பிரதமர் மோடி இரண்டாம் முறை ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து எதிர்கொண்டுவரும் கேள்விகளில் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். எதிர்க்கட்சிகள் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக அடிக்கடி விமர்சித்துவரும் நிலையில், நேற்று பா.ஜ.க எம்.பி வருண் காந்தி, அரசின் பல்வேறு துறைகளில் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்கள் காலியாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, ``இன்று நாட்டின் மிகப்பெரும் பிரச்னை வேலையில்லாத் திண்டாட்டம். நாடுமுழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். வேலையில்லா இளைஞர்களுக்கு நீதி வழங்க வேண்டும். அப்போதுதான் நாடு வளம்பெறும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இன்று பிரதமர் நரேந்திர மோடியின் அலுவல் (பிஎம்ஓ) ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துத் துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனித வளத்தின் நிலையை மதிப்பாய்வு செய்து, அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணி நியமனம் செய்யும் பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்" என்று ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அமைச்சரவை செயலாளர் ராஜீவ், "தற்போதுள்ள அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசின் செயலர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பிரதமரின் ஆய்வுக் கூட்டம் நடந்திருக்கிறது. ஏப்ரல் 2-ம் தேதி செயலாளர்களுடனான சந்திப்பின்போது, பொது மற்றும் தனியார் துறைகளில் அரசுத் தலையீடுகள் அனைத்திலும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும், அமைச்சரவை செயலாளர், மற்ற துறை செயலாளர்களுக்குக் கடிதம் மூலம் பிரதமரின் ஆலோசனையின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்" எனத் தெரிவித்திருக்கிறார்.