
- அன்னபூரணி அம்மாவின் ‘அடேங்கப்பா’ ஆன்மிகம்
எட்டு மாதங்களுக்கு முன்பு சாமியார் கெட்டப்பில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வைரலானவர் அன்னபூரணி அம்மாள். இடைப்பட்ட மாதங்களில் திடீரென காணாமல்போனவர், இப்போது நித்தியானந்தா பாணியில் திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து மீண்டும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார்!
ஆசிரமத்துக்குள்ளேயே ஆன்மிகம் வளர்க்கும் அன்னபூரணியிடம் போனில் பேசினாலே போதுமாம். அவரை உணரச் செய்துவிடுவாராம். அதற்கு அவர் வைத்திருக்கும் பெயர் `டிஜிட்டல் ஆன்மிக தீட்சை.’ ஒரு போன் காலுக்கு 20,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். டிஜிட்டல் பேமென்ட் முறையில் அவரின் அக்கவுன்ட்டுக்கு முன்கூட்டியே கட்டணத்தை அனுப்பிவிட்டால், அவருடன் மனம்விட்டு ஆன்மிகம் பேசிக்கொள்ளலாம். அன்னபூரணியின் ஆன்மிகத்தை உணர்வதற்காக நாமும் அவரைத் தேடி ஆசிரமத்துக்குச் சென்றோம்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜாதோப்பு நெடுஞ்சாலையை ஒட்டி வைக்கப்பட்டிருக்கும் ‘அன்னபூரணி அரசு டெம்பிள்’ என்ற பேனர் பலகைதான் வழிகாட்டுகிறது. ஊரைக் கடந்து சென்றால், ஆள் நடமாட்டமில்லாத தரிசு பூமியில் அமைந்திருக்கும் தாமரைக்குளத்தின் எதிரே, தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடிலில் தனது ஆஸ்தான இருக்கையில் அமர்ந்திருந்தார் அன்னபூரணி. அவருக்குப் பணிவிடை செய்ய அவர் மகளும், இளைஞர் ஒருவரும் இருக்கிறார்கள்.
அன்னபூரணி அம்மாளுக்கு ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு, நமது சந்தேகங்களைக் கேள்விகளாக முன்வைத்தோம்...
‘‘ஆன்மிகம் என்றாலே எளிமை. ஆனால், தலையில் கிரீடம்; கையில் சூலாயுதம் என இதென்ன அலங்கார வேஷம்?’’
‘‘என்னுடைய அலங்காரங்களைக் குறை சொல்வது ஏன்... காவி உடை கட்டிக்கொண்டால் அனைத்தையும் மாற்றிவிட முடியுமா... முன்பிருந்தவர்கள் கற்றுக்கொண்ட வழி அது. அதையெல்லாம் முறியடிக்கத்தான் வந்திருக்கிறேன். என்னுடைய ஆன்மிகத்தில் உணவு, உடைக்குக் கட்டுப்பாடு கிடையாது.’’
‘‘திடீரென ஆசிரமம் அமைத்து பக்தர்களைச் சந்திப்பதன் நோக்கம் என்ன?’’
‘‘நான் சக்தியின் வெளிப்பாடு. இறைத்தன்மையை உணரவைப்பதற்காகவே இங்கே வந்திருக்கிறேன். நோய்களைச் சரிசெய்கிறேன். பிரச்னைகளைக் கையாளக்கூடிய தன்மையைக் கொடுக்கிறேன். மற்றபடி என்னுடைய பர்சனலைத் தெரிந்துகொள்வதால், உங்களுக்கு ஒரு பயனும் கிடையாது. அதைப் பற்றி நான் சொன்னாலும் தவறாகத்தான் சித்திரித்துப் போடுகிறார்கள்.’’
‘‘திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைக்க என்ன காரணம்?’’
‘‘ஆசிரமம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த இடமும்கூட எனக்கு உணர்த்தப்பட்டதுதான். யார் எங்கு இருக்க வேண்டும், என்னவாக இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.’’
‘‘ஆன்மிகம் என்ற பெயரில், நீங்கள் ஏமாற்று வேலை செய்வதாகச் சொல்கிறார்களே..?’’
‘‘நான் யாரையும் ஏமாற்றவில்லை. எந்த வேஷமும், ஒளிவு மறைவும் என்னிடம் கிடையாது. கண்ணாடியைப்போலப் பிரதிபலிக்கிறேன். ஆனாலும், என்னைப் பிடிக்காதவர்கள் இதுபோல் பரப்பிவரும் வதந்திகளையும், என்மீதான தவறான பார்வைகளையும் உடைத்தெறிவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.’’
‘‘செங்கல்பட்டு பகுதியில் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்குக் காவல்துறை தடைவிதித்தது. எனவே, திருவண்ணாமலைக்கு வந்து ஆசிரமம் அமைத்துவிட்டீர்கள் அப்படித்தானே?’’
‘‘அப்படியெல்லாம் எந்த பிளானும் என்னிடம் இல்லை. இது ஓர் ஆணாதிக்கச் சமூகம். ஆன்மிகத்தில் ஒரு பெண் வந்துவிடக் கூடாது என்று நினைக்கிறார்கள். இதுவரை நான் யாரையாவது ஏமாற்றிவிட்டேன் என்று என்மீது புகார் வந்திருக்கிறதா... என்னைப் பிடிக்காதவர்கள் ஒதுங்கிப்போய்விடுங்கள். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்’’ (என்றவாறே கண்களை உருட்டி பயமுறுத்துகிறார்).
‘‘அதுசரி... நீங்கள் யாரிடம் தீட்சை வாங்கினீர்கள்?’’
‘‘நான் யாரிடமும் தீட்சை வாங்கவில்லை. மதங்களுக்கு அப்பாற்பட்டவள் நான். அத்தனை பேருமே எனக்குக் குழந்தைகள்தான். என்னுள் இறைசக்தி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. என்னுடைய பிறவியே ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டுசெல்வதுதான்.’’
‘‘போன் மூலமே தீட்சை கொடுக்கிறீர்களாமே... நம்புகிற மாதிரி இல்லையே?’’
‘‘என்னுடைய தீட்சை முறையை நம்புகிறவர்களுக்கு போன் மூலம்தான் எல்லாம் பலிக்கின்றன. போன் மூலம் தீட்சை கொடுக்கும்போது, என்னிடமிருக்கும் எனர்ஜி பக்தர்களுக்கு ரிசீவ் ஆகிறது.’’
‘‘இதெல்லாம் மூடநம்பிக்கையாகத் தெரிகிறதே?’’
‘‘என்னை உணர்பவர்களுக்குத்தான் உண்மை தெரியும். உணராதவர்கள், என்னுடைய வீடியோக்களைப் பார்க்காதவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள்’’ (என்றபடியே பற்களை நறநறத்தார்).
‘‘எல்லாம் சரி... இந்த ஏற்பாடுகளுக்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது?’’
‘‘நான் எந்த வேலைக்கும் செல்வதில்லை. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆசிரமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குகிறேன். நாளைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி முடிவு செய்ய மாட்டேன். அதுவாகவே நடக்கும்.’’
‘‘உங்கள் கணவர் அரசுவின் மரணம் சந்கேத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்துகிறதே?’’
‘‘அரசுவும் நானும் ஒன்றாக இணைந்த பின்னர்தான் என்னுள் இறைசக்தியே வெளிப்பட்டது. உடலுக்குத்தான் மறைவு. உயிர்த்தன்மைக்கு மறைவு கிடையாது. இங்கு வருபவர்கள் யாருமே அம்மா வேறு; அய்யா வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. இப்போதும் அரசு என் உடம்பில்தான் இருக்கிறார்’’ (என்றபடியே வைப்ரேட் மோடில் அவர் ஆவேசமாக...)
அடேங்கப்பா, என்னா உருட்டு என்று வி(ப)யந்தபடியே அங்கிருந்து புறப்பட்டோம்.