திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த வாரம் பள்ளி நேரம் முடிந்து, மாலை வீடு திரும்பியபோது சாலையில் சிகரெட் புகைத்தபடியே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அருகில் சென்ற மாணவிகளின் முகத்தில் புகையைவிட்டு கேலி, கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. மறுநாள் பள்ளிக்கு வந்த மாணவிகள், சம்பந்தப்பட்ட அந்த மாணவனின் ஒழுங்கீனச் செயல் குறித்து வகுப்பு ஆசிரியர்களிடம் கூறியிருக்கிறார்கள். அந்த மாணவனைக் கண்டிக்கும் வகையில், வகுப்பறைக்குள் சேர்க்க மறுத்த ஆசிரியர்கள், பெற்றோரை அழைத்து வரும்படி சொல்லியிருக்கிறார்கள். மாணவன் பெற்றோரை அழைத்து வராமலிருந்ததால், ஆசிரியர்கள் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டுக்குச் சென்ற அந்த மாணவன் தன் பெற்றோரிடம், ஆசிரியர்கள் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, கடுமையாகத் தாக்கிவிட்டதாகக் கூறியிருக்கிறான்.

இந்த விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சிலர் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட, இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்டும், மேலும் இரண்டு ஆசிரியர்கள் டிரான்ஸ்ஃபரும் செய்யப்பட்டனர். மொத்தம் நான்கு ஆசிரியர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ‘ஆசிரியர்கள் மீது எந்த தவறும் இல்லை; அவர்களை மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும்’ எனக்கூறி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்றைய தினம் காலாண்டுத் தேர்வைப் புறக்கணித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரைச் சூழ்ந்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோர், ‘சரியாக விசாரணை நடத்தாமல் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக’ வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன், பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தைக் கலைத்தார்.
இந்த நிலையில், ஆரணி பள்ளி விவகாரத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸும் தலையிட்டிருப்பதால் விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது. தன் ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘‘சிகரெட் பிடித்து மாணவிகள் மீது புகைவிட்ட 11-ம் வகுப்பு மாணவரைக் கண்டித்ததற்காக இரு ஆசிரியர்கள் பணியிடை மாற்றமும், மேலும் இரு ஆசிரியர்கள் பணியிட மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

பள்ளிகள் கோயில்களுக்கு இணையானவை. கல்வி மட்டுமல்ல... கட்டுப்பாடு, ஒழுக்கத்தையும் கற்றுத்தர வேண்டியது ஆசிரியர்களின் பணி. அதைத்தான் ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமல்ல. இது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்த பள்ளி மாணவ, மாணவியரும், ஊர் மக்களும் சாலை மறியல் போராட்டம் செய்தனர் என்பதிலிருந்தே உண்மை நிலையை உணர முடியும். தவறுகள் திருத்தப்பட வேண்டும். தொடரக் கூடாது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 2 ஆசிரியர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும். மற்ற இரு ஆசிரியர்களின் பணியிட மாற்றத்தையும் ரத்து செய்ய வேண்டும். மாணவர்களுக்கு அறநெறிகள் கற்றுத் தரப்படுவதை கட்டாயமாக்க வேண்டம்’’ என்று தெரிவித்திருக்கிறார்.