொண்டிருக் கிறார்கள்.’’
மத்திய அரசு வெளியிட்டுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை குறித்து ஆகஸ்ட் 11ம் தேதி வரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
அறிவிக்கையின் ஆங்கில வடிவத்தை இணையத்தில் படிக்க: http://environmentclearance.nic.in/writereaddata/Draft_EIA_2020.pdf
உங்கள் கருத்தை eia2020-moefcc@gov.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம்.