Published:Updated:

கேரளத்தில் 3 நாள் துக்கம்:அச்சுதானந்தன் அறிவிப்பு

Vikatan Correspondent

 குமுளி ஜன 16,2011: ஐயப்ப பக்தர்கள் 106 பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், கேரளத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என, முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார்.

கேரளாவின் புல்மேடு பகுதியில் நேற்று நிகழ்ந்த சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி 106 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து குமுளி வந்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பக்தர்களின் உடல்களை பார்வையிட்டார்.

பின் அவர் கூறுகையில், இறந்தவர்களின் குடும்பத்திற்கு கேரள அரசு மற்றும் தேவசம்போர்டு சார்பில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதிக காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கேரள அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கும். சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசுகள் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்தோர் தமிழக பக்தர்கள் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மருத்துவ செலவுக்கும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது

மத்திய அரசு: அதே போல் நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.