
மதுரை கோ.புதூரில் எளிய மக்களின் குடியிருப் புகள் அதிகமுள்ள நெரிசலான ரணகாளியம்மன் தெருவில் ‘நந்தினி வீடு எது?’ என்று கேட்டால் உடனே வீட்டைக் காண்பிக்கிறார்கள். இப்போது நந்தினி வீட்டில் இல்லை. சிறையில் இருக்கிறார், அவரோடு இணைந்து போராடும் தந்தை ஆனந்தனும் சிறையில் உள்ளார்.
ஐ.பி.சி. 328-ஐப் பற்றித் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் விளக்கம் கேட்டதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடந்த ஜூன் 27-ம் தேதி முதல் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான விஷயம், ஜூலை 5-ம் தேதி நந்தினிக்கு குணா ஜோதிபாசுவுடன் திருமணம் நடைபெற நாள் குறிக்கப் பட்டிருந்ததுதான்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சசிபெருமாள் உட்பட பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வந்த 2013-ல்தான் மதுரை சட்டக்கல்லூரி வாசலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சில மாணவர்களுடன் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் தொடங்கிய முதலாம் ஆண்டு மாணவியான நந்தினியை, தமிழக மக்கள் ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் பார்த்தார்கள். மாலையில் வீட்டுக்குப் போய்விடுவார் என்று, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியமாக நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.
காவல்துறையால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. மறுநாளும் போராட்டம் தொடர்ந்தது. அவர் போராட்டத்துக்கு ஆதரவாகச் சில கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தார்கள். ஒரு தீர்வு கிடைக்காமல் போராட்டத்தைக் கைவிட முடியாது என்ற உறுதிப்பாட்டுடன் இருந்த நந்தினிக்கு ஆதரவு கொடுக்க சசிபெருமாள், தமிழருவி மணியன், சீமான் எனப் பல்வேறு அரசியல் கட்சியினரும் வருகைதந்து ஆதரவுதர ஆரம்பித்தார்கள்.

இந்தப் போராட்டம் பற்றிக் காட்சி ஊடகங்கள் தினமும் செய்தி வெளியிட்டதால் இது மக்கள்மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று அரசு பயந்ததால், போலீஸார் அவரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள். அங்கேயும் பட்டினிப் போராட்டத்தைத் தொடர்ந்தவருக்கு, அவர் கோரிக்கையை அரசுக்கு வலியுறுத்துவதாக உத்தரவாதம் அளித்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள்.
ஆனால், அரசு சொன்னதைச் செய்யவில்லை என்பதால், அப்போதிருந்த மது விற்கும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராடத் தொடங்கினார் நந்தினி.
அந்தப் பட்டினிப் போராட்டத்துக்காகத்தான் முதன்முதலில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆறு ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நந்தினியின் மீது பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள்தான் அவர் சட்டப்படிப்பை ஐந்து வருடம் நிறைவு செய்தும் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முடியாமல் தடையாக நிற்கின்றன.
அப்படிப் பதிவு செய்யப்பட்டவற்றில் ஒன்றுதான் 2014-ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் டாஸ்மாக்கை எதிர்த்து போலீஸின் அனுமதியில்லாமல் பிரசாரம் செய்த வழக்கு. தற்போது நந்தினி, நீதிமன்ற அவமதிப்பில் சிறைக்குச் செல்லக் காரணமான வழக்கும் அதுவே!
நந்தினியும் அவரின் தந்தை ஆனந்தனும் பிரதானமாக மதுக்கடைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தாலும், நாட்டில் நிகழும் பல்வேறு சமூகக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திவருகின்றனர். கந்துவட்டிக்கு எதிராக, ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராக என்று தொடங்கி வாக்கு எந்திரத்தைத் தடை செய்து, வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டுமென்று பா.ஜ.க அலுவலகம் முன் போராடத் தொடங்கினார். அதன் உச்சமாக டெல்லியில் பிரதமர் மோடி வீட்டின் முன் போராட்டம் நடத்தச் சென்றபோது டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

வேளாண்மைத்துறையில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றிய ஆனந்தனுக்கு, அத்துறையின் தொழிற்சங்கத்தில் பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்கள், படித்த புத்தகங்கள், மக்களுக்கு சேவையாற்றுவதில் அரசு இயந்திரத்தின் அலட்சியமான செயல்பாடு அனைத்தும் சிந்தனை மாற்றத்தைக் கொடுத்தது. பார்த்த வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஊழலுக்கு எதிராகவும், அரசின் மோசமான திட்டங்களை எதிர்த்தும் பிரசாரம் செய்யத் தொடங்கினார். கண்ணுக்கு முன்னாள் தவறு நடந்தால் உடனே அங்கேயே அதை எதிர்த்துக் குரல் எழுப்புபவராக இருந்தார். தந்தையையும், அவருக்குப் பிடித்தமான பகத்சிங்கும் நந்தினிக்கும், நிரஞ்சனாவுக்கும் பிடித்த ரோல் மாடலாகிப் போனார்கள். எந்த அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீதும் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. தாங்கள் நடத்தும் போராட்டத்துக்கு மக்கள் தாமாக வர வேண்டும் என்பது மட்டுமே இலக்கு.
ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்தபோது அவர்கள் வீடுகளுக்கு முன்பும் அமைச்சர்கள் வீட்டு முன்பும் போராட்டம் நடத்தச் சென்றபோது கைது செய்யப்பட்டார்கள். அதைவிட, சமீபத்தில் மது விற்கும் அரசைத் தடுக்கவில்லை என்று நீதிபதிகளுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றம் முன் போராடச்சென்று கைது செய்யப் பட்டார்கள். வாக்கு எந்திர மோசடிக்கு எதிராக பிரசாரம் செய்ய காரைக்குடி, மானாமதுரை சென்றபோது சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.
ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்து போராட்டங்களுக்குச் சென்று வந்தார். இந்த நிலையில்தான் இப்போது தந்தையும் மகளும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்.
சொந்தப் பிணையில் வெளியில் விடுகிற சட்டப்பிரிவு கொண்ட வழக்குதான் இது. ஆனால் நீதிபதியிடம் தாங்கள் கேட்ட கேள்வி நியாயமானது, அது தவறு என்று சொல்லிப் பிணை கேட்க விரும்பவில்லை என்று மறுத்து, தொடர்ந்து சிறையில் இருக்கிறார்கள்.
நாம் வீட்டுக்குச் சென்றபோது நந்தினியின் அம்மா, தங்கை நிரஞ்சனா, உறவினர்கள், குணா ஜோதிபாசு வீட்டில் இருந்தார்கள். நந்தினியோடு திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த குணா ஜோதிபாசுவிடம் பேசினோம்.
“ஜூலை 5-ம் தேதி திருமணம் செய்ய இருந்த நிலையில்தான் 2014-ல் திருப்பத்தூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கடந்த 27 -ம் தேதி வந்தது. அப்போது போலீஸ் தரப்பு சாட்சியைக் குறுக்கு விசாரணை செய்த நந்தினி, ஐ.பி.சி. 328-ன் படி டாஸ்மாக்கில் விற்கப்படுவது போதைப் பொருளா, மருந்துப்பொருளா, உணவுப்பொருளா என்று கேள்வி கேட்டார். இப்படியெல்லாம் கேட்கக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது. ஐ.பி.சி பிரிவின்படி போதை தரும் பொருளை விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனும்போது, அதை அரசே செய்யும்போது அந்தச் சட்டம் பற்றி நீதிமன்றத்தில்தானே கேட்க முடியும். இப்படிக் கேட்டதற்குத் தான் நீதிமன்ற அவமதிப்பில் சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஜாமீனில் விடுவதற்கு `இதுபோல் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று நிபந்தனை விதித்ததை நந்தினி ஏற்கவில்லை. சட்டப்படி சந்திக்க முடிவு செய்துள்ளோம்” என்றவரிடம், ‘`திருமணம் தடைப்பட்டதில் வருத்தம் இல்லையா?’’ என்றோம். ‘`அதெல்லாம் இல்லை, இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியும். அரசின் அடக்குமுறையை சட்டப்படி எதிர்கொள்வோம். நந்தினி எப்போது வெளியில் வருகிறாரோ அப்போது திருமணம் செய்து கொள்வோம்’’ என்றார் திடமாக.
``நம் சட்டம் நியாயமான கேள்வி கேட்பவர்களையே தண்டிக்கும் வலிமையுடையது என்று அண்ணல் அம்பேத்கரே எண்ணியிருக்க மாட்டார். மதுரை நந்தினியைப் பற்றி இல்லாத கதைகளைச் சிலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் ஏதோ இயக்கம் உள்ளது, அவருக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது என்று பொய்ச்செய்தி பரப்புகிறார்கள். கடந்த 2013- லிருந்து அவருடைய போராட்டங்களை கவனித்து வருகிறவர்களுக்குத்தான் தெரியும், அர்ப்பணிப்பும் அறச்சீற்றமும் கொண்ட கொள்கைப்பிடிப்புள்ள எளியோரின் சளைக்காத போராட்டம் என்று” எனக் கோபமாகப் பேசினார் தங்கை நிரஞ்சனா.
நந்தினியின் தங்கை நிரஞ்சனா சித்த மருத்துவம் படிக்க விரும்பினார். ஆனால், அப்பாவும் அக்காவும் மதுவுக்கு எதிராகப் போராடுவதைப் பார்த்து சட்டக் கல்லூரியில் சேர்ந்தவர், இப்போது போராட்டத்தில் இறங்கி விட்டார். நந்தினியின் சிறை அடைப்புக்கு நியாயம் கேட்டுப் பட்டினிப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.
நந்தினியும் ஆனந்தனும் எழுப்பிய கேள்விகள் அரசையும், அதிகார வர்க்கத்தையும் தூங்க விடாமல் செய்யக்கூடியவை. அந்த நியாயமான கேள்விகளுக்காகச் சிறையில் இருக்கிறார் நந்தினி. பதில் தர வேண்டிய அதிகார வர்க்கமோ மேலும் மதுக்கடைகளைத் திறக்கும் திட்டங்களில் மும்முரமாக இருக்கிறது.