அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் உடல்நலன் மற்றும் கல்வித்திறனை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும் பள்ளிகளில் இனி, நாள்தோறும் மாணவர்களுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணை வெளியாகி உள்ளது. அதில் மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை என்னென்ன உணவுகள் வழங்கப்படும் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, இந்த நான்கில் ஏதாவது ஒன்று காய்கறி சாம்பாருடன் திங்கள்கிழமை வழங்கப்படும். ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி என இவை நான்கில் ஏதாவது ஒன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். ரவா பொங்கல், வெண் பொங்கல் இவை இரண்டில் ஏதாவது ஒன்று காய்கறி சாம்பாருடன் புதன்கிழமை வழங்கப்படும்.

சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா ஆகிய நான்கில் ஏதாவது ஒன்று, காய்கறி சாம்பாருடன் வியாழக்கிழமை வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை மெனுவில் குறிப்பிட்ட உணவு வகைகளில் ஏதாவது ஒரு கிச்சடியுடன், ரவா கேசரி அல்லது சேமியா கேசரி வெள்ளிக்கிழமை வழங்கப்படும்.
பட்டியலில் குறிப்பிடப்பட்ட இந்தச் சிற்றுண்டி மெனு, அனைத்து வேலை நாள்களிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டம் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கவும் உதவும் என நம்பப்படுகிறது. மேலும் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் சுமையைக் குறைப்பதையும் இத்திட்டம் குறிக்கோளாகக் கொண்டுள்ளது.