Election bannerElection banner
Published:Updated:

திண்டுக்கல்: கி.பி 15ம் நூற்றாண்டு `கர்நாடக பாணி’ அடுக்கு நிலை நடுகல்... சொல்லும் செய்தி என்ன?

அடுக்கு நிலை நடுகல்
அடுக்கு நிலை நடுகல்

சுமார் 600 ஆண்டுகள் பழைமையான, விஜயநகர மன்னர்கள் ஆட்சிகால அடுக்குநிலை நடுகல் திண்டுக்கல் அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ளது மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில். இதன் அருகே வரலாற்று ஆய்வாளர்கள் கள ஆய்வு செய்த போது, சுமார் 600 ஆண்டுகள் பழைமையான, விஜயநகர மன்னர் காலத்து கர்நாடக பாணியிலான அடுக்கு நிலை நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடுக்கு நிலை நடுகல்
அடுக்கு நிலை நடுகல்

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் லெட்சுமணமூர்த்தி தலைமையிலான வரலாற்று ஆய்வாளர் குழுவினர், நடத்திய ஆய்வில், ஆஞ்சநேயர் கோயில் பின்புறம் 9 அடி உயரமும், 1 அடி அகலம் கொண்ட தூணில், 4 பக்கங்களிலும் சிறிய அளவிலான சிற்பங்கள் இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில், அது ஒரு அடுக்கு நிலை நடுகல் என்பது தெரியவந்தது.

இது குறித்து பேராசிரியர் லட்சுமணமூர்த்தி கூறும் போது, “தூணை தரையில் ஊன்றுவதற்கு 2 அடி இடைவெளி விட்டு, மீதமுள்ள 7 அடியில் ஓர் அடிக்கு ஓர் அடி என்ற அளவில் 7 பகுதியாக தூண் பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒவ்வொரு பகுதியிலும் சிறிய அளவிலான புடைப்புச் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. அவை அனைத்தும் நடுகல் சிற்பங்கள். அதனால்தான் இதனை அடுக்கு நிலை நடுகல் என்கிறோம். இதன் ஒரு பகுதி தரையோடு இருப்பதால், மூன்று பக்கத்தில் உள்ள சிற்பங்களை முதல்கட்டமாக ஆய்வு செய்தோம். கர்நாடக மாநிலத்தில் உள்ள அடுக்கு நிலை நடுகல் அமைப்பைப் போலவே இவை உள்ளது.

அடுக்கு நிலை நடுகல்
அடுக்கு நிலை நடுகல்

பல்லக்கில் அமர்ந்திருக்கும் ஒருவருக்கு, கவரி வீசும் பணியாட்கள், லிங்கத்தை வணங்கும் காளை உடலுடைய முனிவர், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன், பசுவிடம் பால் குடிக்கும் கன்று, தனது இருபுறமும் இரு மாடுகளுடன் புல்லாங்குழல் ஊதும் கண்ணன் ஆகியவை குறிப்பிடத்தக்க சிற்பங்கள் ஆகும். அதே போல, படை வீரர்கள், தங்கள் மனைவியருடன் இருக்கும் சிற்பங்கள் அதிகளவில் உள்ளன.

அதே போல, குதிரையில் அமைந்த நிலையில் மூவரும், வாள் மற்றும் ஈட்டியுடன் 9 பேருமாக இதில் 12 வீரர்கள் இருப்பதை அறியமுடிகிறது. இதன் மூன்று பக்கங்களில் மொத்தம் 26 பெண்களின் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 20 பேர் கையை மேலே உயர்த்தியும், இருவர் கையில் குழந்தையுடனும், நால்வர் சாதாரணமாகவும் காட்சியளிக்கிறார்கள்.

வயலில் மேய்ந்த மாட்டின் காலை வெட்டிய நபர்! - தஞ்சாவூர் அதிர்ச்சி

சிற்பங்களில் ஒரு பசுவும் கன்றும், 3 குதிரைகளும், 4 மாடுகளும், சிற்பங்களைச் சுற்றி கொடி, பூச்சரம் போன்ற அமைப்பும் காணப்படுகிறது. வீரர்கள் இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்துள்ளனர். நடுகல்லின் மேற்பகுதி கூடு போன்று அமைந்துள்ளது. இதுபோன்ற அடுக்கு நிலை நடுகற்கள் கர்நாடக மாநிலத்தில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் அமைப்பைக் கொண்டு மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் காலத்தில் இரு குழுக்கள் அல்லது கிராமங்களுக்கு இடையே நடந்த சண்டையில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் உடன்கட்டை ஏறிய அவர்களின் மனைவியர் நினைவைப் போற்றும் வகையில் இந்நடுகல் அமைக்கப்பட்டிருக்கலாம். கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு