Published:Updated:

ஆறு ஆண்டுகளில் 300%... பெட்ரோல், டீசல் வரி வருமானம் தொடர்பாக அமைச்சரின் அதிர்ச்சி பதில்!

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் வேலை. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லிவந்த மத்திய அரசாங்கம், இப்போது அவற்றின் விலையை உயர்த்த முடியாதபடிக்கு ஆயில் மார்க்கெட்டிங்களின் கையைக் கட்டிப்போட்டிருக்கிறது!

பெட்ரோல், டீசல் விலை ஒரு லிட்டருக்கு 93 ரூபாய்க்கு மேல் உயர்ந்து, இன்னும் சில வாரங்களில் ரூ.100-யைத் தொட்டுவிடுமோ என எல்லோரும் பயந்துகொண்டிருந்த வேளையில், இந்த மாதம் முழுக்கவே இவற்றின் விலை உயராமலும் குறையாமலும் இருப்பது உலக அதிசயம்தான். கூடிய விரைவில் ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்களிடம் அதிருப்தி உருவாகக் கூடாது என்பதற்காக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தாமலே வைத்திருக்கின்றன ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்கள்.

பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை

'பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் வேலை. தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை' என்று சொல்லிவந்த மத்திய அரசாங்கம், இப்போது அவற்றின் விலையை உயர்த்த முடியாதபடி ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனங்களின் கையைக் கட்டிப்போட்டிருக்கிறது. இந்த நடைமுறையை மத்திய அரசாங்கம் எப்போதும் பின்பற்றினால், மக்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்கள்!

இது ஒருபக்கமிருக்க, பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் விற்பனை மீதான வரி வருமானத்தின்மூலம் கிடைத்த தொகை மத்திய அரசுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 300% அதிகரித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். மத்திய அரசு, எரிபொருள்கள் மீது எவ்வளவு வரி விதிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் இந்தப் பதிலை அளித்திருக்கிறார்.

Petrol
Petrol

மத்திய இணை அமைச்சரான அனுராக் தாகூர், இந்த நிதி ஆண்டின் (2020-2021) முதல் 10 மாதங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.2.94 லட்சம் கோடி வரியாக மத்திய அரசுக்குக் கிடைத்துள்ளதாகச் சொல்லியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொரோனா பரவல் காரணமாகக் கச்சா எண்ணெயின் விலை கடந்த ஆண்டு கிடுகிடுவெனக் குறைந்தது. அந்த சமயத்தில் பெட்ரோல் மீதான கலால் வரி 13 ரூபாயும் டீசல் மீதான கலால் வரி 16 ரூபாயும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைத்து முதல் நிதியாண்டான 2014-2015-ல் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் ரூ.74,158 கோடியாக இருந்தது. இது 2020-2021 நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் ஏறக்குறைய 2.94 லட்சம் கோடி ரூபாய் கலால் வரியாக அதிகரித்துள்ளது.

petrol price
petrol price

2014-2015-ல் பெட்ரோல் மீது ரூ.9.48-ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.32.9-ஆகவும் ரூ.3.56-ஆக இருந்த டீசல் மீதான கலால் வரி, தற்போது ரூ.31.80-ஆகவும் உயர்ந்திருப்பதே மத்திய அரசின் வருமானம் உயர்வதற்கு முக்கியமான காரணம் ஆகும்.

மக்கள் பாதிப்பு அடையாதபடிக்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் வழிமுறைகளை மத்திய அரசாங்கம் எப்போதுதான் கொண்டுவருமோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு