சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

பசி நோய் தீர்க்கும் மருந்து!

பசி நோய் தீர்க்கும் மருந்து!
பிரீமியம் ஸ்டோரி
News
பசி நோய் தீர்க்கும் மருந்து!

என் தங்கச்சி ஆதரவுலதான் வாழ்ந்துட்டு வர்றேன். ஆயாம்மா வேலையெல்லாம் பார்த்தேன். இப்போ, வேலை செய்ய உடம்புல தெம்பில்ல.

``ஏண்ணே இவ்ளோ கம்மியா சாப்பிடுறீங்க? சாப்பாடு போட்டுக்கோங்க... ஏங்க்கா இன்னும் கொஞ்சம் கொழம்பு ஊத்திக்கோங்க, நல்லா வயிறார சாப்பிடுங்க.’’ இப்படி பசியோடு வருகிறவர்களுக்கு தரமான உணவை மட்டுமல்ல, அன்லிமிட்டெட் அன்பையும் இலவசமாகப் பொழிந்து இதயங்களைக் கொள்ளைகொள்கிறார்கள் டேப்லெட்ஸ் இந்தியா ஃபவுண்டேஷனின் அன்னதான மையத்தினர். பணம் கொடுத்து ஓட்டல்களில் சாப்பிடச் சென்றாலே அளவு சாப்பாடுதான் தருகிறார்கள். ஆனால், பசித்தவர்களுக்காக அன்னதான மையங்களை ஏற்படுத்தி ‘அன்லிமிட்டெட்’ உணவை இலவசமாக வழங்கிவருகிறார் டேப்லெட்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன் தலைவர் ஆர்.கே.ஜாவர்.

பசி நோய் தீர்க்கும் மருந்து!
பசி நோய் தீர்க்கும் மருந்து!

சென்னை, கோடம்பாக்கம், சாமியார் மடம் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள அன்னதான மையத்தில் கண்ட காட்சி இது. விசேஷங்களுக்குப் பந்தி பரிமாறுவதுபோல் மினரல் வாட்டர், கூட்டு, பொரியல், ஊறுகாய், இனிப்புடன் சுடச்சுட சாப்பாடு பரிமாறப்படுகிறது. ஊழியர்கள் சுகாதாரமாகப் பரிமாறி, இன்முகத்தோடு உபசரிக்கிறார்கள். அன்னதானத் திட்டத்தின் பொறுப்பாளர் சீனிவாசன், இத்திட்டம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என விவரித்தார்.

‘‘சென்னை, சிந்தாதரிப்பேட்டையில் சுப்பிரமணியன்ங்கிறவர், தன் சொந்தச் செலவுலயே தினமும் சமைத்து 40 பேருக்கு உணவளித்து வந்தார். ஒருகட்டத்தில் அவரால் செலவு செய்ய முடியாததால எங்களிடம் உதவி கேட்டார். நாங்களும் மாதந்தோறும் அவருக்கு மளிகைப்பொருள்கள் வாங்க உதவி செய்தோம். அதனால், முன்பைவிட உற்சாகமாக ஏழைகளின் பசியாற்றி வந்தார். பசியுடன் வரும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதைவிட வேறு எதில் மகிழ்ச்சி கிடைத்துவிடப்போகிறது? பசித்த வயிறு, பட்டினிக் கண்களுடன் வந்து வயிறார சாப்பிட்டு மனதாரப் பாராட்டிவிட்டுச் செல்வதைப் பார்த்தபோது, இதை நம் நிறுவனத்தின் மூலமே செய்யலாமே என்ற யோசனை வந்தது.

பசி நோய் தீர்க்கும் மருந்து!
பசி நோய் தீர்க்கும் மருந்து!
பசி நோய் தீர்க்கும் மருந்து!

இதனை எங்கள் நிறுவனத்தின் தலைவர்கள் ஆர்.கே. ஜாவர் மற்றும் அவர் மகன் பரத் ஜாவரிடம் தெரிவித்தோம். உடனே, செயல்படுத்திவிட்டார்கள். 2017-ம் ஆண்டு சென்னை, தண்டையார்பேட்டையில் 350 பேர் சாப்பிடும் அளவுக்கு அன்னதானத் திட்டத்தைத் தொடங்கினோம். இடையில், சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவர் செய்த பணியை இன்னும் பல இடங்களில் விரிவுபடுத்த முடிவெடுத்தோம். இப்போ, சென்னை, வியாசர்பாடி எம்.கே.பி நகர், கோடம்பாக்கம் சாமியார் மடம், மகாபலிபுரம் எனத் தமிழகத்தில் நான்கு இடங்களில், கடந்த ஐந்து வருடங்களாக அன்னதானத் திட்டத்தைச் செயல்படுத்திவருகிறோம்.

பரத் ஜாவர்
பரத் ஜாவர்

எங்கள் டேப்லெட்ஸ் இந்தியா மருந்து நிறுவனம் புதுச்சேரி திருவாண்டார் கோயிலில் செயல்படுகிறது. அப்பகுதி மக்களுக்காக வில்லியனூர் கோயிலில் அனுமதி வாங்கி அன்னதான மையம் அமைத்துள்ளோம். மொத்தமாக ஒரு நாளைக்கு 1,500 பேருக்குமேல் சாப்பிடுகிறார்கள். இலவசமாகக் கொடுத்தாலும் தரமாகக் கொடுத்தால்தான் சாப்பிடுகிறவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்று சொல்லி, அதற்கான நிதியையும் அளிக்கிறார் எங்கள் தலைவர் ஆர்.கே.ஜாவர்” என்கிறார் சீனிவாசன்.

கோடம்பாக்கம் அன்னதான மையத்தில் சாப்பிட்ட விஜயலட்சுமி, ‘‘என் தங்கச்சி ஆதரவுலதான் வாழ்ந்துட்டு வர்றேன். ஆயாம்மா வேலையெல்லாம் பார்த்தேன். இப்போ, வேலை செய்ய உடம்புல தெம்பில்ல. தினம் இங்க மதியம் வந்து சாப்ட்டுப் போய்டுவேன். பல மாசமா இங்க வர்றேன். எதுக்குமே முகம் சுளிச்சதே கிடையாது. இவங்க நல்லாருக்கணும்’’ என்று மனசார வாழ்த்துகிறார். ‘‘வீட்டுல சாப்பிடுற உணர்வுதான். யாராவது குடிச்சிட்டு வந்தா இங்க சாப்பாடு கொடுக்கிறது இல்லை. சாப்பாடு கிடைக்காதுங்கிற பயத்துலயே குடிக்காம வந்து சாப்ட்டுப் போறாங்க’’ என்கிறார் கருப்பையா.

பசியோடு வருகிறவர்களுக்கு இலவசமாக உணவளிப்பது மட்டுமல்லாமல் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பையும் தந்திருக்கிறது டேப்லெட்ஸ் இந்தியா ஃபவுண்டேஷன். இந்த சேவைக்காகவே ஆண்டுக்கு சுமார் 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகக் கூறுகிறார்கள். இது பசி நோய் தீர்க்கும் மருந்து.