Election bannerElection banner
Published:Updated:

கி.மு 600 முதல் கி.பி 2019 வரை... `கீழடி’ நேற்று இன்று நாளை! #Vikatan360

Keezhadi

தமிழர்களின் தாய்மடியாக மாறியிருக்கிற கீழடி பற்றிய முழுத் தொகுப்பு.

``தொன்மம் என்பது மானுடத்தின் பெருங்கனவு’’
- சிக்மண்ட் ப்ராய்ட்

இதுவரை தமிழ்நாட்டில் எத்தனையோ அகழாய்வுகள் நடந்ததுண்டு. எத்தனையோ தொல்பொருள்கள் இந்த அகழாய்வில் கிடைத்திருக்கின்றன. ஆனால், கீழடிக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? அப்படி என்ன கிடைத்துவிட்டது கீழடியில்... அப்படி என்ன தெரிந்துவிட்டது இந்த சிவந்த மண்ணில்... ஏன் இத்தனை தடைகள், இவ்வளவு போராட்டங்கள்... தமிழர்கள் பெருமையோடு கொண்டாட கீழடியில் கிடைத்த செய்தி என்ன?

சிவகங்கை மாவட்டம், கீழடி கிராமத்தின் பள்ளிச்சந்தை திடலில் இருக்கிறது அந்த தென்னந்தோப்பு. அந்த இடத்திற்கு குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். 2,600 ஆண்டுகால வரலாற்றை சுமந்து நிற்கும் அந்த நாகரிக நிலத்தைப் பெருமிதத்துடன் தங்களின் குழந்தைகளுக்குக் காண்பிக்கிறார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் உச்சரிக்கும் சொல்லாக, அவர்தம் நினைவிலிருந்து என்றும் அகலாத பெருங்கனவாக மாறியிருக்கிறது, கீழடி.

கீழடிக்குக் கிளம்பலாமா...

Keezhadi Route Map
Keezhadi Route Map
Vikatan Infographics

மதுரை-ராமநாதபுரம் பிரதான சாலையில், அழகன்குளம் துறைமுக நகரையொட்டி இருக்கிறது, கீழடி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த ஆதி நிலத்தின் கிழக்கே சுமார் ஒரு கி.மீ தொலைவில், மணலூர் கண்மாயின் மேற்கரையில் உள்ளது, பள்ளிச்சந்தைத் திடல். அந்த மண்மேட்டில்தான் அகழாய்வு தொடங்கப்பட்டது.

கீழடி தொல்லியல் ஆய்வு - இதுவரை...

Keezhadi
Keezhadi
Vikatan Infographics

வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட இந்த இடத்தில், உழவு செய்யும்போது பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்துவந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து இரண்டரை மீட்டர் உயரத்தில் பாதிப்புக்குள்ளாகாமல் இருந்த இந்த மேடு, அகழ்வு செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன், 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான கொந்தகை, மணலூர் ஆகிய தொல் நிலப்பரப்புகளும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வைகை வறண்ட நதி அல்ல... வரலாற்று நதி

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி முழுமையான கள ஆய்வை நடத்த முடிவு செய்தது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வைகையின் தொடக்கப் பகுதியான வெள்ளிமலையிலிருந்து, அது வங்கக்கடலில் கலக்கும் அழகன் குளம் ஆத்தங்கரை வரை, ஆற்றின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் தொல்லியல்துறை கள ஆய்வை நடத்தியது. சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய இந்தக் குழு, 293 கிராமங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதாவது, 80 சதவிகித கிராமங்கள் வளமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களே மிகச்சிறந்த கண்டுபிடிப்புதான். 256 கி.மீ நீளம் கொண்ட ஒரு நதியில், சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு கிராமம் காலத்தின் மங்காத சுவடுகளைத் தனது தோளில் சுமந்தபடி நிற்கிறது. வைகை வறண்ட நதி அல்ல... வரலாற்று நதி என்பதை நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள்.

விகடன் பிரசுரம் வெளியிட்ட 'வைகை நதி நாகரிகம்' நூலில் சு. வெங்கடேசன்

தென்னந்தோப்பில் தெரிந்த செங்கல் சுவர் 

ஆய்வு நடந்துகொண்டிருக்கும் இடம் முதலில் தென்னந்தோப்பாக இருந்தது. வறட்சியின் காரணமாக மரங்கள் கருகிப் போனதால், செங்கல் சூளைக்கு மணல் எடுப்பதற்காகத் தோண்டியபோது, முதலில் செங்கல் சுவர் ஒன்று காணப்பட்டது. இதையடுத்து மத்திய தொல்லியல்துறை இந்த இடத்தில் அகழ்வு செய்தது. அந்த ஆராய்ச்சியில், பழங்காலத் தமிழர்கள் வாழ்ந்த நகரமைப்பும், உறை கிணறு, செங்கல் சுவர், எலும்புகள் என பலவும் கண்டறியப்பட்டன.

keezhadi
keezhadi

சர்ச்சைகளைத் தொடங்கிவைத்த இரண்டு சந்தேகங்கள்!

1. ``அகழாய்வில், மதம் சார்ந்த எந்த அடையாளமும் கிடைக்காததால், தென்னிந்தியாவில் இருந்த மதமில்லா கலாசாரத்தை ஏற்க முடியாதவர்கள், திட்டமிட்டு கீழடி ஆய்வை முடக்கப் பார்க்கிறார்களோ'' என்ற சந்தேகம் 2017 -ல் பலராலும் எழுப்பப்பட்டது. குறிப்பாக, சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையின் முன்னாள் தலைமைப் பேராசிரியர் வீ.அரசு உள்ளிட்ட கல்வியாளர்கள், இதைக் குறிப்பிட்டே மத்திய அரசின் அலட்சியப்போக்கை தொடர்ந்து விமர்சித்தனர்.

2. பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே தொல்லியல் கண்காணிப்பாளரான அமர்நாத் ராம்கிருஷ்ணா திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது, ஆய்வை முடக்குவதற்காகச் செய்யப்பட்ட ஒன்றாகவே பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஆனால், தொல்லியல் துறையின் விதிகளுக்கு உட்பட்டே இடமாற்றம் செய்யப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை விளக்கம் அளித்தது.

`ஒரு தொல்லியல் வட்டத்தில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய கண்காணிப்பாளரைப் பணியிட மாற்றம் செய்யலாம். அமர்நாத் ராமகிருஷ்ணா, கீழடி அகழ்வாய்வுத் தளத்தை உள்ளடக்கிய பெங்களூர் வட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துவிட்டதால் இட மாற்றம் செய்யப்பட்டார்' என்று மத்திய தொல்லியல் துறை தெரிவித்தது.

'கீழடி அகழாய்வுப் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்று விரும்புவதால், தனது இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும்' என்கிற அமர்நாத் ராமகிருஷ்ணாவின் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டார். இந்தக் கோரிக்கை பின் நிராகரிக்கப்பட்டது. இது, சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே இருந்தது.

keezhadi
keezhadi
Vikatan

1939-லேயே கீழடிக்காக ஒலித்த குரல்!

'வைகை நதிக்கரை, தாமிர பரணி நதிக்கரையை ஆய்வு செய்தால், சிந்து சமவெளிக்கு இணையான அல்லது சிந்து சமவெளியோடு தொடர்புடைய நாகரிகம் கிடைக்கும்' என 1939-ல் கூறினார், கே.என்.தீக்ஷித். அவர், மொகஞ்சதாரோ அகழாய்வில் பங்குபெற்றவர். 1937 முதல் 1944 வரை இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India) நிறுவனத்தின் தலைமை இயக்குநராக இருந்தவர்.

"சிந்து சமவெளி அகழாய்வுகளில் முத்துகள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் சில நதிகளிலும் முத்துக்குளித்தல் நடந்துள்ளன. அதனால், சிந்து சமவெளிக்கும் தமிழகத்துக்கும் நெருக்கமான பந்தமிருக்கலாம். வைகை, தாமிரபரணி நதிக்கரைகளில் அகழாய்வு செய்துபார்த்தால், புதிய வரலாறு பிறக்கக்கூடும்" என்று அப்போதே சொன்னார் கே.என்.தீக்ஷித்.

கே.என்.தீக்‌ஷித் குறித்துப் பேசுகிறார் சிந்து சமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்!  

கீழடி ஆய்வு - தொடக்கப்புள்ளிகள்!

பேராசிரியர் கரு.முருகேசன்

கீழடி அகழாய்வுக்காக நிலம் வழங்கியவர்களில் பேராசிரியர் கரு.முருகேசனும் ஒருவர். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல், அகழாய்வுக்குத் தனது நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கூறியவர்.

" விருப்பப்பட்டு நிலம் கொடுத்தேன்"

ஆசிரியர் பாலசுப்ரமணியன்

பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கீழடியில் ஆய்வுசெய்ய வேண்டும் என்று நெடுங்காலமாகக் குரல்கொடுத்துவந்தவர்.

"1974-ல், கீழடியில் பொம்மை, பானை ஓடு கண்டெடுத்தோம்''

வழக்கறிஞர் கனிமொழி மதி

 • உயர் நீதிமன்றத்தில், கடந்த 2017-ம் ஆண்டு கீழடியில் அகழாய்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணா தொடர்ந்து கண்காணிப்பாளராகப் பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 • வழக்கு, கடந்த 2017 செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.

 • உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு, மாநில அரசு மர்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

வழக்கறிஞர் கனிமொழி மதி
வழக்கறிஞர் கனிமொழி மதி

வழக்கு தொடர்ந்தது ஏன்?

''கீழடி ஆய்வைத் தொடர்வதன்மூலம் கூடுதலான பொருள்கள் கிடைக்கும் என்பது என்னுடைய யூகமாக இருந்தது. நிறைய பொருள்கள் ஏற்கெனவே அகழ்வாராய்ச்சியில் நமக்கு கிடைத்திருந்தன. பானை ஓடுகள் கிடைப்பது அகழ்வாராய்ச்சியில் முக்கியமானது. மனித நாகரிகம் அங்கிருந்ததை முடிவுசெய்வது இந்தப் பானை ஓடுகள்தாம். ஓர் இடத்தில் பானை ஓடுகள் கிடைத்தாலே ஆராய்ச்சியைத் தொடர வேண்டும்.

நான், பொதுநல வழக்கு போடுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, மூன்று கட்ட அறிக்கைகள் வெளியிடவில்லை என்பதும்தான்'' என்றார், வழக்கறிஞர் கனிமொழி மதி.

தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா

 • கீழடி அகழ்வாராய்ச்சியில், 2013-ம் ஆண்டு தொல்லியல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2015 முதல் இவர் தலைமையில் இரண்டு கட்ட ஆய்வுகள் நடைபெற்றன. வரலாற்று ஆய்வாளர்கள் இவரது பணியைப் பாராட்டினர்.

 • "1970 மற்றும் 2005-ல் நடைபெற்ற ஆய்வுகளுக்குப் பிறகு, மதுரையைப் பற்றியோ தமிழக நதிகளைப் பற்றியோ விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, ஆய்வு என் தலைமையில் நடைபெறுவது பெருமையாக இருக்கிறது" என்று அந்தத் தருணத்தில் குறிப்பிட்டார் அமர்நாத் ராமகிருஷ்ணா.

 • இதுவரை கீழடியில் சுமார் 5,820 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 • 2-ம் கட்ட ஆய்வின் முடிவில், கீழடி நாகரிகம் 2,200 ஆண்டுகள் பழைமையானது என்று அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கை வெளியிட்டார்.

 • மூன்றாம் கட்ட ஆய்வு தொடங்கிய நிலையில் 2017-ம் ஆண்டு, அவர் அஸ்ஸாம் மாநிலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

"இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும்!"

தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஐஏஎஸ்

மாநில தொல்லியல் துறையின் ஆணையாளராகக் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பொறுப்பேற்றார். மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதிபெற்று, ஜூன் மாதம் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கியது. செப்டம்பர் 20-ல் நான்காம் கட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

"கீழடிக்கும் ஜல்லிக்கட்டுக்கும் தொடர்பு இருக்கிறது"

எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

'வைகை நதி நாகரிகம் ', 'கீழடி' என இரண்டு நூல்களை எழுதியுள்ளார். கீழடி தொடர்பாக, தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வருபவர். வெகுஜன மக்கள் மத்தியில் இவரது எழுத்துகள்தான் கீழடி தொடர்பான தகவல்களைப் பரவலாகக் கொண்டு சேர்த்தது.

மத்திய மாநில அரசுகள் என்ன செய்ய வேண்டும்?  - எழுத்தாளர் சு.வெங்கடேசன்

 • கீழடியில் முதலாம் ஆண்டு அகழ்வாராய்ச்சி முடிந்தவுடன், இரண்டாம் ஆண்டு ஆராய்ச்சி செய்ய அனுமதி தரவே மத்திய அரசு யோசித்தது. பல போராட்டங்களுக்குப் பிறகு, இரண்டாம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடந்துமுடிந்தது. மூன்றாம் ஆண்டும் அனுமதி தர மறுத்தது மத்திய அரசு. அந்தக் காலகட்டத்தில்தான், 'ஜல்லிக்கட்டு' போராட்டத்திற்காகத் தமிழகமே கிளர்ந்தெழுந்தது. அதனால் வேறு வழியில்லாமல், மூன்றாம் ஆண்டு அனுமதி வழங்கியது மத்திய அரசு. ஆனால், அதுவரை அந்த அகழாய்வின் தலைவராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை மாற்றிவிட்டு, ஶ்ரீராம் என்பவரைத் தலைவராக நியமித்தனர். அவர் பெயரளவிற்கு ஒரு அகழாய்வை நடத்திவிட்டு கீழடியில் எந்தவொரு கட்டுமானத்தின் தொடர்ச்சியும் இல்லை. எனவே, அகழாய்வைத் தொடரவேண்டிய அவசியமில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டு, கீழடி அகழ்வாராய்ச்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

 • குஜராத், வாட்நகரில் அகழ்வாராய்ச்சி நடத்தி, அதில் கிடைத்த பொருள்களைக் கொண்டு உலக அளவில் ஒரு மெய் நிகர் அருங்காட்சியகம் அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்தின் சனோலி பகுதியில் உள்ள 28 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. ஆனால், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் பாதுகாக்கப்பட்ட இடமாக கீழடியை அறிவியுங்கள், அங்கு அருங்காட்சியகம் அமையுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். அதற்கெல்லாம் மத்திய அரசு செவி சாய்க்கவேயில்லை.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
 • கீழடியில், ஆராய்ச்சி எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். முதலில் ஆராய்ச்சி செய்வதற்கு கீழடியைப் பாதுகாக்க வேண்டும். சங்க கால வாழ்விடங்களின் தடயங்களும், எச்சங்களும் அதிகம் காணப்படும் பகுதி கீழடி. எனவே, கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 5 கிராமங்களை 'சங்ககால வாழ்விடப் பகுதி'யாக மத்திய மாநில அரசுகள் உடனே அறிவிக்க வேண்டும்.

 • பாதுகாக்கப்பட்ட இடமாக கீழடியைஅறிவிக்க வேண்டும் என்றும், அங்கு சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்றும், மத்திய கலாசார துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய கலாசாரத் துறை அமைச்சர், " மாநில அரசு இதுதொடர்பாக சரியான முன்முடிவைக் கொடுத்தால் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். தொடர்ச்சியான அரசியல் அழுத்தத்தின் மூலமாக மட்டுமே இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும்.

கீழடி
கீழடி
 • இந்தியாவின் பூர்வகுடி மக்கள், திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். '24 திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான்' என்கிறார், கால்டுவெல். இன்றைக்கும் ஒடிசாவில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழியில், 40 சதவிகித சொற்கள் தமிழ்ச் சொற்கள்தான். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளிலும் நிறைய சொற்கள் தமிழ்ச் சொற்களாகத்தான் இருக்கும். வைகை நதிக் கரையில் ஒரு நாகரிகம் இருக்கிறது என்றால், ஒட்டுமொத்த இந்திய நாகரிகங்களின் தாய்மடி கீழடியாகத்தான் இருக்கும்.

 • உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், கீழடியைத் தங்கள் தாய்மடியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். கீழடியைப் பாதுகாப்பதும், அங்கு ஆராய்ச்சியைத் தொடர்வதும்தான் நாடாளுமன்ற உறுப்பினராக என் முதல் பணி. நம் தமிழ் மக்கள் நிச்சயமாக கீழடியைக் கைவிட மாட்டார்கள்.

உலகமே கீழடி பற்றிப் பேசுகிறது - கீழடி மக்கள் என்ன பேசுகிறார்கள்?

கீழடிக்கும் சங்ககாலத்திற்கும் என்ன தொடர்பு? - பேராசிரியர் பாரதிபுத்திரன்

 • சங்ககாலம் என்பது தொல்லியல் சார்ந்து நம் ஆய்வாளர்கள் கி.மு 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி 3-ம் நூற்றாண்டு வரையிலான 500 ஆண்டுகள் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது கிடைத்துள்ள பொருள்கள், இன்னும் 300, 400 ஆண்டுகள் பழைமையானவை எனச் சொல்கிறது. அசோகருடைய காலம் கி.மு 3-ம் நூற்றாண்டு என வரையறுத்திருக்கிறார்கள். அப்படிப் பார்க்கையில், அசோகர் காலத்துக்கு முன்பே தமிழில் எழுத்துருக்கள் இருந்திருப்பதாகத் தெரிகிறது.

 • அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் இருக்கிற ஒப்புமையைப் பார்க்கிறபோது, சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது எனக் கருதவைக்கிறது. தமிழர் நாகரிகம், நகர நாகரிகமாக இருக்கிறது. ஆய்வில் கிடைத்த உறைகிணறுகள், சுகாதாரப் போக்குகள் ஆகியவற்றைக் காணும்போது, 'ஹரப்பா', 'மொகஞ்சதாரோ' போல ஒரு முதிர்ச்சியான நாகரிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

 • தமிழர்கள் கப்பல் கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப அறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என இதன்மூலம் அரிய முடிகிறது. கடல் மற்றும் இயற்கை சார்ந்த புரிதல் தமிழர்களுக்கு அதிகம் என்பதையே ஆய்வில் கிடைத்த தானியங்கள், பானை ஓடுகளில் கிடைத்த குறியீடுகள் காட்டுகின்றன. மேலும், இவை பாண்டியர்களின் தலைநகராக இருக்கக்கூடுமோ என்ற தகவல் இதை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றுகிறது. ஏனென்றால், பாண்டியனின் தலைநகரான மதுரைக்கு மணலூர், ஆலவாய் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. எனவே, அந்த வகையில் நிரூபிக்கப்பட்டால், தென்பாண்டிய வரலாறு இன்னும் பழைமையாக இருக்கும். தமிழ் எழுத்துரு குறித்த தெளிவான முடிவு கிடைத்திருக்கிறது. புழங்கு பொருள்களின்மீது தம் பெயரை எழுதிவைக்கும் முறையைப் பற்றி ஏற்கெனவே ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுவார். அந்த வகையில், எளிய மக்களும் எழுத்தறிவுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய ஒன்று. இவற்றையெல்லாம் வைத்து பார்க்கிறபோது, கீழடி மிகத் தொன்மையான, சிறப்பான நாகரிகம் என்பது தெளிவாகிறது.

கீழடி பற்றிய தமிழ்நூல்கள்!

 • 'கீழடி - மதுரை சங்ககால தமிழர் நாகரிகம் ஓர்- அறிமுகம்' - காந்திராஜன் - கருத்து-பட்டறை வெளியீடு

 • 'தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் - கீழடி வரை' - சி.இளங்கோ- அலைகள் பதிப்பகம்

 • 'வைகை நதி நாகரிகம்' - சு.வெங்கடேசன்- விகடன் பிரசுரம்

 • ' கீழடி - தமிழ் இனத்தின் முதல் காலடி' - நீ.சு.பெருமாள் - மேன்மை வெளியீடு

 • 'ஆதிச்சநல்லூர்- கீழடி மண் மூடிய நாகரிகம்' - எம். தனசேகரன் ( அமுதன்) - தினத்தந்தி வெளியீடு

கீழடி பற்றிய புத்தகங்கள்
கீழடி பற்றிய புத்தகங்கள்

உங்கள் மாவட்டத்தில் அகழாய்வு நடந்துள்ளதா? மேப்பை க்ளிக் பண்ணுங்க! 

தமிழர் வரலாற்றில் கீழடி தந்த புதிய வெளிச்சம்  - ஆளுமைகளின் ஆதரவுக் குரல்கள்!

மனிதன் தனது வேர்களைத் தேடி பயணிக்கையில், அது சரித்திரத்தின் சில பக்கங்களை மாற்றி புதிய வரலாற்றைக் கண்டடையும். கீழடி எழுதுவது, அப்படியொரு மகத்தான வரலாற்றைத்தான். அது இன்னும் நீளும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு