Published:Updated:

`ஐந்தாகப் பிரிந்த 4 மாவட்டங்கள்’- தாலுகா விவரங்களை அடுக்கிய அரசாணை

தமிழக அரசு இந்த ஆண்டு நான்கு மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன் எல்லைகள் குறித்த அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசு
தமிழக அரசு

தமிழக அரசு இந்த ஆண்டு மட்டும் நான்கு மாவட்டங்களைப் பிரித்து ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுத் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்டம் இரண்டாக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய மாவட்டங்களில் எந்தெந்த தாலுகாக்கள் அடங்கும், எந்த வருவாய் கோட்டத்துக்குக் கீழ் இந்த மாவட்டங்கள் இயங்கும் என்ற அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்புவரை செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கல்பட்டு மாவட்டம் செயல்பட்டு வந்தது. காஞ்சிபுரம் அண்ணா பிறந்த ஊர் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், செங்கல்பட்டிலிருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதனால் பல்லாவரம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், கேளம்பாக்கம், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கடைக்கோடியில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்ல மக்கள் சிரமப்பட்டனர்.

எனவே செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்தார். இரு மாவட்டங்களின் எல்லைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு
செங்கல்பட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் :

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரண்டு வருவாய் கோட்டத்தில் காஞ்சிபுரம் உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் (புதியது), வாலாஜாபாத், குன்றத்தூர் (புதியது) ஆகிய ஐந்து தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் :

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய மூன்று வருவாய் கோட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் மற்றும் வண்டலூர் (புதியது) ஆகிய எட்டு தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோன்று வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும் எனச் சுதந்திரதின விழாவின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ள வேலூர் மாவட்டத்தின் எல்லைகள் தற்போது வெளியாகியுள்ளன.

வேலூர் மாவட்டம்

வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி குப்பம், அணைக்கட்டு, காட்பாடி என ஐந்து தாலுகாக்களும் வேலூர், குடியாத்தம் என இரண்டு வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

வேலூர்
வேலூர்

ராணிப்பேட்டை மாவட்டம்

வாலாஜா, நெமிலி, ஆற்காடு, அரக்கோணம் என நான்கு தாலுகாக்களும், ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டாறம்பள்ளி, ஆம்பூர், என நான்கு தாலுகாக்களும் திருப்பத்தூர் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும் அடங்கும்.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் :

நெல்லை, சேரன்மகாதேவி என 2 வருவாய் கோட்டங்களில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், மானூர், திசையன்விளை என 8 தாலுகாக்களும் இடம் பெற்றுள்ளன.

தென்காசி மாவட்டம் :

தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 2 வருவாய் கோட்டங்களில் தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வி.கே புதூர் ஆகிய 8 தாலுகாக்கள் இடம் பெற்றுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் இணைக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சங்கரன்கோவில் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் அது இல்லை என்றால் சங்கரன்கோவிலை திருநெல்வேலியுடன் இணைக்க வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திருநெல்வேலி
திருநெல்வேலி

விழுப்புரம் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் :

விழுப்புரம், திண்டிவனம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்கள் உள்ளன.

கள்ளக்குறிச்சி :

கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் ஆகியவை இரு வருவாய் கோட்டங்களாகவும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கல்வராயன்மலை என 6 தாலுகாக்களும் உள்ளன.