
குட்கா, கஞ்சா, போதைப்பொருள்கள் வியாபாரத்தில் தி.மு.க-வினர் ஈடுபட்டால்கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் கடும் சட்டப் பிரிவுகளில் கைதுசெய்யச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர்
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து, அவ்வப்போது முதல்வர் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஆனால், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வரே முன்னின்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தியதில்லை. முதன்முறையாக, ஜனவரி 3-ம் தேதி போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களை என்.ஐ.ஏ கைது செய்திருக்கும் நிலையில், முதல்வரின் இந்த ஆய்வுக் கூட்டம் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறது!
சமீபகாலமாக, போதைப்பொருள்களின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்திருக்கிறது. கடந்த டிச. 12-ம் தேதி, சென்னையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 38 கிலோ மெத்தாபெட்டமைன், 50 கிலோ கஞ்சா ஆயில் போதைப்பொருள்களை, ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி சுங்கச்சாவடி அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். `கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 180 கோடி ரூபாய்’ என்கிறது என்.ஐ.ஏ வட்டாரம். கஞ்சாவும் தொடர்ச்சியாகத் தமிழகமெங்கும் கைப்பற்றப்படுகிறது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி, மினி லாரியில் ரகசிய அறை அமைத்து 100 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் திருநெல்வேலியில் கைதுசெய்யப்பட்டனர். இப்படி, போதைப்பொருள்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கும் நிலையில்தான், ஆய்வுக் கூட்டத்தை கூட்டியிருக்கிறார் முதல்வர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட காவல்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘கஞ்சா ஒழிப்புக்காகக் காவல்துறை இதுவரை எடுத்திருக்கும் நடவடிக்கைகள் முதல்வருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. போதைப்பொருள்களுக்கு எதிரான சிறப்பு அதிரடி சோதனைகள், டிசம்பர் 2021-ல் ‘இரு வார கால’ ஆபரேஷனாக நடத்தப்பட்டது. மேலும், மார்ச் 2022-ல் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0’, கடந்த டிசம்பர் மாதம் ‘ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0’ மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையின் இந்த நடவடிக்கைகளில், 12,294 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 17,250 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 26,525 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்டிருக்கின்றன. இந்தப் புள்ளிவிவரங் களையெல்லாம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்ட முதல்வர், தமிழகத்தில் போதைப்பொருள்களின் நடமாட்டம் குறித்தும், இலங்கையில் விற்கப்படும் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருள் தமிழகத்திலிருந்து கடத்தப்படுவது குறித்தும் என்.ஐ.ஏ விடுத்திருந்த ‘அலர்ட்’ குறித்து விசாரித்தார்.
‘கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யுங்கள். அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குங்கள். பள்ளிகள், கல்லூரிகளில் போதைப்பொருள்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்துங்கள்’ என்று உத்தரவிட்ட முதல்வர், ‘என் காவல் சரகத்தில் ஒரு இடத்தில்கூட கஞ்சா விற்கவில்லை’ என ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் அறிவிக்கும் நிலை வர வேண்டும்’ என்று கண்டிப்புடன் கூறினார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் தீவிரமாகவே இருக்கிறார். சில போதைப்பொருள்கள் மருந்து வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் தன்மை, அவற்றை ஒழிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கி ணைந்து செயல்படுமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர்” என்றனர்.

குட்கா, கஞ்சா, போதைப்பொருள்கள் வியாபாரத்தில் தி.மு.க-வினர் ஈடுபட்டால்கூட தயவு தாட்சண்யம் பார்க்காமல் கடும் சட்டப் பிரிவுகளில் கைதுசெய்யச் சொல்லியிருக்கிறாராம் முதல்வர். காவல்துறையின் கைகளை சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. ‘2.0., 3.0’ எனப் பெயருக்கு நடவடிக்கைகளை எடுத்து, கணக்கு காட்டாமல், போதைப்பொருள் கடத்தலில் மூளையாகச் செயல்படும் திமிங்கிலங்களைக் குறிவைக்க வேண்டியது காவல்துறையின் பணி. செய்வார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!