கந்து வட்டி கொடுமையால் சமீபத்தில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து `ஆபரேஷன் கந்துவட்டி' என்ற அதிரடி நடவடிக்கைக்கு தமிழக காவல்துறை தயாராகிவருகிறது.
உளுந்தூர்பேட்டை 10-வது பட்டாலியனில் ஆயுதப்படை காவலராக பணிசெய்து வந்த செல்வக்குமார் கந்துவட்டி கொடுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார். அனிதா என்பவரிடம் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனில், 3 லட்சத்தை திருப்பி தந்தவரிடம், மீதமுள்ள 2 லட்சத்திற்கு பதிலாக 12 லட்சம் கந்து வட்டியாக கேட்டு மிரட்டப்பட்டதோடு வெற்று பத்திரத்திலும் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மனஉளைச்சலுக்கு ஆளான காவல் துறை அதிகாரி செல்வக்குமார் கடந்த 1ம் தேதி விஷம் குடித்தார். உயிருக்கு ஆபாத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த 7ம் தேதி, உயிரிழந்தார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் சமூகத்தில் அதிகரித்துவரும் கந்துவட்டி கொடுமையை தடுக்க “ஆபரேசன் கந்துவட்டி” என்ற புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக டி.ஜி.பி சைலேந்திர பாபு அனைத்து போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், "அதிக வட்டி வாங்கிய நிலுவையில் உள்ள புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; இந்த புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வட்டிக்கு வாங்கியவர்களிடம் இருந்து சாட்சிக்காக பெறப்பட்ட கையெழுத்துடன் கூடிய வெற்று காகிதங்கள், வெற்று காசோலைகள், சட்ட விரோத ஆவணங்கள் போன்றவற்றை கந்து வட்டி விடும் நபர்களிடமிருந்து பறிமுதல் செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. காவலரின் மரணத்தை தொடர்ந்து, கந்துவட்டிக்கு எதிரான இந்த நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது, குறிப்பிடத்தக்கது.