அரசியல்
Published:Updated:

வங்கியா... உயிர் வாங்கியா?

ஆனந்த்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆனந்த்

அவமானத்தில் கருகிய ஆனந்த்!

‘‘சொந்த வீடு கட்டி வாழுறதுதான் என் வீட்டுக்காரரோட கனவு. ஆனா, அதுக்காக வாங்கின கடனே அவரோட உயிருக்கு உலைவெச்சுடுச்சு. அவரு இல்லாத வீட்டுல நாங்க எப்படித் தனியா உயிர் வாழப்போறோம்னு தெரியலை...’’ பெருங்குரலெடுத்து அழுகிறார் ஹேமா.

‘கொரோனா ஊரடங்குக் காலகட்டத்தில் வங்கிகள் கடனை வசூலிக்கக் கூடாது’ என மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் அறிவித்திருந்தாலும், வங்கிகள் அவற்றை மதிப்பதே இல்லை. கடன் தவணையைக் கேட்டு தனியார் வங்கி கொடுத்த நெருக்கடியில், மனமுடைந்த தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் வங்கி வாசலிலேயே தீக்குளித்து உயிரிழந்திருக்கிறார்.

ஆனந்த் வீட்டுக்குச் சென்றபோது, தன் இரு குழந்தைகளோடு திக்பிரமை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தார் அவரின் மனைவி ஹேமா. நம்மைப் பார்த்ததும் கதறியழ ஆரம்பித்தார். அவரைத் தேற்றி, பேசவைத்தோம்...

குழந்தைகளுடன் ஹேமா
குழந்தைகளுடன் ஹேமா

``சொந்த வீடுதான் என் வீட்டுக்காரரோட கனவு. அதுக்காகவே வெளிநாட்டு வேலைக்குப் போனார். 2015-ம் வருஷம் சிட்டி யூனியன் பேங்க்கோட வல்லம் கிளையில ஒன்பது லட்ச ரூபா கடன் வாங்கி, புது வீட்டைக் கட்டினோம். பல கனவுகளோட அதுல குடியேறினோம். ஒவ்வொரு மாசமும் கடன் தவணையைச் சரியா கட்டிடுவாரு. ஒன்பது லட்ச ரூபா கடனுக்கு, வட்டியோட சேர்த்து பதிமூன்றரை லட்ச ரூபா கட்டியிருந்தோம். இந்த நிலைமையில வெளிநாட்டு வேலையை விட்டுட்டு வந்துட்டாரு. இங்கே வெல்டரா தினக்கூலி வேலைக்குப் போனாரு. போதுமான வருமானம் இல்லை. 2019 செப்டம்பர் மாசத்துக்கு மேல கடனைச் சரியா கட்டமுடியலை. கொரோனா ஊரடங்குக்குப் பிறகு, வெல்டிங் வேலையும் கிடைக்காததால நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு.

`மூன்றரை லட்ச ரூபா பாக்கியிருக்கு. உடனே கட்டலைன்னா வீட்டை ஜப்தி செஞ்சு ஏலம் விட்டுடுவோம்’னு பேங்க்காரங்க மிரட்டினாங்க. ‘லாக்டெளன் நேரத்துல பணம் வசூலிக்கக் கூடாதுனு அரசு உத்தரவு போட்டிருக்குதே... அதுவரைக்கும் எனக்கு அவகாசம் கொடுங்க’னு கால்ல விழாத குறையா கெஞ்சினோம். ஆனா, அவங்க கேட்கலை. அடிக்கடி புரோக்கரையும் அடியாட்களையும் அழைச்சுக்கிட்டு வந்து, ‘இந்த வீட்டைத்தான் ஏலம் விடப்போறோம்’னு காட்டினாங்க.

`வீடு கையைவிட்டுப் போயிடுமோ’னு பயந்துபோய், பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் என் வீட்டுக்காரர் கடிதம் அனுப்பிட்டு, நம்பிக்கையோட காத்திருந்தாரு. ஆனா, எதுவும் நடக்கலை.

ஆகஸ்ட் 26-ம் தேதி, பேங்க் அதிகாரிங்க திரும்பவும் வீட்டுக்கு வந்தாங்க. அப்போ என் வீட்டுக்காரரு வெளியே போயிருந்தாரு. ‘நீங்கல்லாம் எதுக்கு சொந்த வீட்டுல இருக்க ஆசைப்படுறீங்க... ரெண்டு நாள்ல லோனைக் கட்டச் சொல்லு. இல்லைன்னா, 28-ம் தேதி வீட்டை ஏலம் விட்டுடுவோம்’னு சொல்லி, வீட்டை அளக்க ஆரம்பிச்சாங்க. அழுதுக்கிட்டே என் வீட்டுக்காரருக்கு போன் போட்டேன். பதறியடிச்சுக்கிட்டு ஓடி வந்தாரு. அவருகிட்ட, ‘நீ என்ன ஆம்பளையா... உனக்கு எதுக்குய்யா பொண்டாட்டி புள்ளை’னு பேங்க்காரங்க கேவலமா பேசினாங்க.

மறுநாள் பலபேருகிட்ட கடன் வாங்கி, மூணு லட்ச ரூபாயை எடுத்துக்கிட்டு பேங்குக்குக் கிளம்பினாரு. `பிள்ளைகளை பத்திரமா பார்த்துக்க’னு ரெண்டு பசங்களுக்கும் முத்தம் கொடுத்தாரு. கையில பெட்ரோல் கேன் இருக்குறதைப் பார்த்துட்டு, `எதுக்கு?’னு கேட்டேன். பிரெண்டோட வண்டி பெட்ரோல் இல்லாம நிக்குது’னு சொன்னார். கொளுத்திக்கத்தான் வாங்கிட்டுப் போறாருன்னு இந்தப் பாவிக்குத் தெரியாமப் போச்சே...’’ என்று விம்மத் தொடங்கினார்.

நிதானத்துக்கு வரட்டும் என்று காத்திருந்தோம்... ‘‘பேங்குக்குப் போனவர், மேனேஜர் சிலம்பரசன்கிட்ட பணத்தைக் கொடுத்திருக்காரு. ‘ஒரே செட்டில்மென்ட்டா முழுப்பணத்தையும் கட்டு. இல்லைன்னா வீடு உனக்கு இல்லை’னு சொல்லியிருக்காரு. நான் கட்ட வேண்டியது மூன்றரை லட்சம். இப்போ நீங்க ஆறு லட்சத்துக்கும் மேல சொல்றீங்களே’னு கேட்டவரு, ‘கொஞ்சநாள் அவகாசம் கொடுங்க... மீதிப் பணத்தைக் கட்டிடறேன்’னு சொல்லியிருக்காரு. அதுக்கு, ‘பொண்டாட்டி பிள்ளைகளை அடமானம் வெச்சாவது மொத்தப் பணத்தையும் உடனே கட்டு’னு தகாத வார்த்தைகளால அவரு திட்டியிருக்காரு. `அப்படின்னா, என் பொணத்து மேலதான் நீங்க வீட்டை ஏலம் விடுவீங்க’னு சொல்லிட்டு வாசலுக்கு வந்தவர், உடம்புல பெட்ரோலை ஊத்தி தீ வெச்சுக்கிட்டாரு’’ என்று நிலைகுத்தியப் பார்வையோடு மௌனமானார் ஹேமா.

ஆனந்த்
ஆனந்த்
வங்கியா... உயிர் வாங்கியா?

ஹேமாவின் சகோதரர் தயாநிதி, ‘‘பேங்க் வாசல்ல தீ வெச்சுக்கிட்டு எரியும்போது ‘காப்பாத்துங்க’னு பெரும் குரலெடுத்து கத்தியிருக்கார். பேங்க்லருந்து ஒருத்தர்கூட வெளியே வரவே இல்லையாம். தீ பத்தினா அணைக்கிறதுக்கு பேங்க்ல தீயணைப்பான் வெச்சிருப்பாங்க. அதைவெச்சு அணைக்கணும்கிற குறைந்தபட்ச மனிதாபிமானம்கூட அவங்களுக்கு இல்ல. பக்கத்துல இருந்தவங்கதான் அவரை மீட்டு ரோட்டோரமா படுக்கவெச்சிருக்காங்க. நாப்பது நிமிஷமா வாசல்லயே உயிருக்குப் போராடியிருக்கார். ‘பேங்க்கால என் வாழ்க்கையே போச்சு’னு ஆஸ்பத்திரியில இருந்த ரெண்டு நாளும் புலம்பிக்கிட்டே இருந்தார். அப்போகூட பேங்க் தரப்புலருந்து யாரும் வரலை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்களும் பல்வேறு அமைப்புகளும் எங்களுக்காகப் போராட்டம் நடத்தினாங்க. அதுக்குப் பிறகுதான் பேங்க் நிர்வாகத்தைச் சேர்ந்தவங்க மீதி லோன் பணத்தைக் கட்ட வேணாம்னு சொன்னாங்க. அவங்க மேல இதுவரைக்கும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படலை. 35 வயசுல என் அக்கா வாழ்க்கையைத் தொலைச்சுட்டு நிக்குறாங்க. ஒருத்தரோட சாவுக்குக் காரணமா இருந்துட்டு, `அவரோட கடனைத் தள்ளுபடி செய்யுறோம்’னு சொல்றது எந்த வகையில நியாயம்?’’ என்று ஆதங்கம் பொங்கப் பேசினார்.

`கந்துவட்டிக்காரர்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்களில்லை நாங்கள்’ என நிரூபித்திருக்கிறது ஒரு தனியார் வங்கி. வங்கியா... இல்லை உயிர்வாங்கியா? தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?