காதலர் தினத்தை `Cow Hug Day-வாக கொண்டாடலாம் என இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டிருக்கும் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகிவருகிறது.

அந்தக் கடிதத்தில், ``பசு நம் இந்திய கலாசாரம். கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். பசு நம் வாழ்வாதாரம். அதோடு, மனிதகுலத்துக்கு அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் தாய்மையால், `காமதேனு' என்றும் `கோமாதா' என்றும் பசு அழைக்கப்படுகிறது.
காலப்போக்கில் மேற்கத்திய கலாசாரத்தின் வளர்ச்சி காரணமாக, நம் வேத மரபுகள் கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மேலும், மேற்கத்திய கலாசாரத்தால், நம் கலாசாரம், பாரம்பர்யம் கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

பசுவின் நன்மைக்காக அதைக் கட்டிப்பிடிப்பது அதற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். எனவே பசு பிரியர்கள் அனைவரும், பசுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றலுடனும் வாழ பிப்ரவரி 14-ம் தேதியை, `Cow Hug Day'-வாக கொண்டாடலாம்.

இது தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடனும், மீன்பிடி, கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரிலும் வெளியிடப்படுகிறது" என்று இந்திய விலங்குகள் நல வாரியம் கூறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் இந்தக் கடிதத்தை, இணையவாசிகள் பலரும் பகிர்ந்து, பல்வேறு கமென்ட்டுகளை பதிவுசெய்துவருகின்றனர்.