தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகேயுள்ளது உழக்குடி. இந்தக் கிராமத்திலுள்ள குளத்தின் அருகில் தென்மேற்குத் திசையில் களியங்காடு என்ற அடர்ந்த காடு ஒன்று உள்ளது. உழக்குடியிலிருந்து கலியாவூர் செல்லும் சாலையின் ஓரமாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடை தோண்டினார்கள். அப்போது பல வகையான மட்பாண்டங்கள் உடைந்த நிலையில் வெளிப்பட்டன. தற்போது அவ்விடத்தில் மழைநீர் சேகரிப்பு தடுப்பணை கட்டுவதற்குக் குழி தோண்டியபோது பல தொன்மையான பொருள்களும் வெளிப்பட்டன.

அப்பொருள்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததாகும். கறுப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டம், பளபளப்பான கறுப்புநிற மட்பாண்டம், உள்புறம் கறுப்பு, வெளிப்புறம் சிவப்பு நிற மட்பாண்டம், மண்ணாலான நீர் வடிகட்டி, விளையாட்டுப் பொருள்கள், பானைகளுக்குக் கீழ் வைக்கப் பயன்படுத்திய பரிமனைகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகமாசான சுடலை என்ற வரலாற்றுத்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர், உழக்குடியிலுள்ள காட்டுப் பகுதியில் மருகால் தலை சமணர் படுகைக்கு அருகில் நடுக்காட்டுக்குள் சுமார் 1 கி.மீ தொலைவில் 13 அடி உயரமான நடுகல் ஒன்றை உழக்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் உதவியுடன் கண்டறிந்துள்ளார். இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் அகழாய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆகழாய்வு இயக்குநர் பாஸ்கர், தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் மற்றும் ஆய்வு மாணவர்கள் அடங்கிய குழுவினர் உழக்குடிக்குச் சென்று அந்த நடுக்கல்லைப் பார்வையிட்டனர்.

இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள 37 இடங்களில் அகழாய்வு செய்திடக்கோரி, மதுரை உயர் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கைத் தொடர்ந்தும், தொல்லியல் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்றும் ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது நடுக்கல் காணப்படும் உழக்குடி, பெரிய அகழாய்வுக்களமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மருகால் தலை சமணர் படுகையிலிருந்து உழக்குடி கலியாவூர் பகுதி வரை முதுமக்கள் தாழிகள் பல புதைந்து கிடக்கின்றன. தற்போது இந்த நடுகல்லும் அகழாய்வுத்துறை அதிகாரிகளின் பார்வைக்கு வந்துவிட்டது. எனவே, தாமிரபரணி கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ள இருக்கும் அகழாய்வுடன், உழக்குடியிலும் சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.

பண்டைத் தமிழர்களின் வாழ்வியலை உணர்த்தும் சான்றுகளில் நடுகற்கள் முக்கியமானவை. தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் ஆங்காங்கே நடுகற்கள் கண்டறியப்பட்டு விரிவான ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நடுகற்கள் வீரன்கல், வீரக்கல், நினைவுத்தூண்கள் எனவும் சொல்லப்படுகிறது. எனவே கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை போல உழக்குடியும் முக்கியத் தொல்லியல் களமாகும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. மருகால் தலை சமணர் படுகை அருகே இந்தத் தொல்லியல் களம் இருப்பதால் மேலும் பல அபூர்வ தகவல் கிடைக்கும் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் நம்புகிறார்கள்” என்றார்.