Published:Updated:

மரக்கன்று நட தோண்டிய குழி... உள்ளே எலும்புகளோடு கிடைத்த முதுமக்கள் தாழி!

முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி

100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது, பணியாளர்கள் ஒரு பகுதியில் குழி தோண்டும்போது சத்தம் வந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடுவதற்காக குழி தோண்டியபோது, முதுமக்கள் தாழி எலும்புக்கூடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழியை அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளியின் மாணவ, மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி

நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகில் உள்ள கொந்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி தொடர் விடுமுறை விடப்பட்டிருந்ததால், பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பல மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகின. இந்த நிலையில், அரசு உத்தரவையடுத்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அந்த வகையில், இந்தப் பள்ளியும் திறக்கப்பட்டது.

முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி

பள்ளி திறந்தவுடன் காய்ந்து கருகிபோன மரக்கன்றுகளுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் குழி தோண்டப்பட்டது. அப்போது, பணியாளர்கள் ஒரு பகுதியில் குழி தோண்டும்போது சத்தம் வந்துள்ளது. இதனால், அந்த இடத்தில் கவனமாகக் குழியைத் தோண்டினர். அப்போது, அந்தக் குழிக்குள் பெரிய அளவில்பானை ஒன்று இருப்பதை பார்த்துள்ளனர்.

நாமக்கல்: கோயில் திருப்பணிக்குத் தோண்டிய குழி... உள்ளே கிடைத்த பழைமையான நந்தி சிலை!

அதைக் கண்டு ஆச்சரியமான ஆசிரியர்களும், பணியாளர்களும், அந்தப் பானையை வெளியே எடுத்தனர். பின்னர் பானைக்குள் பார்த்தபோது, மண்ணுடன் எலும்புக்கூடுகள் மக்கிய நிலையில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, உடனடியாக நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகரனிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், கொந்தளம் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை பழனிசாமி ஆகியோர், முதுமக்கள் தாழியை பார்வையிட்டு, அதை பத்திரமாக மீட்டு கொந்தளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். முதுமக்கள் தாழி பள்ளி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி தெரியவந்ததும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் முதுமக்கள் தாழியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

தாழிக்குள் இருந்த எலும்புகள்
தாழிக்குள் இருந்த எலும்புகள்

இந்த நிலையில், சேலத்தில் இருந்து தொல்லியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர்களும், அதிகாரிகளும் வந்து இதை ஆய்வுசெய்தபிறகே, இது எந்த நூற்றாண்டில் உள்ள முதுமக்கள் தாழி என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், "மிகவும் பழைமையான முதுமக்கள் தாழியாக இது தெரிகிறது. அதனால், தொல்லியல் துறையினர், மேற்கொண்டு இந்தப் பள்ளி வளாகத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு