ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

ஓவியங்களில் உயிர்க்கும் மனிதர்கள்!

அந்தோணி ராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
அந்தோணி ராஜ்

ஏறி வாரிய தலையும் முறுக்கு மீசையுமாகக் குலுங்கிச் சிரிக்கும் பெரியவரும், பட்டை விபூதி பூசி பாம்படம் குலுங்கப் புன்னகைக்கும் பாட்டியும் அழியாதொரு படைப்பாக கோடுகளில் உறைந்திருக்கிறார்கள்.

ந்தோணி ராஜின் தூரிகை உயிர்ப்பிக்கும் பூ விற்கும் பாட்டி, தன் இயல்புச் சிரிப்பில் ஆயிரம் கதை சொல்கிறாள். ஆட்டுச் சந்தையில் பேரம் முடித்துவிட்டு வெற்றிப்பூரிப்பு காட்டும் கிழவர் அப்படியே நம் மனதிலும் படிந்துவிடுகிறார். எளிய மனிதர்களின் சின்னச் சின்ன நுண்ணுணர்ச்சிகளை அவ்வளவு நுட்பமாகச் சித்தரிக்கின்றன அந்தோணியின் கோடுகள்.

பூடகமில்லாமல் வெகு இயல்பாக எண்ணங்களைக் கடத்தும் யதார்த்த சித்திரங்கள்தான் அந்தோணியின் அடையாளம். சென்னைக் கவின்கலைக்கல்லூரி தயாரித்துத் தந்திருக்கும் இளம் ஆளுமை. வியாபாரியாக, வழிப்போக்கராக, திண்ணையில் அமர்ந்து தான் இழந்த காலத்தை அசைபோடும் வெள்ளந்தி மனிதராக அன்றாடம் நம்மைக் கடந்துபோகிற முதியவர்களின் முகங்களை அத்தனை நெருக்கமாகக் கோடுகளில் வடிக்கிறார் அந்தோணி.

ஓவியங்களில் உயிர்க்கும் மனிதர்கள்!

அந்தோணி, சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர். மிக எளிய குடும்பம். அப்பா ஜேம்ஸ் சாலை அமைக்கும் தொழிலாளி.

“நிறைய சிரமங்களைக் கடந்து வளர்ந்தவன் நான். மூணு சகோதரர்கள். நாலாவது படிக்கும்போது ஒரு விபத்து... ஒரு கையில பாதிப்பு. வாழ்க்கையில என்னாகப் போறோம்னு தெரியாமத் தவிச்சு நின்னப்போ, ‘உனக்கு ஓவியம் நல்லா வருது... அதைச் செய்’ன்னு வழிகாட்டினது என்னோட பெரிய அண்ணன் விக்டர். அவரும் ஓவியர்தான். அவரைப் பார்த்துதான் நானும் வரைய ஆரம்பிச்சேன். பள்ளியில கிடைச்ச சின்னச் சின்ன அங்கீகாரங்கள் எனக்கு உற்சாகம் கொடுத்துச்சு. கவின்கலைக் கல்லூரின்னு ஒண்ணு இருக்கிறதைக் கண்டுபிடிச்சு விண்ணப்பிச்சேன்.

நிறைய கனவுகளோட கல்லூரிக்கு வந்தேன். உண்மையைச் சொல்லணும்னா கண்ணைக் கட்டிக் காட்டுல விட்டமாதிரிதான் இருந்துச்சு. இதுதான் ஓவியம்... இதுதான் வண்ணம்னு புரிஞ்சுக்கவே நாளாச்சு. வரைஞ்சதை அப்பப்போ ஈஸ்டர்ராஜ் சார்கிட்ட காமிப்பேன். ‘இது இல்லை ஓவியம்... நீ பார்த்ததை உணர்ந்ததை நினைக்கிறதை வரை...’ ன்னு சொல்வார்.

ஓவியங்களில் உயிர்க்கும் மனிதர்கள்!

மார்க் ரத்தினராஜ் சாரைப் பார்த்தபிறகுதான் நுண்கலையோட அரசியலும் அதோட விசாலமான பரப்பும் புரிஞ்சுச்சு. ‘புனைவுகள் இல்லாத உலகத்துல நிறைய ஜீவனிருக்கும்... முகங்களை ஆழ்ந்து கவனி... அதுக்குள்ள புதைஞ்சிருக்கிற உணர்ச்சிகளை வரைஞ்சு பார்... உயிர் இருக்கும்’ன்னு சொல்லி என்னை யதார்த்த ஓவியனா வார்த்தது அவர்தான். அழகு பற்றிய என் சிந்தனையே மொத்தமா மாறின இடம் அதுதான். கலை, பூடகத்தன்மை இல்லாம நேரடியா பேசணும். கையில ஒரு ஜப்பானிய மைக்ரோ பேனாவும், கேன்ஸன் 300 சிஎஸ்எம் பேப்பரும் வாங்கித்தந்து அனுப்பி வச்சார் மார்க் சார். புதுப்புது மனிதர்களைத் தேடத் தொடங்கினேன். பூ விற்கிற ஒரு பாட்டியும், கோயிலுக்கு வர்ற மனிதர்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு உக்காந்திருந்த ஒரு பெரியவரும் என் உலகத்தை மாத்தினாங்க.

அந்தோணி ராஜ்
அந்தோணி ராஜ்

இயல்பா தாத்தா பாட்டியோட அன்பை உணர்ந்து வளர்ந்தவன் நான். எதையுமே தப்பா பார்க்காம, எந்த வலியையும் வெளிக்காட்டிக்காம எப்பவும் புன்னகையோடவே இருக்கிற என் தாத்தா-பாட்டியை நான் சந்திக்கிற எல்லா முதியவர்கள்கிட்டயும் தரிசிக்க முடிஞ்சது. புகைப்படம் எடுக்கும்போது திட்டி, வரைஞ்ச ஓவியத்தைக் காட்டும்போது கட்டிப்பிடிச்சுப் பாராட்டின்னு இந்தப் பயணம் ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு...” என்கிறார் அந்தோணி ராஜ்.

ஏறி வாரிய தலையும் முறுக்கு மீசையுமாகக் குலுங்கிச் சிரிக்கும் பெரியவரும், பட்டை விபூதி பூசி பாம்படம் குலுங்கப் புன்னகைக்கும் பாட்டியும் அழியாதொரு படைப்பாக கோடுகளில் உறைந்திருக்கிறார்கள். இன்னும் இன்னும் மனிதர்களின் புன்னகையைத் தேடி நகர்ந்து கொண்டேயிருக்கிறார் அந்தோணி ராஜ்!