
25 ஆண்டுகளில் இந்த வீடுகளில் பல சிதைவடைந்தன. 2008-ல் இந்த வீடுகளை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்பணியைத் தொடங்கியது குடிசைமாற்று வாரியம்
“இன்னும் ஒரே வருஷத்துல உங்களுக்கு வீடு தருவோம்னு சொல்லித்தான், குடிசை மாற்று வாரிய அதிகாரிங்க, இந்த 150 அடி தகரக் கொட்டகையில தங்கவச்சாங்க. அஞ்சு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் வீடு கொடுத்தபாடில்லை. எலிக்கடியிலயும் கொசுக்கடியிலயும் அல்லாடி அல்லாடி எங்க வாழ்க்கையே முடிஞ்சுபோயிரும்போல இருக்கு. பக்கத்துல 9 மாடியில வீடு கட்டிமுடிச்சிட்டாங்க. ஆனா ஒன்னரை லட்சம் கொடுத்தாதான் குடிபோக முடியும்னு சொல்றாங்க. எங்க நிலைமைக்கு ஒன்றரை லட்சமெல்லாம் பெரிய காசு... நாலைஞ்சு தலைமுறையா இப்படி தெருவுலயே கெடந்து பழகிட்டோம்... இப்பவாவது வாழ்க்கை மாறும்னு பார்த்தா, மாறாதுபோல இருக்கு...”
சென்னை புளிய ந்தோப்பிலிருந்து விமல் ராஜிடமிருந்து வந்தது இப்படியொரு ஆதங்கக்குரல். ‘குடிசைகள் இல்லாத் தமிழகத்தை உருவாக்குவோம்’ என்கிற முழக்கத்துடன் 1970-களில் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டதுதான் குடிசை மாற்று வாரியம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி மக்களுக்கு வழங்கியுள்ள குடிசை மாற்று வாரியம், இப்போது வீடுகள் ஒதுக்கப் பணம் கேட்பது ஏன்?
களத்திலிறங்கியது ஆனந்த விகடன்.

வடசென்னையின் பூர்வநிலப்பகுதிகளில் ஒன்றான புளியந்தோப்பின் மையத்தில் இருக்கிறது கேசவப்பிள்ளை பூங்கா. நதிக்கரைகளிலும் சாலையோரங்களிலும் வாழ்ந்த 1,536 குடும்பங்களுக்காக இந்தப் பூங்காவில் 35 பிளாக்குகள் கொண்ட பிரமாண்ட குடியிருப்பு ஒன்றை 1980களில் உருவாக்கியது குடிசை மாற்றுவாரியம். தரைத்தளம் மற்றும் மூன்று அடுக்குகள் கொண்ட அந்தக் குடியிருப்பில் 280 சதுர அடி பரப்பில் வீடுகள் கட்டப்பட்டன.
25 ஆண்டுகளில் இந்த வீடுகளில் பல சிதைவடைந்தன. 2008-ல் இந்த வீடுகளை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டும்பணியைத் தொடங்கியது குடிசைமாற்று வாரியம். 14 குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அவற்றில் வசித்த 672 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி வழங்கப்பட்டன. மீதமிருந்த 864 வீடுகள் 2016-ல் இடிக்கப்பட்டன. வீடுகட்டும் பணி முடியும்வரை தற்காலிகமாக மக்கள் தங்குவதற்கு, அருகிலேயே 150 சதுர அடியில் தகரக் கொட்டகைகள் அமைத்துத் தந்துள்ளது குடிசைமாற்று வாரியம். ஆனால் அடிப்படை வசதிகள் எதையும் உருவாக்கித் தரவில்லை.

பலநூறு மக்கள் வசிக்கும் இடத்தில் வெறும் இரண்டு கழிவறைகளும் மூன்று குளியலறைகளும் மட்டுமே அமைக்கப்பட்டன. மேலும் எலிகள் கடித்துக் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் பெரும்பாலான குடும்பங்கள் சாலையோரங்களில் வசிக்கத் தொடங்கின. சிலர் வாடகைக்கு வீடுகள் பிடித்துக் குடியேறினார்கள். 110 குடும்பங்கள் மட்டும் வேறு வழியில்லாததால் அதே இடத்தில் வசிக்கின்றன.
2015-ல் மத்திய அரசு, ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ எனப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின்படி மத்திய அரசு, மாநில அரசின் பங்களிப்புடன் பயனாளிகளின் பங்களிப்பையும் பெற்று வீடுகள் கட்டப்படும். இத்திட்டத்துக்கான தமிழக அரசின் முகமை நிறுவனமாக குடிசை மாற்று வாரியம் நியமிக்கப்பட்டது.

தகரக் கொட்டகையில் வசிக்கும் 864 குடும்பங்களுக்கான வீடுகள் கட்டும் பணியை, 2018 ஜனவரியில் தொடங்கியது குடிசைமாற்று வாரியம். ஆனால், இந்தக் குடியிருப்புத் திட்டம் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வழக்கமாகக் கட்டப்படும் 200 சதுர அடி வீடுகளுக்குப் பதிலாக சுமார் 400 சதுர அடியில் வீடுகள் கட்டப்பட்டன. லிப்ட், பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டன. இத்திட்டப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் மத்திய அரசு 1.5 லட்சமும் மாநில அரசு 7 லட்சமும் வழங்கும். பயனாளர் பங்களிப்பாக 1.5 லட்சம் வழங்கவேண்டும். ஆனால், இதுபற்றி வீட்டுக்காகக் காத்திருந்த மக்களுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை.
இச்சூழலில் மே, 2019-ல், வாகன நிறுத்துமிடத்துடன்கூடிய 9 அடுக்குகளாக 864 வீடுகளும் கட்டிமுடிக்கப்பட்டன. மக்கள் வீடுகளுக்குக் குடியேறும் ஆவலில் இருந்த சூழலில், தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது. அதில், ‘பயனாளிகள் 1.5 லட்சம் செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.


மீன்பாடி வண்டி ஓட்டுபவர்கள், சாலையோரங்களில் பழக்கடை, உணவகங்கள் வைத்திருப்பவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்பவர்கள், பூக் கட்டுபவர்கள் என அன்றாட வருமானத்தைக்கொண்டே பசியாறும் எளிய மக்களால் ஒன்றரை லட்ச ரூபாயைக் கற்பனைகூட செய்யமுடியாது என்பதுதான் எதார்த்தம். இந்தச் சூழலில் களத்துக்குச் சென்றது ஆனந்த விகடன்.
கட்டப்பட்ட புதிய குடியிருப்பு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. மதுப்பாட்டில்களும் குப்பைக்குவியல்களுமாக, பொலிவிழந்து கிடக்கிறது வளாகம்.
அந்த மக்களின் நிலையையும் கட்டி முடிக்கப்பட்டுப் பாழடைந்துவரும் புதிய குடியிருப்பின் நிலையையும் தமிழக ஊரக தொழில்துறை மற்றும் குடிசைப் பகுதி மாற்று வாரிய அமைச்சர் தா.மோ.அன்பரசனின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். இதுகுறித்த தகவல்களைச் சேகரித்துக்கொண்டு கூப்பிடுவதாகத் தெரிவித்த அமைச்சர், சிறிது நேரத்தில் அழைத்தார். “புளியந்தோப்பு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு பற்றி முழுத் தகவல்களையும் எடுத்துவிட்டேன். அதிகாரி களிடமும் பேசிவிட்டேன். அந்த மக்களை நேரில் சந்திக்க வருகிறேன்” என்றார்.


கூறியபடியே, கடந்த சனிக்கிழமை காலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புளியந்தோப்பு கேசவப்பிள்ளை பூங்காவுக்கு வந்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பரந்தாமன், குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநர் இளம்பகவத், முதன்மைப் பொறியாளர்சேதுபதி உள்ளிட்டோர் உடன் வந்தார்கள். புதிய குடியிருப்பைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கேயே அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
பிறகு ஆனந்த விகடனிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், “பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு பயனாளர் பங்களிப்பு இருக்கவேண்டும் என்பதுதான் அடிப்படைவிதி. பயனாளர் பங்களிப்புத் தொகையைப் பெறாவிட்டால் மத்திய அரசு தன் பங்களிப்பை நிறுத்திவிடும். அதனால் பிற குடியிருப்புத் திட்டங்களும் பாதிக்கப்படும். அதேநேரம், இந்த மக்கள் எல்லோராலும் 1.5 லட்சம் ரூபாயை உடனடியாகச் செலுத்தமுடியாது. அதனால் இலகுவான தவணை முறையில் வங்கிக்கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும். இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். இந்தத் தீர்வை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆடி மாதத்துக்குள் மக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள்...” என்று உறுதியளித்தார்.



கைக்கெட்டும் தூரத்தில் வீடிருந்தும் குடியேற முடியாமல் தகரக்கொட்டகையில் தவித்த இந்தக் குரலற்ற மனிதர்களின் பிரச்னையை ஆனந்த விகடன் கவனப்படுத்தியதும், உடனடியாகக் களத்துக்கு வந்து நம்பிக்கையளித்த அமைச்சருக்கு ஆனந்த விகடனின் நன்றிகள்!