Published:Updated:

ஆந்திரா: 28.30 லட்சம் இலவச வீடுகள் - பிரமாண்ட திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன்!

ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி
ஒய்.எஸ் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் 56,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28,30,000 வீடுகளைக் கட்டுவதற்கான  'ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா காலனி' திட்டத்தின் கட்டுமான பணிகளை நேற்று காணொளி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார்.

ஆந்திராவில் 2019-ல் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 151 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெருமான்மையுடன் ஆட்சி அமைத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராக 3-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து அனைவரது மனதிலும் இடம் பிடித்து வரும் ஜெகன்மோகன் தேர்தலின் போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டி வருகிறார்.

ஆட்சிக்கு வந்த 2 வருடத்தில் தேர்தல் வாக்குறுதிகளில் 94.5 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். வெறும் வாய்ப் பேச்சோடு மட்டும் நிறுத்தி விடாமல் அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் என அனைத்தையும் பட்டியலிட்டு மக்கள் கையில் ஆவணமாக வழங்கியிருக்கிறார்.

நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியல்
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் பட்டியல்

முதல்வராக 2 ஆண்டுகள் நிறைவுசெய்திருக்கும் அவர், ஒய்.எஸ்.ஆர் ரைத்து பரோசா (YSR Rythu Bharosa), ஆரோக்யஸ்ரி (Aarogyasri), ஜலாயக்னம் (Jalayagnam), அம்மா வோடி (Amma Vodi), ஒய்.எஸ்.ஆர் ஆசாரா (YSR Aasara), சேயுதா திட்டம் (Cheyutha Scheme) எனத் தேர்தல் அறிக்கையின் முக்கிய திட்டங்களை ஒவ்வொன்றாகச் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமான அம்சமாகக் கருதப்படும் 'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தினையும் ஜெகன்மோகன் நேற்று தொடக்கி வைத்திருக்கிறார்.

`ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா காலனி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த வீட்டுவசதி திட்டம் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதற்கட்டமாக, 28,084 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15,60,227 வீடுகளும், இரண்டாம் கட்டமாக 22,860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12,70,000 வீடுகளும் கட்டி முடிக்கப்பட இருக்கின்றன. முதலில், மாநிலம் முழுதும் சொந்த வீடில்லாமல் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருக்கும் ஏழை எளிய குடும்பங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச நில பட்டா வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பிரதமரின் 'ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் அனைவருக்கும் மாநில அரசின் சார்பிலேயே மானியம் பெறப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

நேற்றைய தினம் காணொளி காட்சி மூலமாக முதற்கட்ட கட்டுமான பணிகளைத் தொடக்கி வைத்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, 2023-ம் ஆண்டுக்குள் கட்டிமுடிக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டிருக்கும் 13 மாவட்டங்களில் பணிகளை துரிதமாக நடைபெற 13 சிறப்பு ஆட்சியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் இந்த திட்டம் குறித்துக் கூறுகையில், ``ஏழை எளிய மக்களின் மிக நீண்ட நாள் கனவான இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. சொந்தமாக வீடு என்பது இன்றளவும் பல லட்சம் மக்களுக்கு கனவாகவும், எட்டாக்கனியாகவுமே இருக்கிறது. அதைச் சாத்தியப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி எங்களுக்கு. கொரோனா பரவல் காரணமாக அடிக்கல் நாட்டு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. இந்த வீடுகளைப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்குக் கட்டித்தருவதன் மூலமாக அவர்களுக்கென்று ஒரு சொத்தை, அந்தஸ்தை மாநில அரசு உருவாக்கவிருக்கிறது.

காணொளி காட்சி மூலம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்த முதல்வர்
காணொளி காட்சி மூலம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்த முதல்வர்

இரண்டு கட்டமாக நடைபெறும் இந்த கட்டுமான பணிகள் முழுமையாக இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்யப்படும். தற்போது தொடங்கியுள்ள முதற்கட்ட கட்டுமான பணிகளில் 15.60 லட்சம் வீடுகள் வரும் 2022-ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும். மொத்தம் 50,944 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28.30 லட்சம் வீடுகள் கட்டப்பட இருக்கின்றன. இதை வீடுகள் என்று சொல்வதைக் காட்டிலும், 17,000 காலனிகள் அல்லது 17,000 நகரங்கள் என்று குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். வீடு என்றால் வெறும் கட்டுமானத்தை மட்டும் முடித்து நாங்கள் கொடுத்து விடப்போவதில்லை. குடிநீர், மின்சாரம், சாலை வசதி எனச் சகல வசதிகளும் அரசாங்கமே அமைத்து மக்கள் குடியேற ஏதுவாக ஒப்படைக்கும் என்பதனை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாங்கள், மக்களிடம் விருப்பத் தேர்வுகளை முன்வைக்கிறோம். ஒன்று நாங்களே அவர்களுக்குக் கட்டித் தரத் தயாராக இருக்கிறோம். இல்லையென்றால் மக்கள் அவர்களாகவே கூட கட்டிக்கொள்ளலாம், அதற்கான ஆள் கூலி மற்றும் பொருட் செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ளும். மக்கள் அவர்களின் விருப்பம் போல், தேர்வு செய்து கொள்ளலாம். ஏனென்றால் அது அவர்களின் வீடு.

அதே போல், கொரோனா நோய்த்தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டே மாநிலத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஏராளமான கூலித் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் இந்த கட்டுமான பணிகளில் கார்பெண்டர், பெயிண்டர், என அனைத்து விதமான வேலைகளுக்கும் நம் மக்களையே பயன்படுத்தவிருக்கிறோம். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரமும் உயரும் என்று நம்புகிறோம். கட்டுமான பொருள்களின் விலை உச்சம் தொட்டிருக்கும் போதிலும், அரசாங்கம் மானிய விலையில் மக்களுக்குக் கட்டுமான பொருள்களை வழங்கவிருக்கிறது. தகுதி உள்ள அனைவரும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் விண்ணப்பம் 90 நாள்களுக்குள் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்" என்றார்.

ஆந்திரா: `2 வருடத்தில் 94.5% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்!' - ஜெகன்மோகன் ரெட்டி

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் 'ஒய்.எஸ்.ஆர் ஜெகன் அண்ணா காலனி' திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் குறித்துப் பார்க்கலாம்:

  • திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளும் ஒரே மாதிரியான வடிவில் (யூனிஃபார்மாக) கட்டப்படும்.

  • வீட்டின் மொத்த அளவு 340 சதுர அடி. அதில், ஒரு பெட்ரூம், ஹால், கிச்சன், பாத்ரூம் - டாய்லெட் மற்றும் வராண்டா உள்ளிட்டவை அடங்கும்.

  • குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, மின் இணைப்பு மற்றும் சாலைவசதிகள் என அனைத்து வசதிகளும் அரசாங்கத்தின் சார்பில் இலவசமாக அமைத்துத் தரப்படும்.

  • ஒவ்வொரு வீட்டிற்கும் 2 சீலிங் பேன், 2 டியூப் லைட், 4 பல்புகள் மற்றும் சின்டெக்ஸ் வாட்டர் டேங்க் வழங்கப்படும்.

  • ஒவ்வொரு காலனியிலும், ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி நிலையம், பூங்கா, டிஜிட்டல் லைப்ரரி மற்றும் திறந்தவெளி அரங்கம் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் 'ஜெகன் அண்ணா காலனி' திட்டத்திற்கு மாநில மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு