Published:Updated:

"தேசிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் ஆதிச்சநல்லூர். விரைவில் அறிவிப்பு!" - மத்திய அமைச்சர் தகவல்!

ஆதிச்சநல்லூர்
News
ஆதிச்சநல்லூர்

”இந்தியாவில் 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆதிச்சநல்லூரும் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது” என மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். ’உலகில் நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ என பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது சிந்து சமவெளிக்கும் முந்தைய நாகரிகம் என வங்க தேசத்து அறிஞர் ’பானர்ஜி’ குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், ’மெசபடோமியா’ பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும், சில ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு முதன்முதலாக 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு
ஆதிச்சநல்லூர் அகழாய்வு

’ஜாகோர்’ என்பவர் இங்கு ஆகழாய்வு செய்து அதில் கிடைத்த பொருள்களை, ஜெர்மன் நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து பல நாடுகளைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர்களின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை தங்கள் நாட்டிற்கே கொண்டு செல்லும் அளவிற்கு திறந்த மடமாக இந்தியா இருந்தது. 1902-ல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்சாண்டர் இரியா இங்கு அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டார். கடந்த 2004-ல் இங்கு மத்திய தொல்லியல்துறையின் அகழாய்வு நடைபெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இங்கு நடத்தப்பட்ட 4வது கட்ட ஆய்வில் 169 முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகுதான் அகழாய்வுப் பகுதியைச்சுற்றி கம்பி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், இரண்டு முதுமக்கள் தாழிகளை கார்பன் சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு அனுப்பியதில் ஒன்று ’கி.மு 905’, ’மற்றொன்று கி.மு 791’-ஐச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் ஒரு பகுதி
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் ஒரு பகுதி

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை. அதில், ஆதிச்சநல்லூர் நாகரிகம் 2,950 ஆண்டுகளுக்கு முந்தையது எனவும், அதில் ’சிசு முதல் வயதானவர்கள் வரை’ தனித்தனியாக தாழிகளுக்குள் வைக்கப்பட்டு புதைக்கப்பட்டதையும், அப்போதே பட்டு, பருத்தி ஆடைகள் தயார் செய்யபட்டதை அதில் கிடைத்த துணிகளின் மூலம் அறிய முடிகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முந்தைய 2020-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ’ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து புதிதாக திருச்சியில் தொல்லியல் துறைக்கு மண்டல அலுவலகம் திறக்கப்பட்டது. அதற்கு முதல் கண்காணிப்பாளராக அருண்ராஜ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு ஆதிச்சநல்லூர் பணிகள் மிகவும் துரிதப்படுத்தப்பட்டது. அவர் தலைமையிலான குழுவினர், கடந்த டிசம்பர் 11-ம் தேதி ஆதிச்சநல்லூரில் வந்து புதிதாக உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க இடத்தை தேர்வு செய்து, அந்த இடங்களை ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.

ஆதிச்சநல்லூர் அகழ்வுப்பணி ஆய்வு
ஆதிச்சநல்லூர் அகழ்வுப்பணி ஆய்வு

தொடர்ந்து கடந்த டிசம்பர் 26-ம் தேதி அக்குழு, மீண்டும் ஆதிச்சநல்லூருக்கு வந்து ஆய்வை நடத்தியது. இதற்கிடையில், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக இந்த ஆய்வுப் பணிகள் முடங்கின. இருப்பினும், மாநில தொல்லியல்துறையினர் கடந்த பிப்ரவரி 26 முதல் அகழாய்வு பணியை தொடங்கியுள்ளனர். இந்த அகழாய்வு பணி, வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறவுள்ளது.

இதற்கிடையில் இரண்டு நாள்களுக்கு முன்பு, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் தொல்லியல் பணி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தார். ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்ட அவர், ”ஆதிச்சநல்லூரில் அமைய உள்ள அருங்காட்சியகம், உலக தரம் வாய்ந்த அருங்காட்சியமாக அமையும்.

வில்சன் -  மாநிலங்களவையின் தி.மு.க உறுப்பினர்
வில்சன் - மாநிலங்களவையின் தி.மு.க உறுப்பினர்

ஐரோப்பாவில் உள்ள ’சைட் மியூசியம்’ போலவே இங்கும், அகழாய்வு நடக்கும் இடத்தின் மீது கண்ணாடி போர்த்தப்பட்டு, அதன் மீது மக்கள் நின்று உட்பகுதியை பார்வையிடும் படியாக வடிவமைக்கப்படும். ஏற்கனவே இங்கு கண்டெடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும், இங்கே அமையவுள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த ஆவண செய்யப்படும். மத்திய தொல்லியல் துறையின் உயர் அதிகாரிகள் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு, அருங்காட்சியகம் அமைக்கும் பணி மத்திய அரசின் ஒப்புதலுடன் துவங்கும்” என்றார்.

இந்நிலையில், தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ”தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, “தமிழகத்தில் உள்ள 412 நினைவுச் சின்னங்கள் உட்பட, இந்தியாவில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் பராமரிக்க, இந்தாண்டு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ‘ஆதிச்சநல்லூர்’ நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழகத்தில் 7 தேசிய நினைவுச் சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த மத்திய தொல்லியல்துறையின் தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி
ஆதிச்சநல்லூரில் சைட் மியூசியம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்த மத்திய தொல்லியல்துறையின் தென்மண்டல இயக்குநர் மகேஸ்வரி

அவற்றைப் புனரமைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுவரை, இந்தியாவில், 21 நினைவுச்சின்னங்கள் மட்டுமே தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்க, அடையாளம் காணப்பட்டது, தற்போது அந்தப் பட்டியலில் ஆதிச்சநல்லூரும் இடம்பெற்றுள்ளது” எனப் பதிலளித்தார்.

ஆதிச்சநல்லூர் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.