
கறுப்பாக இருப்பவர்களுக்குத் திரைப்படங்களில் கண்ணியமான கதாபாத்திரங்களை வழங்க வேண்டும்
இரட்டை விருதுகளைக் கையில் ஏந்தியபடி `எல்லாப் புகழும் இறைவனுக்கே!’ என ஆஸ்கர் விருது மேடையில் தமிழில் பேசியதில் தொடங்கி, தற்போது `தமிழ்தான் இந்தியாவுக்கு இணைப்பு மொழி’ எனப் பேசியது வரைக்கும், ரஹ்மானின் அரசியல் மொழி என்பது மயிலிறகில் செய்த வாள் போன்றது!
*‘வந்தே மாதரம்’ பாடல் தொடங்கி, தனது இசையிலும் பேச்சிலும் இந்தியப் பன்முக ஒருமைப்பாட்டை எப்போதும் வலியுறுத்திவருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். அதேசமயம் மொழி, மதம், பண்பாடு, உரிமைகள் மீதான அடக்குமுறைகளும் திணிப்பும் பிரச்னைகளாக உருவெடுக்கும்போது, தனது தமிழ் அடையாளத்தையும் பாதிக்கப்படுவோர் தரப்பில் நின்று கருத்துகளைப் பதிவுசெய்பவர். மென்மையும் அதிரடியுமான அவரது இசையைப்போலவே பல்வேறு தருணங்களில் அவர் முன்வைத்த சொற்கள் இவை!
*“தமிழ்தான் நமது அடையாளம்!”
“பிரிவினை அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. எனினும், மக்கள் ஒற்றுமையால் கட்டப்பட்டிருக்கிறார்கள். நாம் அனைவரும் நம்பிக்கையையும் அறிவையும் பகிர்வதில்தான் அமைதிகொள்கிறோம்!”
*“ஹாலிவுட் சென்று இசை அமைத்தாலும், தமிழன் என்பதில்தான் எனக்குப் பெருமை!”
*“என்னைப் பொறுத்தவரை தென்னிந்தியா, வட இந்தியா என்பது இல்லை. எல்லைகள் உடைந்துவிட்டன. எல்லை கடந்து மக்கள் திரைப்படங்களைப் பார்க்கின்றனர். கலையின் வழியாக நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்!”
*“இந்திப் படங்களில் நான் பணியாற்றுவதற்கு எதிராக ஒரு கூட்டம் செயல்படுகிறது. எனக்கு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன!”
*“தமிழன் உலகை ஆள வேண்டும்!”
*“கலையின் வழியாக மக்களைப் பிரிப்பது எளிது. ஆனால், இது ஒன்றிணைவதற்கான நேரம். வேறுபாடுகளின் தனித்துவங்களைக் கொண்டாட வேண்டிய நேரமிது. நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டிய நேரமிது!”
*“தண்ணீர் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லாமல் அனைவரும் குழாயில் வரும் குடிநீரைப் பருகக்கூடிய நிலை ஏற்பட வேண்டும்!”
*“தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல தலைவர் வர வேண்டும். தமிழ்நாட்டின் கட்டமைப்பை மாற்ற வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வேண்டும். அவர்களின் தற்கொலையைத் தடுக்க வேண்டும். கல்விமுறையை மாற்ற வேண்டும்!”
*“கறுப்பாக இருப்பவர்களுக்குத் திரைப்படங்களில் கண்ணியமான கதாபாத்திரங்களை வழங்க வேண்டும்!”
*(`மத்திய அரசு, மாநிய சுயாட்சியைக் கேள்விக்குறியாக்குகிறது’ என்ற விவாதம் நடைபெற்றபோது, கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி லிங்க்கைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து) “ `Autonomous’ என்பதற்கான விளக்கத்தை `கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியில்’ பார்க்கவும்!”
*(ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது) ‘‘தமிழகத்தின் உணர்வினை ஆதரிக்கும்விதமாக நான் உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன். (உண்ணாவிரதம் முடித்த பிறகு இப்படிப் பாடினார்) தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும் விடியும் உள்ளம் மயங்காதே... என் வீடு... தாய்த் தமிழ்நாடு என்றே சொல்லடா!”

*“தமிழ்தான் இந்தியாவுக்கு இணைப்பு மொழி!”“ஆன்மிக அரசியல் என்றால், சாதி மதச் சார்பற்ற அரசியல் என்று ரஜினி சொல்கிறார். அதன் அர்த்தம் என்ன என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்!”
*(ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை, இணைப்பு மொழியாக ஏற்க வேண்டும் என அமித் ஷா கூறியபோது...) ழகரம் தாங்கிய செங்கோலுடன், `இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்’ என்ற பாரதிதாசன் வரிகள் இடம்பெற்ற தமிழ்த்தாயின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்தார்.
*(குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றபோது) Allah Rakha Rahman என்ற தனது முழுப்பெயர்கொண்ட விமான டிக்கெட்டை ட்விட்டரில் பதிவிட்டார்.