தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், ஆளும் தி.மு.க அரசுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நீடித்துவருகிறது. ஆளுநரின் கருத்துகளை ஆளும் திமுக தரப்பு கடுமையாக விமர்சித்துவருகிறது. இந்த நிலையில் ஆளுநர் ரவியைத் திரும்ப பெற வேண்டும் என்றும், அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் தி.மு.க சார்பில் குடியரசுத் தலைவருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச் சந்தித்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகப் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடக்கவிழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தார். அப்போது உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தார்கள். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்பது பல ஆதாரங்களின் அடிப்படையில் எங்களுக்குத் தெரியவந்தது. பிரதமருக்கே போதுமான பாதுகாப்பு வழங்க முடியவில்லையென்றால், சாமானிய மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிப்பார்கள். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம்.
பிரதமரின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் திட்டம்... இதற்காக தமிழகத்தில் 69 லட்சம் குடிநீர் கனெக்ஷன்களுக்கு மாநில அரசின் மூலமாக மத்திய அரசு நிதி அளித்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களிடம், தண்ணீர் குழாய் பொய்யாகப் போட்டு அதன் மூலம் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்திருக்கிறார்கள். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதல் அளித்தும், இதுவரை திமுக அதை அமல்படுத்தவில்லை.

எல்லா தவறுகளையும் ஆளுநரின் மீது போட்டுவிட்டு மாநில அரசு தப்பிக்க முயல்கிறது. பா.ஜ.க-வைப் பொறுத்தவரை ஆன்லைன் ரம்மி மூலமாக இன்னோர் உயிர் போகக் கூடாது. காவல்துறை முதல்வரின் இமேஜ் விஷயத்தில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர சாதாரண மக்களைப் பாதுகாப்பதற்கு நேரமில்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.