Published:Updated:

நெல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட 17-ம் நூற்றாண்டு வாமனக்கல்!

நெல்லை அருகே சுமார் 600 ஆண்டுகள் பழைமையான வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பொறிக்கப்பட்டுள்ள வாமன உருவத்தைப் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வியந்து செல்கின்றனர்.

வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட கல்
வாமனன் உருவம் பொறிக்கப்பட்ட கல்

பழங்காலங்களில் கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. பெருமாள் கோயில்களுக்கு, தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களின் எல்லையைக் குறிக்க வாமனம் உருவம் பொறிக்கப்பட்ட கல் நடப்படுவது வழக்கம். வைணவர்களின் முழுமுதற்கடவுளான விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் மூலம் மூன்றடி மண் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்தார்.

கால்வாயில் கிடந்த வாமனக்கல்
கால்வாயில் கிடந்த வாமனக்கல்

அதனால் வைணவக் கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்க நடப்படும் கற்களில் வாமனன் உருவம் பொறிக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதைக் குறிக்க இவ்வாறு வாமனக்கல் நடப்பட்டுள்ளதாக சமய அறிஞர்கள் கருதுகின்றனர்.

நிழல் விழாத கோபுரம், ஒரே கல் விமானம், வளரும் நந்தி... தஞ்சை பெரியகோயில் குறித்த நம்பிக்கைகள் உண்மையா?

இந்தநிலையில், நெல்லையிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டாம்புளி என்னும் கிராமத்தில் வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கிராமத்தில், தமிழக அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் குளங்கள் மற்றும் கண்மாய்கள் தூர்வாரும் திட்டத்தின்கீழ் பணிகள் நடைபெற்றன. குளத்தின் மடைகள், மதகுகள் புதிதாகக் கட்டப்பட்டதுடன், கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளும் நடந்தன.

வாமனக்கல்லைப் பார்க்கும் பொதுமக்கள்
வாமனக்கல்லைப் பார்க்கும் பொதுமக்கள்

காட்டாம்புளி மற்றும் பாலாமடை கிராமங்களை இணைக்கும் குளத்தின் கரைப்பகுதியில் வேலை நடந்தது. அந்தக் கரையில் சுமார் 10 அடி ஆழத்துக்குத் தோண்டியபோது கல் ஒன்று கிடந்துள்ளது. அதை அங்கு வேலை செய்த மக்கள் கரையின் ஓரமாகப் போட்டுவைத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் அதைப் பார்த்தபோது, அதில் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அது குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அதில் இருப்பது வாமனன் உருவம் என்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார், காளிதாஸ் ஆகியோர் கூறுகையில், ``கடந்த 20 நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் கால்வாய் தூர் வாரும்போது வாமனக்கல் கிடைத்திருக்கிறது. ஆனால், வேலை செய்தவர்களுக்கு அது பற்றித் தெரியாததால் ஓரமாகப் போட்டு வைத்திருக்கிறார்கள். இளைஞர்கள் சிலர் தற்செயலாகப் பார்த்ததால் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.

வாமனக்கல் கிடைத்த குளத்தின் கரைப்பகுதி
வாமனக்கல் கிடைத்த குளத்தின் கரைப்பகுதி

அந்தக் கல் மூன்றரை அடி உயரத்துக்கு இருக்கிறது. அதில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உள்ளவரின் இடது கையில், ஒரு கலசம் இருக்கிறது. வலது கையில் வாமனக் குடையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், தாமிரபரணி ஆற்றில் ஜடாயு தீர்த்தம் அமைந்திருக்கிறது. அதனால் வைணவக் கோயிலின் எல்லையாக இது இருந்திருக்கலாம். அதனால் தொல்லியல்துறை அதிகாரிகள் இந்தக் கல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார்கள்.