Election bannerElection banner
Published:Updated:

மதுரை: தூய தமிழ்ப் பெயர்களுடன் மாலைக்கோயில் கல்வெட்டு... சொல்லும் செய்தி என்ன?

கல்வெட்டு
கல்வெட்டு

மதுரை தே.கல்லுப்பட்டி அடுத்த கோபாலபுரத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழைமையான மாலைக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களைத் தியாகிகளாகப் போற்றிய கலாசாரம் நம்முடையது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான்.

அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபடப்படுகிறது. அதேபோன்று போரிலோ, வேறு காரணங்களினாலோ கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த மனைவிக்கு அமைக்கப்பட்ட சதிக்கற்களை மாலைக்கோயில்கள் என மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் வணங்கி வருகிறார்கள். இந்நிலையில் மதுரை அருகே தூய தமிழ்ப் பெயர்களுடன் 17-ம் நூற்றாண்டு மாலைக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் து.முனீஸ்வரன்
பேராசிரியர் து.முனீஸ்வரன்

மதுரை தே.கல்லுப்பட்டி அடுத்த கோபாலபுரத்தில் தூய தமிழ்ப்பெயர்கள் உள்ள கல்வெட்டுடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழைமையான மாலைக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன் தலைமையில் தேவதாஸ் பாண்டியன், குபேந்திரன், நாகபாண்டி, பழனிமுருகன், மணி ஆகியோர் கள ஆய்வு செய்தபோது, வயல்வெளியில் இந்த மாலைக்கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பேராசிரியர் து.முனீஸ்வரன், "சதிக்கல்லில் கணவனுடன் மனைவியும் இருப்பது போன்றோ, தனியாக பெண் மட்டும் இருப்பது போன்றோ சிற்பம் அமைக்கப்பட்டிருக்கும். இப்பெண் சுமங்கலியாக இறந்தவள் என்பதை காட்ட கையை உயர்த்தி, அதில் வளையல் உள்ளிட்ட அணிகலங்கள் அணிந்தவளாகவும் காணப்படுவாள். பெண்ணின் உருவம் ஆணின் உருவத்தை விட சிறியதாகவோ அல்லது கைகள் மட்டுமே இருக்கும் அமைப்பு சில சிற்பங்களில் காணப்படுகிறது. இத்தகைய சதிக்கல்லை குடும்பத்தினருடன் ஊராரும் வழிபடுவது வழக்கம். இவற்றை மாலையீடு, மாலையடி, தீப்பாஞ்சம்மன், மாலைக்காரி, சீலைக்காரி என்றும் அழைக்கிறார்கள்.

இந்நிலையில் கோபாலபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சதிக்கல் 2½ அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ளது. இதில் ஆண் மற்றும் பெண்ணின் தலையிலுள்ள கொண்டை சற்று சரிந்துள்ளது. ஆணின் வலது கையில் உள்ள வாள் கீழ் நோக்கி உள்ளது. அணிகலன்களுடன் காலை மடக்கித் தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் ஆணும், வலது கையை உயர்த்தி பெண்ணும் காணப்படுகின்றனர்.

கல்வெட்டு | மாலைக்கோயில்
கல்வெட்டு | மாலைக்கோயில்

இது மாலைக்கோயில் என்ற பெயரில் தற்போதும் மக்கள் வழிபாட்டில் உள்ளது.

இதன் மேல், நாசிக்கூடுகளுடன் உள்ள கபோதம் பகுதியில் 'புகள் கொட்ட நாமகன் சிவை மாலை' என 3 வரிகளில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் உள்ள ஆண் நாமகன் என்றும், பெண் சிவை என்றும், இக்கல் அவர்கள் நினைவாக வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிய முடிகிறது. அவர்கள் புகழ் கொட்டட்டும் என கல்வெட்டு சொல்கிறது. தூய தமிழில் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிவை என்பது பார்வதியைக் குறிக்கும் சொல் ஆகும். சதி, மாலை ஆகிய சொற்களுக்கு பெண் என்றும் பொருள் உண்டு. தென் தமிழ்நாட்டில் சதி என்ற சொல்லுக்கு மாற்றாக மாலை என்ற தூய தமிழ்ச் சொல்லே கல்வெட்டுகளிலும் மக்கள் பயன்பாட்டிலும் இருந்ததை அறிய முடிகிறது. சிவை என்றால் பார்வதி, காளி என்பது பொருள்.

இப்பகுதியில் வேளாம்பூர், மதவநாயக்கனூர், திருஉண்ணாட்டூர் போன்ற ஊர்கள் இருந்து அழிந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றன. இது வேளாண் பகுதியாகவும், வணிகப்பகுதியாகவும் இருந்துள்ளது. இப்பகுதியில் இருந்த ஒரு போர் வீரனாக நாமகன் இருக்கலாம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு